புகாரி சிந்திய ரத்தம்!

கடந்த வியாழக்கிழமை காஷ்மீரின்

கடந்த வியாழக்கிழமை காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால்செளக்குக்கு அருகிலுள்ள பகுதியில் "ரைசிங் காஷ்மீர்' இதழின் ஆசிரியர் சுஜாத் புகாரி தீவிரவாதிகளின் குண்டுகளுக்குப் பலியாகியிருக்கிறார். 50 வயதான புகாரி தனது அலுவலகத்திலிருந்து இப்தார் நோன்பு திறப்புக்காக கிளம்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. நரேந்திர மோடி அரசு அறிவித்திருந்த தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு மாத கால ரம்ஜான் சமாதான அறிவிப்பு முடிவடைவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, காஷ்மீரத்தின் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரியும், அவரது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி இருப்பது, தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய செயல் என்பதில் ஐயப்பாடு இல்லை. 
சுஜாத் புகாரி காஷ்மீரத்தின் முக்கியமான நடுநிலைவாதிகளில் ஒருவர். அவர் தீவிரவாதிகளின் வன்முறையை கண்டித்தது போலவே, இந்திய அரசின் ராணுவமும் காவல்துறையும் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அதையும் விமர்சிக்கத் தயங்காதவர். காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு கருத்துகளைக் கொண்ட எல்லா அமைப்புகளுடனும் அரசியல் கட்சிகளுடனும் பத்திரிகையாளர் என்கிற முறையில் தொடர்பு வைத்திருந்தவர். 
இந்திய அரசுக்கும் காஷ்மீர பிரிவினைவாதக் குழுக்களுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சுஜாத் புகாரி பல்வேறு வகைகளில் உதவி புரிந்து வந்திருக்கிறார். தீவிரவாதத்துக்கும் ஊடுருவலுக்கும் முடிவு கட்டும் விதமாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற கருத்தை பலமுறை முன்வைத்திருக்கிறார் அவர்.
1990 முதல் இதுவரை, தங்களது பணியில் முறையாக செயல்பட்ட, மக்களின் மனநிலையை அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் தங்களின் எழுத்துகளின் மூலம் படம் பிடித்துக் காட்டிய 19 பத்திரிகையாளர்கள் காஷ்மீரில் தங்களது உயிரை பலி கொடுத்திருக்கிறார்கள். இப்போது அந்த வரிசையில் சுஜாத் புகாரியின் பெயரும் சேர்ந்து விட்டிருக்கிறது. 
சுஜாத் புகாரியின் படுகொலை ஈகைப் பெருநாளுக்கு முந்தைய நாளில் நடைபெற்றிருப்பதற்கு சில காரணங்கள் உண்டு. ரம்ஜான் நோன்பு மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்து, மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்த பரவலான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இந்தப் படுகொலை நடந்திருக்கிறது. அரசின் சமாதான முயற்சி தடம்புரள வேண்டும் என்பதில் தீவிரவாதிகள் குறியாக இருந்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு மாதமாக மத்திய அரசு தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ரம்ஜான் நோன்பின் காரணமாக நிறுத்தியிருந்தாலும்கூட, தீவிரவாதிகள் அதே போன்ற உணர்வைப் பிரதிபலிக்கவில்லை. கடந்த ஒரு மாதம் பாகிஸ்தானின் துணையுடன் தீவிரவாதிகள் காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்கும் எதிரான தீவிரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார்கள். புனித ரம்ஜான் மாதத்தில் காஷ்மீரத்தில் ராணுவமும் காவல்துறையினரும் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றதால் தீவிரவாதத் தாக்குதல்கள் இரண்டு மடங்கு அதிகரித்தன என்பதுதான் உண்மை. 
இப்போது தீவிரவாதிகள் எதிர்பார்த்ததுபோலவே சுஜாத் புகாரியின் படுகொலையைத் தொடர்ந்து மத்திய அரசு மீண்டும் அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை தொடர முடிவெடுத்திருக்கிறது. இது சாதாரண காஷ்மீர் குடிமக்களை மீண்டும் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நித்திய கண்டம் பூரண ஆயுசாகத் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்போகிறது. பஞ்சாயத்துத் தேர்தல்கள் ஒத்திப்போடப்படும். அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் தள்ளிப்போடப்படும். ஊரக வளர்ச்சி, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முடக்கப்படும். தீவிரவாதிகள் சுஜாத் புகாரியைப் படுகொலை செய்ததன் நோக்கம் நிறைவேறப்போகிறது.
தீவிரவாதிகளின் திட்டமே அவர்களும் இந்திய அரசும் என்கிற நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். இதற்கு நடுவில் காஷ்மீரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுவதையோ, எந்தவித சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையோ அவர்கள் விரும்பவில்லை. இந்த நிலையில், நடுநிலையுடன் செயல்படும் ஊடகங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாவதில் வியப்பில்லை.
அதனால்தான் தீவிரவாதிகள் பள்ளிக்கூடங்களையும் செயல்பட அனுமதிப்பதில்லை. அதன்மூலம் குழந்தைகள் படிக்காமல் தெருவில் இறங்கி அவர்களுடன் போராடத் தூண்டப்படுகிறார்கள். வருங்கால காஷ்மீரத்திற்கான எல்லா வளர்ச்சித் திட்டங்களும் முடக்கப்படுகின்றன. வருங்காலம் இல்லாமல் வேலைவாய்ப்பற்ற இளைஞர் கூட்டம் மேலும் மேலும் அதிகரிப்பது, தங்களுக்குச் சாதகமாக மாறும் என்பது தீவிரவாதிகளுக்குத் தெரியும்.
காஷ்மீரத்தில் தனிநாடு கோரிக்கையாளர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால், அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதக் குழுக்கள் பாதிக்கின்றன என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் காஷ்மீரத்தில் நடந்த உள்ளாட்சி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் கலந்து கொண்டு வாக்களித்திருக்கிறார்கள். ராணுவத்தாலும் காவல்துறையாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் காஷ்மீரத்திலிருந்து இந்திய ராணுவத்தை விலக்கிக் கொள்வது என்கிற நிலை ஏற்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதும் உண்மை. 
அச்சத்தின் பிடியில் இருக்கும் காஷ்மீர மக்களுக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் மத்திய அரசின் கடமை. அதற்காகத்தான் சுஜாத் புகாரி ரத்தம் சிந்தியிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com