முனைப்பின்மைதான் காரணம்!

மத்திய அரசின் நீதி ஆயோக் முதல் முறையாக மாநிலங்களுக்கான நீர் மேலாண்மை குறியீட்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நீதி ஆயோக்கின் துணைத் தலைவர்

மத்திய அரசின் நீதி ஆயோக் முதல் முறையாக மாநிலங்களுக்கான நீர் மேலாண்மை குறியீட்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் முன்னிலையில் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையின்படி, தண்ணீரின் தரக் குறியீட்டில் இந்தியா 122 நாடுகளில் 120-ஆவது நாடாக இருக்கிறது. 
2030-க்குள் இந்தியாவின் தண்ணீர் தேவை இரு மடங்கு அதிகரிக்கும் என்றும், அதை எதிர்கொள்ள முடியாத நிலையை நாம் எட்டக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த அறிக்கை. இந்தியாவில் கிடைக்கும் 70% தண்ணீர் மாசுபட்டிருக்கிறது. குடிப்பதற்கு தகுதியற்றதாகக் காணப்படுகிறது. பாதுகாப்பான குடிநீருக்கு வழியில்லாததால் மாசுபட்ட குடிநீரை அருந்தும் 2 லட்சத்துக்கும் அதிகமான பேர் ஆண்டுதோறும் மரணிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது புள்ளிவிவரம். 
இந்தியாவிலுள்ள வீடுகளில் நான்கில் மூன்று பகுதியினருக்கு பாதுகாக்கப்பட்ட, சுத்திகரித்த குடிநீருக்கான வசதி சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் இன்னும் தரப்படவில்லை. கிராமப்புறங்களில் 84% மக்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் முறை இன்னும் தரப்படாத நிலை காணப்படுகிறது. 
இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான பேர் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால், 2030-இல் இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 40% தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறது நீதி ஆயோக் வெளியிட்டிருக்கும் அறிக்கை.
அந்த அறிக்கையின்படி குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் நீர் மேலாண்மையில் முன்னிலை வகிக்கின்றன. அதே நேரத்தில், ஜார்க்கண்ட், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பிகார், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் நீர் மேலாண்மை குறித்த போதுமான விழிப்புணர்வோ, அக்கறையோ இல்லாத நிலைதான் காணப்படுகிறது.
இந்தியாவில் கிடைக்கும் மொத்த தண்ணீரில் 80 சதவீதம் வேளாண்மைக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால், வேளாண் வழிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நாம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைக்கு விடை காண முடியும். இந்திய வேளாண்மை முறையில் சிக்கனமாகத் தண்ணீரை பயன்படுத்துவதில்லை என்கிற குறைபாடு இருக்கிறது. சீனா, பிரேஸில் போன்ற நாடுகள் ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு நாம் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, கோதுமை, பருப்பு வகைகள் ஆகிய பயிர்களுக்கு பயன்படுத்தும் தண்ணீரைவிட, நான்கு மடங்கு அதிகம் தண்ணீர் இந்திய விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. 
அகில இந்திய அளவில் நிலைமை இது என்றால், நீதி ஆயோக்கின் நீர் மேலாண்மை குறியீட்டு அறிக்கையின்படி தமிழ்நாடு 7-ஆவது இடத்தில்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு 6-ஆவது இடத்தில் இருந்த தமிழகம், 7-ஆவது இடத்திற்கு வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். நம்மிடமிருக்கும் பாசன வசதிகளையும், விவசாய வழிமுறைகளையும் ஒப்பிடும்போது இமயமலையைச் சாராது இருக்கும் 17 மாநிலங்களில் தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் பஞ்சாபுக்கு அடுத்தபடியாக நீர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலமாக இருந்தும்கூட. 
2020-க்குள் நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசுபட்ட 21 இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்றாக இருக்கக்கூடும் என்கிறது நீதி ஆயோக் அறிக்கை. இதற்கு முக்கியமான காரணம், மாநகரத்தில் எல்லா நீர்நிலைகளிலிருந்தும் இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதுதான். 25% ஆக்கிரமிப்புகள்தான் அகற்றப்பட்டிருக்கின்றன. ஏனைய 75% ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர் நிலைகள் முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்புகளால் பரப்பளவு குறைந்துவிட்ட நீர்நிலைகள் அதிகமாக மாசுபட்டிருக்கின்றன. 
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆகாஷ் கங்கா அறக்கட்டளை சார்பில் கோரப்பட்ட ஆலோசனைகளின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மழை நீர் சேகரிப்பு ஓரளவுக்கு நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கு பயன்படுகிறது என்றாலும்கூட, முந்தைய முனைப்பு தொடருகிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது.
இப்போதைக்கு சென்னைக் குடிநீர் வாரியத்தின் ஒரே நம்பிக்கை விரைவிலேயே செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இரண்டு கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகள்தான். ஜெர்மனியின் உதவியுடன் நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் தண்ணீரும், ஜப்பான் நிறுவனத்தின் உதவியுடன் 40 கோடி லிட்டர் தண்ணீரும் இந்த இரண்டு கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகளும் செயல்படத் தொடங்கினால் சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்கு கிடைக்கும். ஆனால், அவை செயல்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகக்கூடும். 
சரியான நேரத்தில் நீதி ஆயோக் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் விழித்துக்கொண்டு, இந்தியா எதிர்கொள்ள இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டாக வேண்டும். நிலைமையை எதிர்கொள்வது கடினம் அல்ல. அதற்கு பொருளாதார உதவிகள், தொழில்நுட்பம், கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டாக வேண்டும். 
இந்தியா தண்ணீர்த் தட்டுப்பாடான நாடாக இருக்கலாம், ஆனால் நம்மைவிட அதிகம் தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இஸ்ரேல் நிலைமையை புத்திசாலித்தனமாக கையாளும் நிலையில், வற்றாத ஜீவநதிகள் கொண்ட இந்தியாவுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்வது கடினமல்ல. நீர் மேலாண்மையில் நாம் போதுமான அக்கறை செலுத்தாமல் இருப்பதுதான் குறை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com