சமச்சீராக இல்லாத வளர்ச்சி...

இந்தியாவில் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, நமது கூட்டாட்சி அமைப்பிலும்கூட மாநிலங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பது கவலையளிக்

இந்தியாவில் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, நமது கூட்டாட்சி அமைப்பிலும்கூட மாநிலங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. ஒருபுறம் பலமுனை வறுமை குறைந்துவருகிறது என்று மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொருபுறம் கோடீஸ்வரர்களுக்கும், தெருக்கோடிவாசிகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு அபாயகரமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும்.
சாமானிய அடித்தட்டு மக்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை பெறும் அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதில் ஐயப்பாடு இல்லை. அநேகமாக இந்தியாவிலுள்ள 80% வீடுகளில் மின் இணைப்புத் தரப்பட்டிருக்கிறது. இதுவரை நடுத்தர பணக்கார குடும்பங்கள் மட்டுமே அனுபவித்து வந்த எரிவாயு உருளை, செல்லிடப்பேசி வசதி, தொலைக்காட்சி, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வசதிகளை அடித்தட்டு மக்களும் பெற முடிந்திருக்கிறது. 
2005-2006 முதல் 2015-16 நிதியாண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பல்முனை வறுமை 55%-லிருந்து 21%-ஆகக் குறைந்திருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வளர்ச்சி அடைந்த 102 நாடுகளில் 26-ஆவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. இவையெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடிய முன்னேற்றம்தான் என்றாலும்கூட, இந்த வளர்ச்சி சமச்சீராக இல்லாமல் காணப்படுவதால் இதை ஆரோக்கியமான வளர்ச்சியாகக் கருத முடியவில்லை.
நாளொன்று 1.25 டாலர் (சுமார் ரூ.85) க்கும் குறைவாக வருவாய் பெறுபவர்களை வறுமையில் வாடுபவர்கள் என்று உலக வங்கி வரையறுத்திருக்கிறது. ரங்கராஜன் குழு அறிக்கையின்படி இந்தியாவில் வறியவர்களின் எண்ணிக்கை 29%. இந்த அகில இந்திய கணக்கீடு பல உண்மைகளை மறைக்கிறது. இந்தியாவில் நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கிடையே மிகப்பெரிய வருவாய் வேறுபாடு காணப்படுகிறது. மாநிலங்களுக்கிடையேயும்கூட. கோவாவில் வறுமை விழுக்காடு 5%-க்கும் குறைவு என்றால் ஒடிஸாவில் 46%-க்கும் அதிகம். ஆகவே இந்தியாவில் வறுமையும்கூட சமச்சீர் இல்லாமல் காணப்படுகிறது.
மாநில ஏற்றத்தாழ்வு என்பது வளர்ச்சி விகிதம், முதலீடுகள், வேலைக்கான வாய்ப்புகள், கல்விச்சாலைகள், சட்டம்-ஒழுங்கு, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதேபோல கிராமப்புற, நகர்ப்புற வறுமையும்கூட. அதனால்தான் போதுமான வேலைவாய்ப்போ, குடிநீர் வசதியோ இல்லாத நிலையில் அதிக அளவில் கிராமப்புறங்களி
லிருந்து நகரங்களுக்கு வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் பலர் இடம் பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நீர் வளம் சமச்சீராக விநியோகிக்கப்படாமல் இருப்பதும்கூட காரணம்.
இந்தியாவில் பணக்கார மாநிலங்களுக்கும் ஏழை மாநிலங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைவதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாத நிலை காணப்படுகிறது. இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகூட ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்கிற தகவல் எந்த அளவுக்கு மாநிலங்களுக்கிடையேயான இடைவெளி நிலவுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 
இந்த பிரச்னை மிகவும் ஆழமானது. வணிகத்திற்கும் தொழில் வளத்திற்கும் ஏற்புடைய அடிப்படை சூழ்நிலை உருவாக்கப்பட்டால்தான் வளர்ச்சிக்கு வழிகோல முடியும். அதற்கு நிர்வாக ரீதியான பல குறைபாடுகள் வடமாநிலங்களை முன்னேறவிடாமல் தடுக்கின்றன. நியாயமாகப் பார்த்தால் மிகக்குறைந்த ஊதியமுள்ள உத்தரப் பிரதேசமும், பிகாரும்தான் எல்லா தொழிற்சாலைகளை அமைக்கவும் மிக அதிகமான பொருளாதார வளர்ச்சி காணவும் ஏற்ற மாநிலங்கள். 
வற்றாத கங்கை நதி பாயும் இந்த மாநிலங்கள், விவசாயத்திலும் முன்னிலை மாநிலங்களாகத் திகழ வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல் இருப்பதும், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதும் இந்த மாநிலங்களில் முதலீடு செய்வதையோ தொழில் தொடங்கு வதையோ ஊக்குவிப்பதாக இல்லை. என்னதான் குறைந்த ஊதியம் இருந்தாலும்கூட, கல்வி வளர்ச்சி இல்லாததால் வடமாநிலங்கள் தெற்கு, மேற்கு மாநிலங்களுடன் போட்டியிட்டு வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு உறுதிப்படுத்திக் கொடுக்க இயலாத நிலை காணப்படுகிறது.
இந்தியாவின் ஏனைய பகுதிகளைவிட தென் மாநிலங்கள் கூடுதல் வளர்ச்சி அடைந்ததற்கு மிக முக்கியமான காரணம் கல்வி. இரண்டாவது காரணம், ரயில், சாலை, துறைமுகம், விமான சேவை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள். கல்வி, அடித்தட்டு மக்களையும் தங்கள் அடிப்படை உரிமைகளை கோரிப்பெறவும், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துக் கொள்ளவும் ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக பொருளாதார, ஆக்கபூர்வ சூழல் உருவாக்கப்படுகிறது. 
வடமாநிலங்கள் தங்களது வளர்ச்சியில் முனைப்புக் காட்டாமல் தொடர்வதன் காரணமாக மாநிலங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவது இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடும். வளர்ச்சி அடைந்த மாநிலங்கள், தங்களது வளர்ச்சிக்கு பின்தங்கிய வடமாநிலங்கள் இடையூறாக இருப்பதை நீண்ட காலம் சகித்துக் கொண்டிருக்காது என்பதை உணர வேண்டும். 
1949 நவம்பர் 26-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில் அன்றைய சட்ட அமைச்சர் பாபா சாகேப் அம்பேத்கர் இது குறித்து குறிப்பிட்டிருக்கிறார் என்பது வியப்படைய வைக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட்டு, சமச்சீரான வளர்ச்சி உறுதிப்படுத்தப்படாவிட்டால் நாம் கஷ்டப்பட்டு இந்த அரசியல் நிர்ணய சபையின் மூலம் உருவாக்கும் அரசியல் ஜனநாயகம் சிதறிவிடும்' என்கிற அவரது தொலைநோக்குப் பார்வை சிந்தனைக்குரியது. நடுவண் அரசு விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com