தொடரக்கூடாது இந்த அவலம்!

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு அதிகாரப்பூர்வமாக 1953-லேயே இந்தியா முடிவுகட்டிவிட்டது என்றாலும்கூட, இன்றுவரை அந்த அநாகரிகம் தொடர்கிறது

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு அதிகாரப்பூர்வமாக 1953-லேயே இந்தியா முடிவுகட்டிவிட்டது என்றாலும்கூட, இன்றுவரை அந்த அநாகரிகம் தொடர்கிறது என்பதுதான் உண்மை. அடித்தட்டு மக்களின் அவலத்தையோ அவர்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படும் அநாகரிகத்தையோ முடிவுக்குக் கொண்டுவர இந்தியா சுதந்திரம் அடைந்த கடந்த 70 ஆண்டுகளில் மனப்பூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதைத்தான் மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் அவலம் வெளிப்படுத்துகிறது.
 2013-இல் மனித மலம் அள்ளுபவர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தடை மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்படியும் கூட எந்தவிதப் பயனோ, மாற்றமோ இல்லாத நிலை இன்றுவரை தொடர்கிறது. மனித மலம் அள்ளுபவர்களுக்கோ, கழிவுநீர்க் குழாய்களில் நுழைபவர்களுக்கோ போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அதை அனுமதிக்கலாம் என்கிற விதிமுறைதான் இந்தச் சட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு. இதைப் பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளும் அரசுத் துறைகளும் தொழில்நுட்பம் சார்ந்த விடைகாண முற்படுவதில்லை. அதுமட்டுமல்ல, முறையான பாதுகாப்பு தரப்படுவது என்பதும் பின்பற்றப்படுவதுமில்லை.
 1993-இல் துப்புரவுத் தொழிலாளிகள் மனிதக் கழிவுகளை அகற்றுவது சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தும் கூட, கழிவுநீர் தொட்டிகளையும் மலக்குழிகளையும் துப்புரவு செய்யும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டது ஏன் என்பதற்கு இதுவரை மாநில அரசுகளின் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. எந்தவோர் அரசு அதிகாரியோ, ஊழியரோ தண்டிக்கப்படவில்லை. சட்டப்படி இந்தக் குற்றத்திற்காக பிணையும், சிறை தண்டனையும் விதிக்கப்படிருந்தும் கூட, மிக மிக அரிதாகத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் செயல்படை ஒன்று நரேந்திர மோடி அரசு பதவியேற்ற இரண்டாவது ஆண்டிலேயே ஏற்படுத்தப்பட்டது. அதன் முதல் கட்ட ஆய்வின்படி இந்தியாவில் 6,650 மனித துப்புரவுத் தொழிலாளிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மனித துப்புரவுத் தொழிலாளிகளின் எண்ணிக்கை 53,236. இது 12 மாநிலங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை மட்டுமே. ஏனென்றால், பல மாநிலங்கள் மனிதத் துப்புரவுத் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.
 இந்தியாவிலுள்ள 18 மாநிலங்களில் 170 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின் ஆய்வு இந்தியாவில் 600 மாவட்டங்களில் 121 மாவட்டங்களில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டிருக்கிறது. பிகார், கர்நாடகம், தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் இந்த ஆய்வில் கலந்து கொள்வதையே தவிர்த்திருக்கின்றன.
 முதல்கட்ட ஆய்வு நேரடியாக மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களையும், மலக்குழிகளை துப்புரவு செய்பவர்களையும் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது. இரண்டாவது கட்டத்தில் கழிவுநீர் தொட்டிகள், குழாய்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றை துப்புரவு செய்பவர்களின் எண்ணிக்கையையும், புள்ளி விவரங்களையும் திரட்ட இருக்கிறது. இந்த ஆய்வுக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பதால், விரைந்து செயல்பட முடியாமல் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
 இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 12 மாநிலங்களில் ஹரியாணா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் மனிதக் கழிவுகளை அள்ளும் துப்புரவு செய்யும் தொழிலாளிகள் அறவே கிடையாது என்று கூறிவிட்டிருக்கின்றன. ஆனால், இந்த ஐந்து மாநிலங்களில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் 11,348 தொழிலாளிகள் தாங்கள் குறித்த விவரங்களை வலிய வந்து பதிவு செய்திருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்திருக்கும் துப்புரவுத் தொழிலாளிகளின் எண்ணிக்கை 28,796. ஆனால், மாநிலத்தின் புள்ளிவிவரப்படி வெறும் 1,056 பேர் மட்டுமே காணப்படுகிறார்கள். பல மாநிலங்களில் இதுதான் நிலைமை.
 இந்தப் பிரச்னைக்கு விடை காணப்பட வேண்டுமென்றால், தங்களது மாநிலத்தில் இந்த அவலம் காணப்படுகிறது என்பதை மாநில அரசுகள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் மனித மலம் அள்ளும் முறையே இல்லை என்று கூறுவதன் மூலம் பிரச்னை தீர்ந்துவிடாது. அதைவிட எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு விடைகாண முயல்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
 தேசிய துப்புரவுத் தொழிலாளர்கள் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கழகம் ஆண்டுதோறும் 7500 துப்புரவுத் தொழிலாளர்களையும், குப்பை பொறுக்குபவர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக பயிற்சி அளிக்க இருக்கிறது. இந்தப் பயிற்சியில் இயந்திரங்களின் மூலமாக துப்புரவு செய்வது, என்னென்ன பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிப்பதுடன் அவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட இருக்கிறது.
 மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் அளித்த பதிலின்படி 2017-இல் மட்டும் இந்தியாவில் கழிவுநீர்த் தொட்டியில் பணிபுரியும்போது விஷவாயு தாக்கி 300க்கும் அதிகமான பேர் இறந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மாநில அரசுகள், மத்திய அரசின் செயல்படையுடன் ஒத்துழைத்து சரியான புள்ளிவிவரத்தை சேகரித்து மனித இனத்துக்கும் நாகரிகத்துக்கும் தலைகுனிவான மனிதக் கழிவுகளை மனிதர்கள் நேரிடையாக அகற்றும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com