தேவையில்லாத பனிப்போர்!

உலக நாடுகளுக்கிடையே மிகப்பெரிய வர்த்தகப் போர் ஒன்று வெடித்திருக்கிறது. அமெரிக்காவால் தொடங்கப்பட்ட இந்த வர்த்தக யுத்தத்தின் இலக்கு சீனாவாக இருந்தாலும்கூட,

உலக நாடுகளுக்கிடையே மிகப்பெரிய வர்த்தகப் போர் ஒன்று வெடித்திருக்கிறது. அமெரிக்காவால் தொடங்கப்பட்ட இந்த வர்த்தக யுத்தத்தின் இலக்கு சீனாவாக இருந்தாலும்கூட, அது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இலக்கில்லாமல் சிறுபிள்ளைத் தனமாக நடத்தப்படும் இறக்குமதி வரிவிதிப்பு யுத்தத்தின் விளைவு யாருக்கும் சாதகமாகவோ, நன்மை தருவதாகவோ இருக்கப் போவதில்லை.
கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை அகற்றுவதாக அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களைவிட, சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு 37,500 கோடி டாலர் (சுமார் ரூ.25.5 லட்சம் கோடி) அதிகமாக இருந்தது. அந்த வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட, தான் ஆட்சிக்கு வந்தால் சீனப் பொருள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக அப்போதே அறிவித்திருந்தார். தேர்தலில் வாக்குறுதி அளிப்பது என்பது வேறு, பதவிக்கு வந்த பிறகு நடைமுறை சாத்தியம் என்பது வேறு. இதை அதிபர் டொனால்ட் டிரம்ப் உணராததன் விளைவுதான், இப்போது சர்வதேச வர்த்தகம் நிலை தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்களின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர். சீனா மீது மட்டுமல்ல, ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்படும் இறக்குமதிக்கும் வரிவிதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு குறித்து அதிபர் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து முடிவெடுத்தாரா என்பதில் சந்தேகம் இருக்கிறது. அதற்குக் காரணம், டிரம்ப் நிர்வாகம் இறக்குமதி வரியை அதிகரித்திருக்கும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பொருள்கள் அதிகமாக கனடாவிலிருந்தும் மெக்ஸிகோவிலிருந்தும்தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் மொத்த இரும்பு இறக்குமதியில் சீனாவும், இந்தியாவும் தலா இரண்டு சதவீதம்தான் பங்கு வகிக்கின்றன.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் சீனாவுடையது. சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 375 பில்லியன் டாலர். சீனாவிடமிருந்தான 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதியின் மீது வரி விதிப்பதன் மூலமும், வர்த்தகப் பற்றாக்குறையை 100 பில்லியன் டாலராக குறைப்பதன் மூலமும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முற்பட்டிருக்கிறார் அதிபர் டிரம்ப். சீனா எதிர்வினையாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்திருக்கிறது. இரண்டு தரப்புமே நிழல் யுத்தம் புரிந்து கொண்டிருக்கின்றன. 
இந்தியா ஒன்றும் அமெரிக்காவுக்கு மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடோ, வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் நாடோ அல்ல. மாறாக, அமெரிக்காவிலிருந்து மிக அதிகமான பொருள்களை இறக்குமதி செய்யும் நாடு. அப்படியிருக்கும்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் இரும்புக்கும், அலுமினியத்துக்குமான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்தது வேடிக்கையாக இருக்கிறது. 
இந்தப் பிரச்னையில் இந்தியா துணிந்து எடுத்திருக்கும் முடிவு பாராட்டுதலுக்குரியது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருள்கள் மீது கூடுதல் வரியை இந்தியா அறிவித்திருக்கிறது. இந்த வரிவிதிப்பு வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்திருப்பதன் மூலம், வாஷிங்டனுடன் இருதரப்பு வரிகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வசதியாக வழிகோலியிருக்கிறது இந்திய அரசு.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள், ஆப்பிள், வால்நெட், பாதாம் உள்ளிட்ட 29 பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து உலகிலேயே அதிகமாக பாதாம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். இது நிச்சயமாக அமெரிக்காவை பாதிக்கக்கூடும். கடந்த 2017-18-இல் மட்டும் நாம் 668.22 மில்லியன் டாலர் பாதாம், 107.18 மில்லியன் டாலர் ஆப்பிள், 38.01 மில்லியன் டாலர் வால்நெட் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறோம். இவையொன்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அல்ல. பாதாமை ஆஸ்திரேலியாவிலிருந்தும் ஆப்பிளை சீனா, சிலி நாடுகளிலிருந்தும் நாம் இறக்குமதி செய்துகொள்ளலாம். பருப்பு வகைகளில் நாம் ஏற்கெனவே சுய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டோம்.
சமீபத்தில்தான் இந்தியா அமெரிக்காவிலிருந்து ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்க முடிவெடுத்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இந்திய ராணுவத்திற்கான மொத்த ஏற்றுமதி 15 பில்லியன் டாலராக உயர இருக்கிறது. இந்த சூழலில்தான் சீனாவின் மீதான அமெரிக்காவின் பிரச்னைக்கு, இந்தியா மீது வர்த்தகப் போர் தொடுக்க முற்பட்டிருக்கிறார் அதிபர் டிரம்ப். 
அதிபர் டிரம்ப் தனது அமெரிக்கா முதலில்' என்கிற கண்மூடித்தனமான கொள்கையை கடைபிடிப்பது அவரது விருப்பமாக இருக்கலாம். அதற்காக சீனாவுக்கு எதிரான தன்னுடைய கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்த, இந்தியா மீதும் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் மீதும் தேவையில்லாமல் இறக்குமதி வரிகளை அதிகரித்து வர்த்தகப் போர் நடத்த முற்பட்டிருப்பது முடிவில் அமெரிக்காவுக்குத்தான் பாதகமாக இருக்கப்போகிறது. இதை யாராவது அவரிடம் சொல்லிப் புரியவைத்தால் நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com