மங்கையராய்ப் பிறப்பதற்கே...?

லண்டனில் இருந்து வெளியாகும் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை ஆய்வறிக்கை அதிர்ச்சி தரும் தகவலை வெளிப்படுத்தி இருக்கிறது.

லண்டனில் இருந்து வெளியாகும் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை ஆய்வறிக்கை அதிர்ச்சி தரும் தகவலை வெளிப்படுத்தி இருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகி இருக்கும் அந்த ஆய்வு அறிக்கையின்படி, உலகிலேயே பெண்கள் வாழ பாதுகாப்பே இல்லாத நாடாக இந்தியா அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானையும், சிரியாவையும் விட இந்தியா பெண்களுக்கான பாதுகாப்பில் மோசமானதாகக் கருதப்படுகிறது. அந்த அறிக்கை இந்திய அரசாலும், சில அரசியல் தலைவர்களாலும் விமர்சிக்கப்பட்டாலும் கூட அந்த அறிக்கையின் முடிவை நாம் ஒதுக்கித்தள்ளி விட முடியாது.
உலகளாவிய அளவில் பெண்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்யும் 548 நிபுணர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். உடல் நலம், பொருளாதார வாய்ப்புகள், பழக்க வழக்கங்கள், பாலியல் வன்முறை, பாலியல் அல்லாத வன்முறை, பெண்ணடிமைத்தனம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த எல்லாக் காரணிகளிலும் இந்தியா மோசமானதாக அறியப்பட்டிருக்கிறது. 
2012-இல் தில்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது; சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலைமை கணிசமாக முன்னேறும் என்று எதிர்பார்த்தால், பிரச்னையின் தீவிரம் அதிகரித்திருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இப்போது ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முன்பைவிட அதிகமாக வழக்குப்பதிவு நிலையை எட்டுகின்றன.
மகளிர்க்கு எதிரான பாலியல் வன்முறை என்பதில் குடும்பத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை, முற்றிலும் புதியவர்களால் நடத்தப்படும் வன்கொடுமை, பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதி பெறுவதற்கான வாய்ப்புகள் ஆகியவை இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 2016-இல் மட்டும் இந்தியாவில் 40,000 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதில் வெறும் 19% வழக்குகளில் மட்டும்தான் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து எந்த அளவிற்கு பாலியல் வழக்குகளில் சட்டம் தன் கடமையைச் செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
லிபியா, மியான்மர் நாடுகளுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிகமாகப் பெண்கள் வலுக்கட்டாயமாக பாலியல் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுவது இந்தியாவில்தான் என்கிறது இந்த அறிக்கை. கட்டாயத் திருமணம், பெண் அடிமைத்தனம் மட்டுமல்லாமல் பெண்களை பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பரவலாகக் காணப்படுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறையோ, மனோநிலையோ இந்தியாவில் புதிதொன்றுமல்ல. தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை வெளிப்படுத்தி இருக்கும் ஆய்வு முடிவுகளை ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிராக வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறு என்று ஒதுக்கிவிடுவது சரியல்ல. பெண்களுக்குப் போதுமான வாய்ப்பு இந்தியாவில் வழங்கப்படுவது இல்லை என்பதை பெண் சிசுக் கொலைகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இப்போதும்கூட இந்தியாவின் பல பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னாலோ அல்லது பிறந்த உடனேயோ மரணத்தைத் தழுவுகின்றன என்கிற உண்மையை நாம் மறுக்க இயலாது.
கடந்த மாதம் வெளியாகியிருக்கும் ஓர் ஆய்வு அறிக்கையின்படி பிரசவத்திற்கு முன்னும் பின்னுமான ஐந்து ஆண்டுகளில் மரணித்திருக்கும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை 2,39,000. ஆண்டு தோறும் மரணித்த ஐந்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை இது. அதுமட்டுமல்லாமல், இந்த மரணங்களில் 22% பெண் குழந்தைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு என்று நிதர்சனமாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய ஹிந்தி பேசும் நான்கு இந்திய வட மாநிலங்கள் மட்டுமே மேலே குறிப்பிட்ட பெண் குழந்தைகள் மரணத்தில் மூன்றில் இரண்டு பங்குக்குக் காரணமாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல, 2011-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி இந்தியாவிலேயே பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களில் இந்த மாநிலங்கள்தான் முன்னிலை வகிக்கின்றன. தென் மாநிலங்களில் பெண் சிசு மரணமும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி.
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு சமூக ரீதியாக இந்தியாவில் முக்கியத்துவம் அதிகம். அதற்குக் காரணம், சொத்துரிமை. இந்திய சொத்துரிமைச் சட்டம் 1956-இல் திருத்தங்கள் 2005-இல் கொண்டுவரப்பட்டன. அதன்படி பெண்களுக்கும் சொத்துரிமையில் சம பங்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பிரசவத்திற்கு முன்னால் பாலின பரிசோதனை நடத்துவதும் சட்டபடி குற்றமாக்கப்பட்டிருக்கிறது. வரதட்சிணை, கல்விச் செலவு உள்ளிட்ட பிரச்னைகளும் கணிசமாகவே குறைந்திருக்கின்றன.
சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் பெண்களுக்கு எதிரான மனோநிலை மட்டுமே இப்போதும் பெண் குழந்தைகளைப் பெற்றோர் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் என்று கருதிவிட முடியாது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் கூட அதற்கு முக்கிய காரணியாக இருக்கக்கூடும். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிந்திக்கும்போது, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கை அதிர்ச்சி அளிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com