ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...!

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபல மணல் வியாபாரி சேகர் ரெட்டி மீது மத்தியப் புலனாய்வுத் துறை பதிவு செய்த மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபல மணல் வியாபாரி சேகர் ரெட்டி மீது மத்தியப் புலனாய்வுத் துறை பதிவு செய்த மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஒரே குற்றச்சாட்டுக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மத்தியப் புலனாய்வுத் துறையினர் சேகர் ரெட்டி மீது பதிவு செய்திருந்த மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. ரத்து செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முதல் வழக்குடன் சேர்த்து விசாரிக்கலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
2016 நவம்பர் 8-ஆம் தேதி, ஒட்டுமொத்த இந்தியாவே ரூ.500, ரூ.1,000 செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த நேரம், வேலூரில் சரக்கு ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.24 கோடி மதிப்புள்ள, அப்போதுதான் மாற்றுச் செலாவணியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ரூ.2,000 நோட்டுகள் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அடுத்த நாள் சென்னை தியாகராயநகர் விஜயராகவா சாலையில் உள்ள சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மணல் நிறுவன அலுவகத்தில் ரூ.8 கோடியும், யோகம்மாள் சாலை அலுவலகத்தில் ரூ.1 கோடியே 63 லட்சத்துக்கான ரூ.2,000 நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நேரத்தில் நடத்தவை என்பதால் சேகர் ரெட்டி உள்பட ஐந்து நபர் மீது தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வருமான வரித்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்குகளைப் பதிவு செய்யும்போதே, மத்தியப் புலனாய்வுத் துறையினர் மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காகப் பதிவு செய்திருக்க முடியும். ஒரே குற்றத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழக்கு தொடுக்க முடியாது என்கிற அடிப்படைப் புரிதல்கூட மத்தியப் புலனாய்வுத் துறைக்குக் கிடையாது என்பதை நம்ப முடியவில்லை. வழக்கின் தீவிரத்தைக் குறைப்பதற்கும், சட்டத்தின் ஓட்டைகளைக் காரணம் காட்டிக் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உதவி இருந்தால் வியப்படையத் தேவையில்லை.
மத்தியப் புலனாய்வுத் துறையின் செயல்பாடு, கடந்த அரை நூற்றாண்டு காலமாகவே கடும் கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வந்திருக்கிறது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. 2ஜி அலைக்கற்றை வழக்காக இருந்தாலும், ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்காக இருந்தாலும் சி.பி.ஐ.யால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த ரஞ்சித் சின்ஹா மீது பதவியில் இருக்கும்போதே பல்வேறு குற்றச்சாட்டுகள். நிலக்கரி ஊழல் வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முற்பட்டதற்காக பணி ஓய்வு பெற்ற ரஞ்சித் சின்ஹாவை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டிய நிலையில்தான் அந்த அமைப்பு இயங்குகிறது. அவருக்கு முன்னர் இயக்குநராகப் பணியாற்றிய (2010-12) ஏ.பி. சிங் என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுப் பதிவாகி, அதை சி.பி.ஐ.யே விசாரிக்கவும் செய்கிறது.
மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குநர்களே லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்களாக இருக்கும் நிலையில், அதில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஊழல் அரசியல்வாதிகள், பெரும் தொழில் முதலைகள், அரசு அதிகாரிகள், மத்திய - மாநில காவல்துறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் இவர்கள் அனைவரும் சேர்ந்த வலைப்பின்னலில்தான் மத்தியப் புலனாய்வுத் துறை சிக்கித் தவிக்கிறது எனும்போது, சேகர் ரெட்டி வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வியப்பளிக்கவில்லை.
உயர்நீதிமன்றம், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருக்கிறது. நாமெல்லாம் ஒரே ஒரு ரூ.2,000 நோட்டுக்காக ஏடிஎம்.
களின் முன்பு கால்கடுக்க வரிசையில் நின்றபோதுதான், பல கோடி ரூபாய்க்கான புதிய ரூ.2,000 நோட்டுகள் சேகர் ரெட்டியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது வயிறெரிய ஓலமிட்டவர்களின் குரலை, உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். பாஸ்கரன் பிரதிபலித்திருக்கிறார் என்பது சற்று ஆறுதல்.
சேகர் ரெட்டி, அரசு உயர் அதிகாரிகளுடன் கூட்டுச் சதி செய்து, புதிய ரூ.2,000 நோட்டுகளைக் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பதற்காக சி.பி.ஐ. வழக்கும் பதிவு செய்திருக்கிறது. ஆனால், இதுவரை ஒரு அரசு உயர் அதிகாரியையோ, வங்கி அதிகாரியையோ சி.பி.ஐ. கைது செய்யவில்லை. எந்த வங்கியிலிருந்து இந்தப் பணம் பெறப்பட்டது, எப்படி, எதற்காகப் பெறப்பட்டது என்பதைக்கூட மத்தியப் புலனாய்வுத் துறை அடையாளம் காணவில்லையே, ஏன்?' என்கிற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். பாஸ்கரன் எழுப்பி இருக்கும் கேள்வியைத்தான் மக்கள் மன்றம் மனதிற்குள் இத்தனை நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சேகர் ரெட்டி மீதான வழக்கு ஒருபுறம் இருக்கட்டும். பொது மக்களுக்கும், தான் வகிக்கும் பொறுப்புக்கும் வஞ்சகம் இழைத்த வங்கி அதிகாரிகள் யார் யார் என்பதையாவது மக்கள் மன்றத்துக்கு அடையாளம் காட்ட வேண்டிய கடமை, மத்தியப் புலனாய்வுத் துறைக்குக் கிடையாதா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com