ஊடுருவும் அச்சம்!

கடந்த நான்கு நாட்களாக இந்திய ஊடகங்களின் செயல்பாடு பாராட்டும்படியாக இல்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய 

கடந்த நான்கு நாட்களாக இந்திய ஊடகங்களின் செயல்பாடு பாராட்டும்படியாக இல்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய வங்கிகள் பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்களாலும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளாலும் சூறையாடப்படும் அவலம் குறித்துக் கவலைப்படாமல், நடிகை ஸ்ரீதேவியின் 
மரணத்துக்கு அளவுக்கதிகமாக முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கும் போக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறதே தவிர, பாராட்டும்படியாக இல்லை.
நடிகை ஸ்ரீதேவியின் மரணமும், அதன் பின்னணியும் பதிவு செய்யப்பட வேண்டிய செய்திதான் என்பதில் யாருக்குமே மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் மாநில, மொழி எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியாவைக் கவர்ந்த திரையுலக நட்சத்திரமாகத் தனது நடிப்பால் பல தேசிய, மாநில விருதுகளைப் பெற்ற புகழ்வாய்ந்த அந்த நடிகையின் மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருப்பதைப் பதிவு செய்ய வேண்டியது ஊடகங்களின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் நிச்சயமாகத் தவிர்க்க முடியாத செய்தி. ஆனால், இந்தியாவின் தேசிய நாளிதழ்கள் அனைத்துக்கும் அது தலைப்புச் செய்தியாகிவிட்டிருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தலைப்புச் செய்தி ஆக்கப்படுவதும், தொடர்ந்து மூன்று நாட்கள் வேறு முக்கியமான தேசிய, மாநில நிகழ்வுகளும், அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பிரச்னைகளும் புறந்தள்ளப்பட்டு, ஸ்ரீதேவியின் மரணத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே துயரத்தில் வீழ்ந்து கிடப்பது போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டதே, அதுதான் ஏன் என்று புரியவில்லை. 
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் மரணத்தைக்கூடத் தலைப்புச் செய்தியாக வெளியிடாத சில நாளிதழ்கள், நடிகை ஸ்ரீதேவிக்குத் தலைப்புச் செய்தி மரியாதை கொடுத்து அஞ்சலி செலுத்தி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
காட்சி ஊடகத்தில் 24 மணிநேரச் செய்திச் சேனல்கள் வந்ததால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் இது. தொழில் போட்டியால், பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டுப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் 24 மணிநேரச் செய்திச் சேனல்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய செய்திகளுக்கு இடமளிக்காமல், அவர்களது உணர்வுகளுக்குத் தீனி போடுவதிலேயே குறியாக இருக்கின்றன. காட்சி ஊடகங்களுடன் போட்டி போட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கும் அச்சு ஊடகங்களும் தங்களது பொறுப்பை மறந்து பரபரப்புக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியில் இறங்கி விட்டிருக்கின்றன.
புலனாய்வு இதழ்கள் பல தமிழில் வெளிவரத் தொடங்கிவிட்ட நிலையில், அதுவரை மாதம் இருமுறை இதழாக இருந்த 'துக்ளக்' இதழை வார இதழாக மாற்ற வேண்டும் என்கிற கருத்து அதன் ஆசிரியர் 'சோ' ராமசாமியிடம் வலியுறுத்தப்பட்டது. அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல், ஓரிரு வருடங்கள் முடிவெடுக்காமல் தள்ளிப்போட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. 'வாராவாரம் இதழ் கொண்டு வந்தாக வேண்டும் என்பதற்காக, தரமான செய்திகள், கட்டுரைகள் இல்லாமல் போனாலும், பக்கத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். அது 'துக்ளக்' இதழின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் குலைத்துவிடும்' என்கிற நியாயமான கவலை, பொறுப்புணர்வுள்ள அந்த இதழியல் ஜாம்பவானுக்கு இருந்தது.
ஊடகங்களின் இன்றைய போக்குக்கு ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும்தான் காரணம். அரசின், அரசியல் கட்சிகளின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுதந்திரமாக ஊடகங்கள் விமர்சனம் செய்வது அச்சுறுத்தலாலும், அதிகார பலத்தாலும் அடக்கப்படுகிறது. சுட்டிக்காட்டப்படும் தவறுகள் திருத்திக் கொள்ளப்படும்போதுதான் அரசு மக்கள் செல்வாக்கைப் பெறும் என்கிற உண்மை யாருக்குமே புரியவில்லை. அரசையும், அரசியல் கட்சிகளையும் விமர்சிக்க முடியாத நிலையில் ஊடகங்கள் தங்களை வணிக ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ளவும், வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் சில்லறை சந்தோஷங்களை ஏற்படுத்தி மகிழ்கின்றன.
காட்சி, அச்சு ஊடகங்கள்தான் இப்படி என்றால், சமூக ஊடகங்களின் போக்கு அதைவிடக் கேவலமாகவும், அச்சம் ஏற்படுதத்துவதாகவும் இருக்கிறது. எந்தவிதத் தணிக்கையோ, கட்டுப்பாடோ இல்லாத நிலையில், வரம்பில்லாமல் தவறுகளும், பொய்ப் பிரசாரங்களும் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமலேயே பலரும் தொடர்ந்து பகிர்ந்து கொள்வதால், அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
எப்போதோ, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தின்போதோ, அறுவை சிகிச்சைக்காகவோ ரத்தம் தேவைப்படுகிறது என்று சொல்லப்பட்ட பதிவு தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற பதிவுகளைச் செய்பவர்கள் தேதியைக் குறிப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் விளைவு இது.
'மீம்ஸ்' என்ற பெயரில் பரப்பப்படும் பதிவுகள், ஆளுமைகளைச் சிறுமைப்படுத்திப் பதிவு செய்யும் துன்பியல் போக்கின் (சாடிசம்) வெளிப்பாடு. தவறான செய்திகளைப் பரப்புவது, தரக்குறைவான விமர்சனங்களைப் பதிவு செய்து தங்களுக்கு வேண்டாதவர்களைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்துவது என்று சமூக ஊடகங்கள் நிகழ்த்தும் 'அராஜகங்கள்' குறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும்.
கருத்து சுதந்திரம்தான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை. ஆனால், மக்களாட்சித் தத்துவத்தையே அது கேலிக்கூத்தாக்குமேயானால், கருத்து சுதந்திரத்துக்குக் கடிவாளம் போட வேண்டிய கடமை பொறுப்புள்ள சமூகத்துக்கு உண்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com