தாய்மைக்கு இழுக்கு!

நரேந்திர மோடி அரசு மிகுந்த விளம்பரத்துடன் செய்த பல்வேறு அறிவிப்புகளுள் மிக முக்கியமான அறிவிப்பு 2015-இல் அவரால் அறிவிக்கப்பட்ட 'பேட்டி பச்சாவ்

நரேந்திர மோடி அரசு மிகுந்த விளம்பரத்துடன் செய்த பல்வேறு அறிவிப்புகளுள் மிக முக்கியமான அறிவிப்பு 2015-இல் அவரால் அறிவிக்கப்பட்ட 'பேட்டி பச்சாவ் - பேட்டி படாவ்' என்கிற 'பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், படிக்க வையுங்கள்'. 
இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, அதன் மூலம் இந்தியாவில் பெண்கள் குறித்த பார்வையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர். அறிவிப்பைத் தொடர்ந்து பெண் குழந்தைகளுடன் கைப்படம் (செல்பி) எடுத்துக்கொள்வதை சமூக ஊடகங்கள் மூலம் ஓர் இயக்கமாகவே மாற்ற அரசு முற்பட்டது. இதன் மூலம் மிகப்பெரிய மனநிலை மாற்றத்தை ஏற்படுத்த அரசு எத்தனித்தது. அரசால் மிகுந்த எதிர்பார்ப்புடன் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதைத்தான் நீதி ஆயோக்கின் அறிக்கை வெளிப்படுத்துகிறது. 
ஆண், பெண் குழந்தைகளுக்கிடையேயான விகிதத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, இந்தியாவின் 21 பெரிய மாநிலங்களில் 17 மாநிலங்களில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையேயான விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. 
பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்துவதும், பெண் குழந்தைகளைப் புறக்கணிப்பதும் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் 2015-இல் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் நோக்கம். வேடிக்கை என்னவென்றால், மிக ஆழமான ஆண் வழிச் சிந்தனையில் ஊறி இருப்பதில் முதல் மாநிலமாக பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத்தும், அதைத்தொடர்ந்து ஹரியாணாவும், ஆண், பெண் விகிதத்தில் ஏறத்தாழ 35 புள்ளிகள் கீழ்நோக்கி நகர்ந்திருக்கின்றன.
பெண் சிசு மரணம் அதிகமாகக் காணப்படுவதால் உலகளாவிய அளவில் பாலின விகிதாசாரத்தில் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகளைவிட அதிகமாக இருப்பதில் வியப்பில்லை. 107 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் என்பது பரவலாக காணப்படும் விகிதம். உலக சுகாதார நிறுவனத்தின் இன்னோர் அறிக்கையின்படி பிறப்பின்போதான பாலின விகிதம் 1.05. அதாவது, குழந்தைகளின் பிறப்பில் சராசரியாக 105 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் இருப்பதாக தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்திய அரசின் ஆய்வு, 2011 மக்கள்தொகைக் கணக்கின்போது காணப்பட்ட 1000 ஆண் குழந்தைகளுக்கு 939 பெண் குழந்தைகள் என்கிற விகிதாசாரம் 2031-இல், 20 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், 898-ஆகக் குறையக்கூடும் என்று தெரிவிக்கிறது. 1000 ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக பெண் குழந்தைகள் விகிதம் காணப்படும் மாநிலங்கள் இந்தியாவில் கேரளமும் புதுச்சேரியும் மட்டுமே. கேரளத்தில் 1000-க்கு 1084 பெண் குழந்தைகளும், புதுச்சேரியில் 1037 பெண் குழந்தைகளும் 2011 புள்ளிவிவரப்படி காணப்படுகிறது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, ஆந்திரம், சத்தீஸ்கர், மேகாலயம், மணிப்பூர், ஒடிஸா, மிசோரம், கோவா, கர்நாடகம், இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட், திரிபுரா, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய 14 மாநிலங்களில் 950-க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காணப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 996 பெண் குழந்தைகள் இருப்பதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பெண் குழந்தைகள் மீது காட்டப்படும் வெறுப்புணர்வு, பெண் சிசுக் கொலையில் தொடங்கி, பெண் குழந்தைகளை அநாதரவாகப் புறக்கணிப்பது என்று பல்வேறு வழிமுறைகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதெல்லாம் கிராமப்புறங்களில் மட்டும்தான் நடைபெறுவதாக நினைத்துவிடக் கூடாது. நகர்ப்புறங்களில் படித்தவர்கள் மத்தியிலும் இது அதிகமாகவே காணப்படுகிறது. ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதாலும் இன்னொரு குழந்தையைப் பெற்று வளர்க்கத் துணிவில்லாததாலும்தான் பல பெற்றோர்கள் பெண் குழந்தைகளைப் பாசத்துடன் வளர்க்கிறார்களே தவிர, அவர்களது மனதில் ஆண் குழந்தை இல்லாத ஏக்கம் காணப்படுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இரண்டு குழந்தைகள் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுமே ஆண்களாக இருப்பது காணப்படுகிறது. ஆறில் ஒரு பங்கு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாக இருக்கிறார்கள். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துவிட்டால், மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்துவிடக்கூடாது என்பதால் தவிர்ப்பவர்கள் ஏராளம். அதேபோல, இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு மூன்றாவதும் பெண் குழந்தை பெறும் பெற்றோர்களில் பெரும்பாலோர் ஆண் குழந்தை பிறக்காததால் ஏமாற்றம் அடைவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, தாங்கள் விரும்பும் அளவு ஆண் குழந்தை பெறும் வரை இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதாகவும், ஆண் குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதாகவும் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தலைமையில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆண் குழந்தைகள் மீதான பற்றுதல் காரணமாக இந்தியாவில் ஏறத்தாழ இரண்டு கோடிப் பெண் குழந்தைகள் 'தேவையில்லாமல் பிறந்தவர்களாகக்' காணப்படுகின்றனர் என்று அந்த அறிக்கை வெளியிட்டிருக்கும் தகவல் திடுக்கிட வைக்கிறது. 
பெண்கள் முன்னேற்றம், ஆண் - பெண் சம உரிமை, பெண்ணுக்கு முன்னுரிமை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான் என்பதை இந்திய சமூகத்தின் இந்தப் போக்கு வெளிப்படுத்துகிறது. குழந்தைகள் பிறப்பதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுவது என்பது, நம்மை பத்து மாதம் சுமந்து பெறும் தாய்மைக்கு இழுக்கு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com