கலாசாரம் ஆகிவிட்ட ஆபத்து!

அமெரிக்கா உலகுக்குக் கற்றுக்கொடுக்க முற்பட்டிருக்கும் ஆபத்தான வாழ்வியல் முறை, துப்பாக்கிக் கலாசாரம்.

அமெரிக்கா உலகுக்குக் கற்றுக்கொடுக்க முற்பட்டிருக்கும் ஆபத்தான வாழ்வியல் முறை, துப்பாக்கிக் கலாசாரம். அது அமெரிக்கர்களின் மரபணுவிலேயே காணப்படும் இயல்பு.
இங்கிலாந்திலிருந்தும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் நாடு கடத்தப்பட்ட குற்றப் பின்னணி உள்ளவர்கள் ஆயிரக்கணக்கில் குடியேறி, உருவாக்கிய தேசம்தான் அமெரிக்கா என்பது வரலாறு. அமெரிக்காவில் வாழ்ந்துவந்த லட்சக்கணக்கான பூர்வ குடியினரை ஐரோப்பாவிலிருந்து குடியேறியவர்கள் ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக்கொன்று, அந்த நாட்டை கரையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். இணையதளத்தில் 'சாண்ட் கிரீக் மசாக்கர்' என்பதைத் தேடிப் படித்தால் இந்த உண்மை விளங்கும்.
கடந்த மாதம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பார்க்லேண்ட் என்கிற நகரிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு 14 மாணவர்கள் உட்பட 17 பேர் பலியாகினர். இதுபோன்று துப்பாக்கிச்சூடு நடத்துவது அமெரிக்காவுக்குப் புதிதல்ல. இந்த ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. 
கடந்த ஜனவரி 23-ஆம் தேதி கென்டகி மாகாண உயர்நிலைப் பள்ளியில் 15 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டபோது இரண்டு மாணவர்கள் உயிரிழந்தார்கள், பலர் காயமடைந்திருக்கிறார்கள். அதற்கு ஒருநாள் முன்புதான் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியின் உணவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 16 வயதுப் பெண் காயமடைந்திருக்கிறார். நியூ ஆர்லியன்ஸ் நகர பள்ளியில் 14 வயதுச் சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியிருக்கிறான். அயோவா, வாஷிங்டன், கலிஃபோர்னியா மாகாணங்களிலும் இதுபோல பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்களிலும் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் கல்வி நிலையங்களில் 65 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகும் கடுமையான சட்டத்தின் மூலம் துப்பாக்கிக் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பேசப்படுமே தவிர, அதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படாது. இப்போதும்கூட ஃபுளோரிடா துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அமெரிக்கா முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் பெருந்திரளாகத் தெருவில் இறங்கி, அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், நாடாளுமன்றத்திற்கும் எதிராகக் கோஷம் எழுப்பியிருக்கிறார்கள்.
துப்பாக்கிக் கலாசாரத்திற்குக் கடிவாளம் போடக் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்கிற அவர்களது கோரிக்கைக்கு அதிபர் டிரம்ப்பின் எதிர்வினை, நகைப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. 'ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதன் மூலம் பள்ளிகளில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகளைத் தடுக்கலாம்' என்பதுதான் அதிபர் டிரம்ப்பின் ஆலோசனை.
கடந்த 2012, டிசம்பர் மாதம் கனெக்டிகட் மாகாண பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அப்போதைய அதிபர் பராக் ஒபாமா துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தைக் கொண்டுவர முற்பட்டார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றம் அதை நிராகரித்துவிட்டது. முன்னதாக, 17 முறை முயன்றும் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையில், தனது பதவிக்காலம் முடியும் தருவாயில் நிர்வாக உத்தரவின் மூலம் துப்பாக்கிச் சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க ஒபாமா முற்பட்டார். ஆனால், டிரம்ப் அதிபரானதும், அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, பிப்ரவரி 2017-இல் ஒபாமாவின் நிர்வாக ஆணையை ரத்து செய்தார். 
அமெரிக்காவில், தனிநபர்களிடம் 27 கோடி துப்பாக்கிகள் இருக்கின்றன.100 பேருக்கு 112 துப்பாக்கிகள் இருப்பதாகப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. வேறு எந்தவொரு நாட்டிலும் இந்த அளவுக்குத் தனி நபரிடம் துப்பாக்கிகள் புழங்குவதில்லை.
அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டுவர முற்பட்டால், அந்த ஆட்சிக்கு எதிராக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள், வாக்களிப்பார்கள். 
அமெரிக்காவில் உள்ள தேசிய துப்பாக்கி சங்கம் (நேஷனல் ரைஃபில் அசோசியேஷன்) மிகவும் சக்தி வாய்ந்தது. துப்பாக்கிக் கலாசாரத்தை நிலைநிறுத்துவதற்காக ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர்களை இந்த சங்கம் செலவிடுகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கே கூட துப்பாக்கிக்கான கட்டுப்பாட்டுத் தளர்வு உதவியிருக்கிறது என்னும்போது, எந்த அளவுக்கு அமெரிக்கர் மத்தியில் வன்முறை மனோநிலை காணப்படுகிறது என்பதை உணரலாம்.
அமெரிக்கர்கள் துப்பாக்கிகளுடனான தங்களது 227 ஆண்டு காதலை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது எளிதல்ல. முன்பே கூறியதுபோல, அது அவர்களது மரபணுவில் ஊறியிருக்கும் இயல்பு. தற்காப்புக்கு ஆயுதம் வைத்துக் கொள்வதை அரசியல் சாசன உரிமையாகவும், ஆயுதங்களை வாங்குவதை கடையில் ஏதோ பொருள் வாங்குவது போலவும், அமெரிக்க சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கிறது. இதனால், ஆண்டுதோறும் பல உயிர்கள் பலியாகின்றன. குறிப்பாக, குழந்தைகள் உயிரிழக்கிறார்கள் என்பதை உலகம் வேறு வழியில்லாமல் மெளனமாக சகித்துக் கொண்டிருக்கிறது.
நமது அச்சமெல்லாம், அமெரிக்கர்களின் கென்டகி ஃபிரைட் சிக்கன், கோக்ககோலா, பெப்சி போல இந்தத் துப்பாக்கிக் கலாசாரமும் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவிடக் கூடாதே என்பதுதான்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com