யாரைப் பொறுப்பாக்குவது?

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் விரைந்த தம்பதி மீது காவல்துறை அதிகாரி ஒருவர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் கர்ப்பிணிப் பெண்ணான தனியார் பள்ளி ஆசிரியை உஷா

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் விரைந்த தம்பதி மீது காவல்துறை அதிகாரி ஒருவர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் கர்ப்பிணிப் பெண்ணான தனியார் பள்ளி ஆசிரியை உஷா மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. தலைக்கவசம் அணியாதவர்களைப் பிடிப்பதற்காகக் காவல் துறையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபடுவது புதிதல்ல. அதேபோல தலைக்கவசமோ, ஓட்டுநர் உரிமமோ இல்லாமல் இருப்பவர்கள் காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் விரைவதும் புதிதல்ல. ஆனால், அப்படி விரைபவர்களைப் பின்தொடர்ந்து போய் ஈவிரக்கம் இல்லாமல் காவல் துறையினர் வெறித்தனமாகத் தாக்குவது என்பது புதிது.
திருச்சி, துவாக்குடி சம்பவத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தன் மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்த ராஜாவை காவல்துறை ஆய்வாளர் காமராஜ் தடுத்து நிறுத்தி இருக்கிறார். ராஜா அவரை சட்டை செய்யாமல், சட்டத்தை மதிக்காமல், பயணிக்க முற்பட்டது தவறாக இருக்கலாம். அதற்காக அவரைப் பின்தொடர்ந்து போய் அவரது வாகனத்தை எட்டி உதைத்து, ராஜா தன் மனைவியுடன் நிலைதடுமாறி கீழே விழும் வகையில் காவல் துறை ஆய்வாளர் காமராஜ் நடந்து கொண்டதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த உஷா மூன்று மாத கர்ப்பிணி என்பது காமராஜுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர் ஒரு பெண்மணி என்பதுகூடவா தெரியாமல் போயிற்று?
தலைக்கவசம் அணியாதது, காரில் சீட் பெல்ட் அணியாதது, முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக ஒவ்வொரு காவல்துறை ஆய்வாளரும் தினமும் குறைந்தது 50 வழக்குகளையாவது பதிவு செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்திருப்பது காவல்துறை ஆய்வாளர்களின் மனிதாபிமானமற்ற போக்குக்குக் காரணமாக இருக்கக்கூடும். இலக்குகளை எட்டாத காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள் எனும்போது, காவல்துறையினர் வரம்புமீறி செயல்படுவதைத் தவிர்க்க இயலாது.
காவல் துறையினர் மத்தியில் இதுபோன்ற வரம்பு மீறல்களும், விபரீதமான செயல்பாடுகளும் கடந்த சில மாதங்களாகவே காணப்படுகின்றன. கடந்த மாதம் 10-ஆம் தேதி குமரி மாவட்டம் அருமணையில் தலைக்கவச சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ராஜேஷ் என்கிற இளைஞர் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றபோது அவர் காவல் துறையினரால் தாக்கப்பட்டிருக்கிறார். கடந்த மாதம் 17-ஆம் தேதி நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த ப்ளஸ் 1 படிக்கும் மாணவியர் இருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, காவல் துறையினரின் தாக்குதலால் நிலைதடுமாறி, இருசக்கர வாகனம் எதிரில் வந்த வாகனத்தில் மோதி மாணவியர் இருவரும் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். 
காவல் துறையினர் பொதுமக்கள் மீது நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைப் போலவே காவல் துறையினர் மத்தியில் தொடர்ந்து தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் நாம் காண முடிகிறது. சென்னை மெரீனா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிய 26 வயது அருண்ராஜ் மார்ச் 4-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, சென்னை, அயனாவரத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய சதீஷ் குமார் மார்ச் 6-ஆம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில், 'தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை' என்று எழுதிவைத்துவிட்டு, காவல் நிலையத்தின் வாயில் பகுதிக்குச் சென்று தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். 
பணிச்சுமையின் காரணமாகவும், மன அழுத்தத்தின் காரணமாகவும் காவலர்களும், கீழ்நிலை அதிகாரிகளும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது, காவல்துறையின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்குப் பின்னால், காவல் துறையினர் மத்தியில் காணப்படும் மனநிலை பாதிப்பு குறித்து நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஐ. நா. சபை பரிந்துரைத்திருக்கும் எண்ணிக்கையை விட மிகமிகக் குறைந்த அளவில்தான் இந்தியாவில் காவலர்களின் எண்ணிக்கை காணப்படுகிறது. அதுமட்டுமல்ல, அனுமதிக்கப்பட்டிருக்கும் காவலர்களின் எண்ணிக்கையில் 24% இடங்கள் நிரப்பப்படாமலும் இருக்கின்றன.
காவலர்களைத் தங்களது அன்றாடப் பணிகளில் ஈடுபட அனுமதிக்காமல் அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுத்தவும் அரசியல் தலைமை கட்டாயப்படுத்துகிறது. மேலிருந்து கீழாகப் புரையோடிப் போயிருக்கும் கையூட்டுக் கலாசாரம் கீழ்மட்ட காவல்துறை ஊழியர்களைப் பொறுப்பில்லாமல் செயல்பட ஊக்குவிக்கிறது. காவல் துறையினரின் மரியாதையும் கண்ணியமும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், கட்டுப்பாடு இல்லாத துறையாகவும் கேள்வி கேட்பார் இல்லாத துறையாகவும் காவல்துறை மாறியிருக்கும் அவலம் உருவாகி இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் 2006-இல் காவல் துறையின் செயல்பாடு, காவல் துறையினரின் திறன் அறிதல், நியமனம், இடமாற்றம், தவறிழைக்கும் காவல் துறையினருக்கு எதிரான புகார்களை விசாரித்தல் ஆகியவை குறித்துத் தெளிவான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் ஏற்படுத்த ஆணையிட்டிருக்கிறது. இன்றுவரை அந்த ஆணை அரசியல் தலைமையால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 
அப்படி இருக்கும்போது, திருச்சி சம்பவம் உட்பட காவல் துறையினரின் அத்துமீறல்களுக்கு யாரைப் பொறுப்பாக்குவது - காவல் துறையினரையா அல்லது காவல் துறை அரசியல் தலையீடு இல்லாமல், பணிச்சுமை இல்லாமல், மன அழுத்தமில்லாமல் செயல்பட அனுமதிக்காத இந்தியாவின் நிர்வாக நடைமுறையையா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com