தட்டிக் கழிப்பு!

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள்

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மசோதா - 2018க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வெளியே இருக்கும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளையும், வங்கிக் கணக்குகளையும் முடக்க உதவும். நீரவ் மோடி மோசடியைத் தொடர்ந்து, இப்படியொரு சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. வெளிநாட்டிற்குத் தப்பியோடிவிட்டதால், நீரவ் மோடி மோசடி செய்த பெரும் பணத்தை முழுமையாக வசூல் செய்ய வங்கிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.
பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளாகப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய திவால் சட்டம், கடனைத் திருப்பித் தராதவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வங்கிகளுக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் உரிமை வழங்குகிறது. திட்டமிட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை அடையாளம் காண்பது குறித்த சில தெளிவான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்திருக்கிறது. இவையெல்லாம், அந்தப் பொருளாதாரக் குற்றவாளி இந்தியாவில் இருப்பவராக இருந்தால் மட்டுமே பயன்படும்.
நீரவ் மோடி போன்ற பொருளாதாரக் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துவிடும்போது, இந்திய சட்டத்தின் வரம்புக்குள் வருவதில்லை. இன்னொரு நாட்டின் சட்ட விதிமுறைகளுடன் ராஜாங்க ரீதியாகத் தொடர்பு ஏற்படுத்துவது என்பது எளிதானதல்ல. கிரிமினல் குற்றவாளிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தங்கள் பொருளாதாரக் குற்றங்களுக்குப் பயன்படுவதில்லை.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மசோதா இரண்டு முக்கியமான அம்சங்கள் கொண்டது. இப்போது சட்ட விரோதமாகப் பணச் சலவை செய்வோருக்கு எதிரான நடவடிக்கையைப் போலவே, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிக்கு சொந்தமாக இந்தியாவிலுள்ள அசையாச் சொத்துகளைப் பறிமுதல் செய்ய இந்த மசோதா வழிகோலுகிறது. இரண்டாவதாக, அப்படிப் பறிமுதல் செய்யப்படும், முடக்கப்படும் சொத்துகள், முதலீடுகளில், பங்குதாரர்கள், வியாபாரக் கூட்டாளிகள், மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக உரிமை கொண்டாடவோ, பங்கு கேட்கவோ முடியாது.
இப்படியொரு சட்டம் இல்லாமலேயே, நீரவ் மோடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றவாளிகளின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விசாரணை அமைப்புகளால் முடக்க முடிந்திருக்கும்போது, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் என்று தனியாக ஒரு சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம்தான் என்ன என்கிற கேள்வி எழுகிறது. விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் கடுமையான சட்டத்தால் தடுக்கப்பட வேண்டும் என்றாலும், இந்தச் சட்டம் எந்த அளவுக்கு சர்வதேசத் தொடர்புள்ள பெரும் மோசடிக்காரர்களின் செயல்பாடுகளைத் தடுக்கும் என்கிற கேள்வி எழாமல் இல்லை.
சர்வதேச அளவில் தொடர்புள்ள இதுபோன்ற மோசடியாளர்கள், பெரும்பாலான மோசடிப் பணத்தை வெளிநாட்டு வரி ஏய்ப்புப் பணச் சொர்க்கங்களுக்கு உடனுக்குடன் மாற்றிவிடுகிறார்கள். உலகமயமாக்கலும், இந்திய அரசின் நிதிக் கொள்கையும் அவர்களுக்கு சாதகமானதாக இருக்கின்றன. வங்கிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் -
கவனக் குறைவால் மட்டுமே - ஏமாற்றப்பட்டிருக்க முடியாது என்கிற மக்களின் மனக்குமுறலுக்கு மருந்து போடும் முயற்சிதான் இந்தத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மசோதா.
கடந்த 2017 செப்டம்பர் வரையிலான புள்ளிவிவரப்படி, அரசு வங்கிகளில் கடனை வாங்கி வேண்டுமென்றே திருப்பித் தராத பெரும் கடனாளிகளின் எண்ணிக்கை 7,564. இவர்கள் வங்கிகளுக்குத் தர வேண்டிய கடன் தொகை ரூ.98,357 கோடி. ஏற்கெனவே கடனைத் திருப்பித் தராத 99 பெரும் முதலாளிகளை ரிசர்வ் வங்கி அடையாளம் கண்டிருக்கிறது. அவர்களில் 31 பேர் விஜய் மல்லையா, நீரவ் மோடி போல வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள் என்பது பொது வெளியில் கசியவோ, பரவலான ஊடக வெளிச்சம் பெறவோ இல்லை. வீட்டுக்கடனோ, சிறு தொழில் முனைவோர் வாங்கிய சில லட்சம் ரூபாய் கடனோ திருப்பித் தரப்படாவிட்டால், அவர்கள் பெயர்கள் புகைப்படத்துடன் ஊடகங்களில் வெளியிடப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்றனர். ஆனால், பெரும் கடனாளிகளான 7,564 பேரின் பட்டியலை வெளியிட ரிசர்வ் வங்கி மறுக்கிறது.
அதெல்லாம் சரி, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மசோதாவின்படி, ரூ.100 கோடிக்கு மேல் ஏமாற்றிவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றவர்களுக்குதான் இந்தச் சட்டம் பொருந்தும். ரூ.10 கோடியோ, ரூ.50 கோடியோ, ரூ.99 கோடியோ இந்திய அரசு வங்கியில் ஏமாற்றி வெளிநாடுகளுக்குத் தப்பியோடினால், அவர்கள் சொத்துக்கு விதிவிலக்களிப்பானேன்? யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த ரூ.100 கோடி வரம்பு? 
சட்டம் இயற்றிக் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, மக்களுக்கு அரசின் மீதும், சட்டத்தின் ஆட்சி மீதும், வங்கிகளின் மீதும் நம்பிக்கை பிறக்கும்.
பொருளாதாரக் குற்றவாளிகள் தப்பியோடிவிடாமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதும், தப்பியோடிவிட்டிருந்தால் அவர்களைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதும்தான் அரசின் கடமையே தவிர, சட்டம் இயற்றித் தனது பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com