மாற வேண்டும் காவல்துறை!

கடந்த மாதம் அவனி சதுர்வேதி என்கிற பெண்

கடந்த மாதம் அவனி சதுர்வேதி என்கிற பெண் விமானி, இந்திய விமானப் படையின் போர் விமானத்தை இயக்கி, புதிய வரலாறு படைத்திருக்கிறார். இதுவரையில் இந்தியாவின் முப்படைகளில் மகளிருக்கு முக்கியமான பொறுப்புகளோ, நேரிடையாகப் போரிடும் வகையிலான பதவிகளோ வழங்கப்பட்டதில்லை. ராணுவ அமைச்சராக ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருப்பதும், இந்திய விமானப் படையின் போர் விமானங்களை இயக்கும் அளவுக்குப் பெண்களுக்கு முக்கியத்துவமான பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரிய வரலாற்று நிகழ்வுகள்.
போர் விமானங்களை இயக்குவது வரை, ராணுவத்தில் பெண்களுக்குப் பங்கு வழங்கப்படும் நிலையில், இந்தியாவின் காவல்துறையில் பெண்களின் பங்கு எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்வையைத் திருப்பினால் அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைக்கிறது. காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் திடுக்கிட வைக்கிறது.
சமூகத்தில் காவல்துறை முக்கியமான பங்கு வகிக்கிறது. சமூகத்தின் சட்டம் -ஒழுங்கு பாதுகாப்புக்குப் பொறுப்பான காவல்துறை, சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவும், அமைப்பு ரீதியாக அதற்கேற்ற பாலின விகிதத்தில் அமைவதாகவும் இருப்பது அவசியம். ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த காவல்துறைப் பணியில், மகளிர் 7.28% மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்தப் புள்ளிவிவரம். அதைவிட வேதனையான விஷயம் என்னவென்றால், காவல்துறையில் உயர்பதவிகள் வகிக்கும் பெண் அதிகாரிகள் வெறும் 1% மட்டுமே என்பது.
கடந்த சில ஆண்டுகளாக, நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், காவல்துறையில் சரிபாதி நிலையில் இல்லாவிட்டாலும், கணிசமான அளவில் பெண்கள் இல்லாமல் இருப்பது பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இப்படியொரு நிலை தொடருமானால், எந்த அளவுக்குக் காவல்துறையால் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியும் என்கிற கேள்வி எழாமல் இல்லை. சமூகத்தில் பெண்களின் இடம்தான் என்ன என்றும் கேட்கத் தோன்றுகிறது.
"காமன்வெல்த் மனித உரிமை முனைப்பு' என்கிற அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவில் காவல்துறையில் பெண்களின் நிலை குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. ஜார்க்கண்ட் மாநில காவல்துறை சட்டத்தில், பெண் காவலர்கள் இன்னின்ன பணிகளில்தான் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று விதிமுறைகளே வகுத்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. பெண் கைதிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது, அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட சில பணிகளில் மட்டுமே பெண் காவலர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வரம்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்றால், எந்த அளவுக்குப் பெண்களுக்கு எதிரான மனோநிலை காவல்துறையில் காணப்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.
காவல்துறைக்குப் பெண்களைத் தேர்ந்தெடுக்கப்படுவதில் தொடங்கி, சரியான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. விளையாட்டு, என்.சி.சி. போன்றவற்றில் பள்ளிப் பருவத்திலேயே ஆர்வமுள்ள பெண்களும், முறையான உடற்பயிற்சி மூலம் ஆண்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும், எந்த சூழலிலும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவோ, தாக்குதலில் ஈடுபடவோ போதிய உடல் வலு உள்ளவர்களும்தான் காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கடுமையான விதிமுறை எதுவும் வகுக்கப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை.
சாதாரண கணக்கர் வேலைக்கோ, ஆயா வேலைக்கோ, ஆள் எடுப்பது போல, கல்வித் தகுதியும், வயது வரம்பும் மட்டுமே உறுதி செய்யப்பட்டு, மேலிடத்து அழுத்தங்களும் சிபாரிசுகளும்தான் பெரும்பாலான பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் காரணம் என்பது ஊரறிந்த உண்மை. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெண் காவலர்களுக்கான ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டிருப்பதாலும், மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டிருப்பதாலும், பெண் காவலர்கள் நியமிக்கப்படுகிறார்களே தவிர, காவல்துறைப் பணிக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்களா என்றால் இல்லை.
காவல்துறையில் பெண்கள் பணியாற்றுவது என்பது, இந்தியாவின் பல மாநிலங்களில் தங்களது சுயகெüரவத்தை இழந்த நிலையில்தான் என்பது அவர்களைக் கேட்டால் தெரியும். ஆணாதிக்கம் நிறைந்த காவல்துறையில், உயர்பதவிகளில் வெறும் 1% மட்டுமே பெண்கள் இருக்கும் நிலையில், மேலதிகாரிகளின் கொத்தடிமைகளாகத்தான் பெண் காவலர்கள் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களது சுயமரியாதையை இழந்து பணியாற்ற வேண்டிய சூழல் குறித்து, பொது வெளியில் யாரும் பேசுவதில்லை. காவல் நிலையங்களின் சுவர்களுக்கு வெளியே பெண் காவலர்களின் விசும்பல் சப்தம் கேட்பதில்லை.
இதற்குக் காரணம், காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான். காவல்துறை உயர் பதவிகளிலும், காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் நிலையிலும் சரிபாதி அளவு இல்லாவிட்டாலும், கணிசமான அளவில் தகுதியின் அடிப்படையில், பெண்கள் நியமிக்கப்பட்டால், அந்தத் துறையில் காணப்படும் ஆணாதிக்க மனோபாவத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். எண்ணிக்கை பலம் இருக்கும்போது, பெண் காவலர்கள் தங்களது உரிமைக்காகவும், கௌரவத்துக்காகவும் துணிந்து போராட முன்வருவார்கள்.
இப்போது காவல் நிலையத்துக்குப் போய் புகார் கொடுப்பதற்கே பெண்கள் தயங்கும் நிலை காணப்படுவதை மாற்ற வேண்டுமானால், காவல்துறையில் அதிக அளவில் பெண்களுக்கு இடமளிப்பது மட்டுமே தீர்வாக இருக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com