ஜனநாயக விரோதம்!

கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் நாடாளுமன்ற அவைகள் இரண்டும் செயல்படப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது.

கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் நாடாளுமன்ற அவைகள் இரண்டும் செயல்படப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வியின் பின்னணியில் ஆளும் கட்சியை எதிர்கொள்ளவும் ஆளும்கட்சியின் குறைபாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டவும் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்தது. பரபரப்பான கூட்டத்தொடருக்கு அரசியல் நோக்கர்கள் தயாராக இருந்த நிலையில், எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி நாடாளுமன்றம் கூச்சலிலும் குழப்பத்திலும் ஆழ்ந்து கிடக்கிறது.
இரு அவைகளும் காலையில் கூடிய சில நிமிடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு காரணத்துக்காக அவையின் மையப் பகுதியில் கூட்டமாகக் கூடி நின்று சபையை நடத்தவிடாமல் முடக்கும் அவலத்தை தொலைக்காட்சியில் தினந்தோறும் பார்க்கும்போது, மக்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதே அவநம்பிக்கை ஏற்படும் என்கிற அடிப்படை உணர்வுகூட இல்லாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. கடந்த மார்ச் 8-ஆம் தேதி மாநிலங்களவையில் மகளிர் தினம் என்பதால் சிறிது நேரம் அமளிதுமளிக்கு விடை கொடுக்கப்பட்டது. கட்சி வேறுபாடு இல்லாமல் மகளிர் மேம்பாடு குறித்து உறுப்பினர்கள் பேசியபோது, அதைத் தொடர்ந்து அமைதி ஏற்படும் என்கிற நம்பிக்கை துளிர்த்தது. ஆனால், அது முடிந்ததும் மீண்டும் பழையபடி அவை கூச்சலிலும் குழப்பத்திலும் ஆழ்ந்ததே தவிர, ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு இரு தரப்பும் தயாராக இல்லை. உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பிரச்னைகளையோ, பொதுநல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளையோ எழுப்ப இயலாத நிலை தொடர்கிறது.
அரசுத் தரப்பு பல மசோதாக்களைத் தாக்கல் செய்யவோ, நிறைவேற்றவோ முடியவில்லை. எதிர்க்கட்சிகளும் சரி, அரசின் தவறுகளை வெளிச்சம்போட்டுக் காட்டி அவற்றுக்குப் பொறுப்பேற்கச் செய்ய இயலவில்லை. 
நிதி மசோதா போன்ற மிக மிக முக்கியமான மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிதி மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் மத்திய அரசு 
ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாது என்பது, சுதந்திர இந்தியாவில் பெரும்பாலான ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் இருக்காது. விவாதம் இல்லாமல் நிறைவேற்றுவதற்கு விதிமுறை இருப்பதால், அதைப்பயன்படுத்தி அரசு நிதி மசோதாவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல.
நாடாளுமன்றத்தின் இந்த நிலைக்கு எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு குற்றம்சாட்டிவிட முடியாது. அனைவருமே இதற்கான பழியை ஏற்றுக்கொண்டாக வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கும்போது பாஜக அவையை முடக்கியது. இப்போது ஆட்சியில் இருக்கும்போது அவையை எப்படியாவது நடத்திவிடப் போராடுகிறது. அதேபோல, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது பாஜகவின் 
ஜனநாயக விரோதமான அவை முடக்கத்துக்காகக் குற்றம் சாட்டியது. இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதால் பாஜக கையாண்ட அதே முறையைப் பயன்படுத்தி, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த முற்பட்டிருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, மாநிலக் கட்சிகள் தங்களது மாநில பிரச்னைகளை முன்னிறுத்தி நாடாளுமன்ற அவை முடக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்னையை மேலும் சிக்கலாக்கி வருகின்றன.
யார் மீது பழி சுமத்துவது, யார் யாரை குற்றம் சாட்டுவது என்பதல்ல பிரச்னை. ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் இதுபோன்ற செயல்பாட்டு முடக்கத்துக்கு மக்களிடம் பதில் தந்தாக வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மக்கள் பிரச்னைகளை எழுப்பவும், விவாதிக்கவும், அரசின் கொள்கை முடிவுகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளவும், சட்டங்களை இயற்றவும்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அரசுத் தரப்பு எடுக்கும் கொள்கை முடிவுகளும் நிறைவேற்றும் திட்டங்களும் சரியான வழியில்தான் செயல்படுத்தப்படுகிறதா என்பதை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் விமர்சிப்பதன் மூலமும்தான் எதிர்க்கட்சிகள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். அந்த வாய்ப்பை அவர்களே இழப்பது என்பது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.
நாடாளுமன்றத்தின் இன்றைய பிரச்னை, நீரவ் மோடி மோசடியைத் தொடர்ந்து வங்கித் துறையில் நடைபெற்றிருக்கும் ஊழல்கள் குறித்து எந்த விதிமுறையின் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதுதான். அரசுத் தரப்பு வெறும் விவாதத்துடன் நிறுத்திகொள்ள வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் விவாதத்தைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்றும் பிடிவாதம் பிடிக்கின்றன. எதிர்க்கட்சிகள் நீரவ் மோடி மோசடியைக் குறித்து மட்டுமே குறிப்பிட்டு விவாதிக்க வேண்டும் என்றும், அரசு தரப்போ கடந்த சில ஆண்டுகளில் நடந்த ஒட்டுமொத்த வங்கி மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடிக்கின்றன. இந்தப் பிரச்னையில் ஆளும் பாஜகவும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கவோ, அரசை நிலைகுலைய வைக்கவோ முடியாது என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். அதேபோல, ஒரு மிகப்பெரிய வங்கி மோசடி நடந்திருக்கிறது. மக்கள் வரிப்பணம் கொள்ளை போயிருக்கிறது. இதில் நிதியமைச்சகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும், அதனால் அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னை குறித்த முழுமையான விவாதத்துக்கு அரசு தயாராக வேண்டுமே தவிர, பிரச்னையிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள நாடாளுமன்றக் குழப்பத்தில் குளிர்காய முற்படுவது சரியல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com