பாதை தவறுகிறோம்! 

அடுத்த நிதியாண்டுக்கான நிதி மசோதா, 21 திருத்தங்களுடன் எந்தவித விவாதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வெறும் முப்பதே நிமிடங்களில் ரூ.89.25 லட்சம் கோடிக்கான

அடுத்த நிதியாண்டுக்கான நிதி மசோதா, 21 திருத்தங்களுடன் எந்தவித விவாதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வெறும் முப்பதே நிமிடங்களில் ரூ.89.25 லட்சம் கோடிக்கான இந்திய அரசின் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மிகப்பெரிய களங்கம்.
 நாடாளுமன்றத்தின் அடிப்படை கடமையே, அரசு எப்படித் தனது வருவாயை உருவாக்கிக் கொள்கிறது என்பதையும், என்னென்ன செலவினங்களுக்காக எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதையும் கண்காணித்து, அதற்கு அனுமதி அளிப்பதுதான். தங்களுடைய பிரதிநிதிகளின் மூலம் அரசின் வருவாயையும் செலவினங்களையும் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் உருவானதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம்.
 குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் விவாதம் இல்லாமல் நிதி நிலை அறிக்கையை நிறைவேற்றிக்கொள்ள அரசியல் சாசனம் வழிகோலியிருக்கிறது என்பது உண்மைதான். மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிதி நிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டால்தான் அடுத்த நிதி ஆண்டுக்குப் பல்வேறு அமைச்சகங்கள் தங்கள் தேவைக்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். விவாதம் நீண்டுபோய் கெடு தேதி வரும்போது, நிதி மசோதாவை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் சாசனம் அப்படி ஒரு வழிமுறையை ஏற்படுத்தி இருக்கிறது.
 ஆண்டுக்கு ஆண்டு நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை குறித்த விவாத நேரம் குறைந்துகொண்டே வருகிறது. நிதி நிலை அறிக்கையின் சில பகுதிகள் நேரமின்மை காரணமாகவோ, வேறு காரணத்திற்காகவோ விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படுவதுண்டு. ஆனால், முதன்முறையாக முழு நிதி நிலை அறிக்கையும் எந்தவித விவாதத்துக்கும் உட்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்த ஆண்டுதான்.
 இதற்கு எந்தவித நியாயத்தையும் நரேந்திர மோடி அரசு கற்பிக்க முடியாது. காரணம், பட்ஜெட் கூட்டத் தொடர் இன்னும் மூன்று வாரம் தொடர இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியில் விவாதத்துக்குரிய பல அம்சங்களை உள்ளடக்கிய நிதி மசோதாவை சாதுர்யமாகக் குரல் வாக்கெடுப்பில் அரசு நிறைவேற்றிக் கொண்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. அரசுக்கு அவையில் அமைதி ஏற்படுத்துவதில் விருப்பம் இல்லை என்பதையும், அதன் மூலம் நிதி நிலை அறிக்கை விவாதிக்கப்படுவதை அனுமதிக்கும் எண்ணம் இல்லை என்பதையும்தான் இந்தச் செயல்பாடு வெளிப்படுத்தி இருக்கிறது.
 இந்தப் பிரச்னையில் அரசை மட்டும் குற்றம் கூறினால் அது சரியாக இருக்காது. எந்தவோர் அரசும் தான் விரும்பியதை நிறைவேற்றிக்கொள்ளத் துடிப்பது புதிதல்ல. அதை தடுப்பதற்காகத்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடமளிக்கப்பட்டு, விவாதிக்கவோ, குறைகூறவோ, அரசின் நிலைப்பாட்டை திருத்தவோ வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சந்தடிச் சாக்கில் நிதி மசோதாவை நிறைவேற்றிக் கொண்ட அரசின் செயல்பாட்டை அவைக்கு வெளியே விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், அரசுக்கு அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
 அரசை எதிர்ப்பதிலும், அவையை செயல்படாமல் முடக்குவதிலும் காங்கிரஸ் கட்சி குறியாக இருக்கிறதே தவிர, ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையையும் பாதிக்கும் நிதி மசோதா குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறையே காட்டவில்லை. மாநிலக் கட்சிகளாகட்டும், தங்களுடைய மாநில பிரச்னைகளை வலியுறுத்த முற்பட்டனவே தவிர, முக்கியமான நிதி மசோதா விவாதிக்கப்பட்டு, அரசு கொண்டுவர இருக்கும் சில ஜனநாயக விரோதமான திருத்தங்களையும், கொள்கை முடிவுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை. எதிர்க்கட்சிகள் கவலைப்படவில்லை என்பதால் ஆளும்கட்சியும் மகிழ்ச்சியுடன் விவாதம் இல்லாமல் நிதி மசோதாவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
 நரேந்திர மோடி அரசு, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். கடந்த 2016-இல் இதேபோல ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றிக் கொண்டதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தைத் தவிர்ப்பதும், சட்ட திட்டங்களையும் மரபுகளையும் மீறுவதையும் இந்த அரசு வழக்கமாக்கிக் கொண்டிருப்பதன் அடையாளம்தான் இப்போது நிதி மசோதாவையே விவாதமில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் செயல்பாடு.
 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடைகள் வாங்குவதற்குத் தடை இருந்தது. 2016 நிதி மசோதாவில் மோடி அரசு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தில் சில திருத்தங்களை ஏற்படுத்தி, அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடை வாங்குவதற்கு வழிகோலியது என்றால், இந்த நிதிநிலை அறிக்கையில் அந்தச் சட்டத்தை மேலும் திருத்தி, எந்தவிதக் கண்காணிப்பும் இல்லாமல் அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடை வாங்குவதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இனிமேல் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் லஞ்சப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்குவதில் எந்தவிதமான தடையும் இருக்காது! இது விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்னை என்று எதிர்க்கட்சிகள் கருதவில்லையா?
 குடியரசுத் தலைவர், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஊதியம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை உயர்த்திக் கொள்ளும் மக்கள் பிரதிநிதிகளின் இந்த ஜனநாயக முரண், எந்தவித விவாதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தால் நிதி மசோதாவின் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதே, இது குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாமா, கேள்வி எழுப்ப வேண்டாமா?
 பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதி கூறுவது போல, நாட்டு ராஜ நீதி மாந்தர் நன்கு செய்யவில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com