எது நிஜம்?

ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே டோக்காலாம் பகுதியில் 73 நாள்களுக்குப் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தியா, சிக்கிம்,

ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே டோக்காலாம் பகுதியில் 73 நாள்களுக்குப் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தியா, சிக்கிம், பூடான், சீனா ஆகியவற்றின் எல்லையில் இருக்கும் டோக்காலாம் பகுதியில் பூடான் எல்லை வழியாக சாலைப் பணியை மேற்கொள்ள சீனா முயன்றபோது, அதை இந்திய-பூடான் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமது வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். 
எப்போது வேண்டுமானாலும் போர் மூளக்கூடும் என்கிற நிலைமை ஏற்பட்டது. அப்போது இரண்டு தரப்புகளுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டு இந்திய-சீனப் படைகள் எல்லையை ஒட்டிய பகுதியில் இருந்து தத்தம் முகாம்களுக்குத் திரும்பின.
கடந்த ஒரு மாதமாகவேசீனா டோக்காலாம் பகுதியில் ஆக்கிரமிப்புக்குத் தயாராக தனது படைபலத்தை அதிகரித்து வருகிறது என்கிற செய்தி இப்போது பரவலாகவே வலம்வந்து கொண்டிருக்கிறது. 
சமீபத்தில் டோக்காலாம் பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் சீனா எல்லையை ஒட்டிய தனது பகுதிகளில் பீரங்கிகள், ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதும், 7 ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துள்ளதும் தெரிய வந்திருக்கிறது. 
இது குறித்துக் கேட்டபோது, குளிர்காலத்தை எதிர்கொள்வதற்காக அப்பகுதியில் சீனா ஹெலிகாப்டர் இறங்கும் தளம், ராணுவ வீரர்களுக்கான கூடாரம் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா 
சீதாராமன் விளக்கம் அளித்திருக்கிறார். டோக்காலாம் உள்பட நமது எல்லைப் பகுதியில் எந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள நமது ராணுவம் தயாராகவே இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ராணுவத்தை நவீனமயமாக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார்.
இந்தியா எந்தவித சவாலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருப்பதை, நாடாளுமன்றத்தில் இந்திய ராணுவம் குறித்து அரசு தாக்கல் செய்திருக்கும் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துவதாக இல்லை. பாதுகாப்பு அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான ராணுவத்துக்கான அரசின் ஒதுக்கீடு, இந்தியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை சந்திப்பதற்குப் போதுமானதாக இல்லை. 
இந்திய ராணுவத்தில் போதுமான அளவு தளவாடங்கள், வெடிமருந்துகள், உதிரிபாகங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், ராணுவத் தளவாடங்களும், காலாவதியான பழைய தொழில்நுட்பத்துடன் காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நிலைக் குழுவின் முன் இந்திய ராணுவத்தின் சார்பில் ஆஜரான லெப்டினன்ட் ஜெனரல் சரத் சந்த் இதுகுறித்த புள்ளிவிவரங்களை அளித்திருக்கிறார்.
ராணுவத் தளவாட நவீனமயமாக்கலுக்கு 125 திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், ராணுவ நவீனமயமாக்கலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் ரூ.21,338 கோடி அதற்குப் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அதேபோல, பத்து நாள் தொடர்ந்து கடுமையான போர் நிகழ்ந்தால் அதற்குத் தேவையான அவசரகாலத் தளவாடக் கொள்முதலுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதையும், பாதுகாப்பு அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.
2018-19 நிதியாண்டுக்கான ராணுவ ஒதுக்கீடு ரூ. 2,95,511 கோடி. அதில் தளவாட நவீனமயமாக்கல் உள்ளிட்ட ராணுவத்தின் முதலீட்டுக்கான ஒதுக்கீடு வெறும் ரூ. 99, 947 கோடி மட்டுமே. இது ராணுவத்தின் அடிப்படைத் தேவைகளான துப்பாக்கிகள், பீரங்கிகள், பீரங்கி வாகனங்கள் உள்ளிட்ட புதிய தளவாடங்களுக்கே போதுமானதாக இருக்காது என்கிறது ராணுவத் தரப்பு. 
நிதி ஒதுக்கீடு இல்லாததால் அடுத்த ஓராண்டில் ராணுவத்துக்கு வேண்டிய துப்பாக்கிகள், தாக்குதலுக்கான ஹெலிகாப்டர்கள், தளவாடங்கள் உள்ளிட்ட புதிய கொள்முதல்களை மேற்கொள்ள முடியாது. மேலும், மத்திய அரசின் 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையும், 'ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்' ஒப்பந்தமும், ராணுவத்தின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவினத்தைப் பலமடங்கு அதிகரித்து விடுகிறது. இவை மட்டுமே மொத்த பாதுகாப்பு செலவினத்தில் 56% எனும்போது, புதிய தளவாடங்களை வாங்குவதற்கும் ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் நிதியாதாரம் இல்லாத நிலை காணப்படுகிறது.
இந்திய அரசின் மொத்த செலவினத்தில் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு 2018-19-இல் வெறும் 12.1% மட்டுமே. பாகிஸ்தானில் இதுவே 25% முதல் 30% வரை. அதேபோல இந்திய மக்கள் தொகையில் 1000 பேருக்கு 1.25 ராணுவ வீரர்கள்தான் இருக்கிறார்கள். இதுவே சீனாவில் 2.23 பேராகவும், பாகிஸ்தானில் 4.25 பேராகவும் காணப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு செலவுக்கான ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது. 1962-க்குப் பிறகு இந்த ஆண்டுதான் முதன்முறையாக மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 1.57% ஆகக் குறைந்திருக்கிறது.
நாம் நமது பாதுகாப்புக்குச் செய்யும் ஒதுக்கீடு குறைந்துவரும் அதே நேரத்தில் உலகில் இரண்டாவது அதிகமாக ராணுவ நிதி ஒதுக்கீட்டை சீனா செய்து வருகிறது. 2017-இல் 7% ஆக இருந்த சீனாவின் ராணுவ நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு 8.1 % ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீனா மிக அதிகமாக ராணுவத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரித்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சீனாவின் 175 பில்லியன் டாலர் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, 2018-19-இல் வெறும் 47 பில்லியன் டாலர்தான் நாம் ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.
இந்தியா எந்தப் பாதுகாப்பு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது உண்மையாக இருக்குமேயானால், மகிழ்ச்சி!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com