கவனம், காச நோய்த் தொற்று!

ஆண்டுதோறும் மார்ச் 24-ஆம் தேதியை உலக காச நோய் தினமாக அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும்கூட, உலகம் இந்த பாதிப்புக்கு மேலும் மேலும் ஆளாகிக் கொண்டிருக்கிறதே

ஆண்டுதோறும் மார்ச் 24-ஆம் தேதியை உலக காச நோய் தினமாக அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும்கூட, உலகம் இந்த பாதிப்புக்கு மேலும் மேலும் ஆளாகிக் கொண்டிருக்கிறதே தவிர காச நோயின் வீரியம் குறைவதாகத் தெரியவில்லை. 2025-க்குள் காச நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என மத்திய அரசும் தன் பங்குக்கு முனைப்பு காட்டுகிறது. தேசிய அளவில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள காச நோயாளிகள் ஊட்டச்சத்துள்ள உணவு பெறுவதற்காக மாதம் ரூ.500 உதவித் தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
காச நோய் கண்டறியும் கருவி பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட இருக்கின்றன. ஒவ்வொரு வாகனமும் தலா 16 மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வாரம் கிராமம் கிராமமாகச் சுற்றிவரத் திட்டமிடப்பட்டுள்ளது. நோயாளிகள் ரிஃபாம்பிசின் என்கிற காச நோய்க்கான ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி உள்ளவர்களா என்பதை கண்டறிந்து தொடக்கத்திலேயே சரியான சிகிச்சை தொடங்கப்படுவதை உறுதிப்படுத்துவதுதான் நோக்கம். காச நோய் விழிப்புணர்வு மற்றும் நேரடி சிகிச்சைக்காக அனுப்பப்படும் இரண்டு வாகனங்கள், தமிழகத்தில் காச நோய் குறித்த அடிப்படைப் புள்ளிவிவரங்களைத் திரட்ட உதவியாக இருக்கும். 
இந்த அளவுக்குக் காச நோய் குறித்த விழிப்புணர்வுக்கும் சிகிச்சைக்கும் தேவை இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது. 2017-இல் சர்வதேச அளவில் காச நோய் குறித்து ஒரு மிகப்பெரிய ஆய்வும் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு அதன் புள்ளிவிவரங்கள் வெளியாகியிருக்கின்றன. உலகில் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்களில் 28 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனும்போது, காச நோய் தடுப்பு முயற்சிகளில் மத்திய - மாநில அரசுகள் முனைந்து செயல்படுவதன் அவசியம் புரியும்.
அரைநூற்றாண்டுக்கு முன்னால் இருந்த நிலைமை அல்ல இப்போது. முன்பு காச நோய் நோயாளிகளுக்கு ரிஃபாம்பிசின் என்கிற மருந்து வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், காச நோய் பெரும்பாலும் நுரையீரல் தொடர்புடையதாகவே இருந்து வந்தது. இப்போது எலும்பு உள்பட மனித உடலின் பல்வேறு பகுதிகளைக் காச நோய் தாக்கும் அவலம் உருவாகியிருக்கிறது. அதேபோல, ரிஃபாம்பிசின் என்கிற ஆன்டிபயாட்டிக் மருந்துக்குக் காச நோய் கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்டன. எல்லா நோயாளிகளுக்கும் ரிஃபாம்பிசின் பயனளிக்காத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 2,666 நோயாளிகள் ரிஃபாம்பிசின் மட்டுமல்ல, எந்தவித மருந்துக்கும் கட்டுப்படாத நிலையை காச நோய்க் கிருமிகள் பெற்றுவிட்டன. ஏறத்தாழ 28 சதவீதம் நோயாளிகள் காச நோய்க்கான ஏதாவதொரு மருந்துக்கு எதிர்ப்பு சக்தி பெற்றவர்களாகவும், 6.19 சதவீதம் நோயாளிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட காச நோய் மருந்துக்கு கட்டுப்படாதவர்களாகவும் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 
உலக அளவில் 1,47,000 காச நோயாளிகள் எந்தவோர் ஆன்டிபயாட்டிக் மருந்துக்கும் கட்டுப்படாதவர்களாக காணப்படுகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் கண்டறியப்பட்ட 18 லட்சம் காச நோயாளிகளில் 38,650 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட காச நோய் மருந்துக்கு கட்டுப்படாத நோயாளிகளாக அறியப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் இந்தியாவில் 4,23,000 பேர் காச நோயால் மரணித்திருக்கிறார்கள் எனும்போது எந்த அளவுக்குக் காச நோய் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருக்கிறது என்பதை உணர முடியும்.
மேலே கண்ட புள்ளிவிவரங்கள் முழுமையாக இருக்க வழியில்லை. காரணம், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துமனைகளிலும் மாற்று சிகிச்சை மருத்துவ முறைகளிலும் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் குறித்த விவரங்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. தனியார் மருத்துவர்களோ, மருந்தாளுநர்களோ தங்களை அணுகும் காச நோயாளிகள் குறித்து உடனடியாக அரசுக்குத் தெரிவிக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இரண்டாண்டு சிறை தண்டனை வழங்க அரசு சட்டம் தீட்டியிருந்தாலும்கூட, அவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. 
ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் காச நோய்க் கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெறுவதில் பிராய்லர் கோழிகளுக்கு முக்கியமான பங்கு உண்டு என்பது பலருக்கும் தெரியாது. கோழிப் பண்ணைகளில் பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப்படுவதும், அதைப் பரவலாக மக்கள் வாங்கி உட்கொள்வதும் அதிகரித்திருக்கிறது. இதனால், மனித உடலில் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு விடுகிறது. மருந்துக்கு எதிர்ப்பு சக்தி பெற்றுள்ள காச நோய்க் கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவும்போது, அவர்களும் இதே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 
காச நோய் என்பது காற்று வழியாகப் பரவும் தொற்று. இந்த தொற்று எந்தவித சிகிச்சைக்கும் கட்டுப்படாத நிலைக்கு வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது. நாம் இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால், பிளேக், காலரா போல இதுவும் மிகப்பெரிய கூட்டு உயிர்க்கொல்லியாக மனித இனத்தை அச்சுறுத்தக்கூடும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com