2019-க்கான முன்னோட்டம்?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மே 15-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மே 15-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதுவரை எட்டு பேரணிகளில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் நான்கு முறை கடந்த சில மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்துக்கு வந்து போயிருக்கிறார்கள். 
முதல்வர் சித்தராமையாவும், முன்னாள் முதல்வரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பாவும் இந்தத் தேர்தலில் நேருக்கு நேர் மோதுகிறார்கள் என்றாலும், முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவும், அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் தேர்தல் களத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகள் அளவுக்கு பலம் பொருந்தியதாக இல்லாவிட்டாலும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் தனிச்செல்வாக்குடன் விளங்குகிறது. இதற்கு முந்தைய சில தேர்தல்களைப் போலவே, இந்தத் தேர்தலிலும் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால் வியப்படையத் தேவையில்லை.
பாஜகவின் முதல்வர் வேட்பாளரான பி.எஸ். எடியூரப்பா, 2008-இல் பாஜக கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு முக்கியமான காரணம். கனிமவள சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டிலும், நிலப் பரிமாற்ற முறைகேட்டிலும் குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகிய எடியூரப்பா, கர்நாடக ஜனதா பக்ஷ என்கிற கட்சியைத் தொடங்கி 2013 தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததற்கும் அதுதான் காரணம்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தனது கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவில் எடியூரப்பா மீண்டும் இணைந்ததுதான் அந்தக் கட்சி கணிசமான தொகுதிகளை பெற உதவியது. எடியூரப்பாவின் உதவி இல்லாமல் கர்நாடக அரசியலில் பாஜகவால் காங்கிரஸை எதிர்கொள்ள முடியாது என்பதைப் புரிந்துகொண்ட கட்சித் தலைமை, அவரை முதல்வர் வேட்பாளராக்கி இருக்கிறது. எடியூரப்பாவின் தலைமையில் களமிறங்கும் பாஜக, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை விமர்சித்தால் அது எடுபடாது என்பதுதான் பாஜகவின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கும்.
காங்கிரஸைப் பொருத்தவரை சித்தராமையா கடந்த ஐந்து ஆண்டுகளில் கர்நாடக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாகவும், ராஜதந்திரியாகவும் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். 1985-இல் இரண்டாவது முறையாகத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டேவுக்குப் பிறகு, கடந்த 33 ஆண்டுகளில் வேறு எந்த முதல்வரும் தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்நாடகத்தில் முதல்வரானது இல்லை. இந்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுமானால், அது சித்தராமையாவைப் பொருத்தவரை ஒரு மிகப்பெரிய தனிப்பட்ட சாதனையாக இருக்கும்.
எடியூரப்பா தலைமையிலான பாஜகவின் வாக்குவங்கி எனக் கருதப்படும் லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்து, அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கியிருப்பது முதல்வர் சித்தராமையாவின் தேர்தல் கணக்குகளில் ஒன்று. அதேபோல, கர்நாடக மாநிலத்திற்கென்று தனிக் கொடியை அறிவித்தது, 'இந்து-இந்தி கட்சி' என்று பரவலாக அறியப்படும் பாஜகவை பலவீனப்படுத்த, மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தியில் பெயர் பலகை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது என்று கர்நாடக மாநில உணர்வை முதல்வர் சித்தராமையா முன்னிறுத்தி இருப்பதும் தேர்தல் கண்ணோட்டத்துடன்தான். 
காங்கிரஸுக்கும் சரி, பாஜகவுக்கும் சரி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி என்பது மிகவும் இன்றியமையாதது. காங்கிரஸைப் பொருத்தவரை பஞ்சாப், கர்நாடகம் ஆகிய இரண்டு மட்டுமே அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும் பெரிய மாநிலங்கள். மணிப்பூரும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பவை அல்ல. கர்நாடகத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமையும். அதுமட்டுமல்லாமல், 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தேவையான பணபலத்தை கர்நாடகத்திலிருந்து காங்கிரஸ் பெறுவதற்கு வழிகோலும்.
வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி பெற்றாலும்கூட பாஜக இப்போதும் வடமாநில கட்சியாகத்தான் காட்சியளிக்கிறது. தென்னிந்தியாவில் பாஜக வலுவாகக் காலூன்ற வேண்டுமானால், அதன் நுழைவாயிலாகக் கர்நாடகம் அமையும் என்கிற அந்தக் கட்சியின் நீண்டநாள் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை. இந்த முறை கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்குமேயானால், அது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பாஜக கட்சியினருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.
கர்நாடக சட்டப்பேரவைக்கான 224 இடங்களில் பெரும்பான்மை பெற்று எந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறது என்பது மட்டுமல்ல இந்தத் தேர்தலின் முக்கியத்துவம். 2019 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகக் கர்நாடகம் இருக்கக்கூடும் என்பதால்தான் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் கர்நாடகத்தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com