நயவஞ்சகம்!

காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் ஒரு செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம்

காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் ஒரு செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு கிடையாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒரு செயல் திட்டத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது.
நியாயமாகப் பார்த்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவிரிப் பிரச்னைக்கு முழுமையான தீர்வாக இருந்திருக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு வெளியானபோது கர்நாடகத்தின் பெரும்பாலான ஊடகங்களும் அரசியல் தலைவர்களுமே கூட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். அப்படியும்கூட மத்திய அரசு ஏன் இன்னும் தயக்கம் காட்டுகிறது என்பதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
பிப்ரவரி 5, 2007-இல் வெளியான நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் இருந்து தரப்பட வேண்டும். அப்போது தமிழகம் கூடுதலாக 70 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழகம் கேட்ட கூடுதல் தண்ணீரும் கிடைக்கவில்லை, நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த 192 டி.எம்.சி. தண்ணீரும் கிடைக்கவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 
அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தத் தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதில் தமிழகம் திருப்தி அடையவில்லை என்றாலும், கர்நாடகம் பரவலாக வரவேற்றது. அதற்குக் காரணம், கர்நாடகத்துக்கான ஒதுக்கீட்டை 14. 75 டி.எம்.சி அதிகரித்து, 284.75 டி.எம்.சி.யாகத் தீர்ப்பு அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், முந்தைய காவிரி நடுவர் மன்றம் குடிநீர் தேவைக்காக பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தமாக அனுமதித்த 1.75 டி.எம்.சி.யை இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 4.75 டி.எம்.சி.யாக அதிகரித்திருக்கிறது. 
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று தெளிவில்லாமல் கூறியபோது, அப்போதே இந்தத் 'திட்டம்' (ஸ்கீம்) என்கிற வார்த்தையின் அடிப்படையில் கர்நாடகம் பிரச்னை எழுப்பக்கூடும் என்கிற அச்சம் எழத்தான் செய்தது. ஆனால், பிரச்னையை எழுப்புவது கர்நாடக அரசு அல்ல, மத்திய அரசு என்பதுதான் எதிர்பாராத திருப்பம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், கடந்த சில நாள்களாகவே தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற முடக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி இருந்தும்கூட இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசு கவலைப்படவோ, தமிழக எம்.பி.க்களை அழைத்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ முற்படவில்லை.
கெடு தேதி முடிந்துவிட்ட நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுகிறது. அதேநேரத்தில் பாஜக தரப்பில், தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'திட்டம்' என்பதற்கு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோர முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. 
'திட்டம்' என்பதற்கு என்ன பொருள் என்று உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க வேண்டுமென்றால், அதற்குக் கடந்த ஆறுவார காலம் தாமதிப்பானேன்? சட்ட அமைச்சகம் அரசு தலைமை வழக்குரைஞர் மூலம் உடனடியாக ஒரு மனுவைத் தாக்கல் செய்து, திட்டம் என்பதற்கு விளக்கம் கோரியிருக்கலாமே?
தமிழகமும் கர்நாடகமும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காதபோது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது அதற்கு நிகரான குழுவோ அமைப்பதை விட்டுவிட்டுத் தேவையில்லாமல் பிரச்னையை இழுத்தடிப்பதன் பின்னால் அரசியலைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதில் அல்லவா முனைப்பு காட்டியிருக்க வேண்டும்?
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநில மக்களின் நலனை பாஜக பேணுகிறது என்பதை வெளிப்படுத்தத்தான் மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது என்கிற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கக்கூடும். ஒருவேளை மத்திய அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற முற்பட்டால், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அதையே பாஜகவுக்கு எதிராகப் பிரச்னை ஆக்கிவிடுமோ என்கிற அச்சமும்கூட இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். 
அது காங்கிரஸ் ஆனாலும், பாஜகவானாலும் அந்தக் கட்சிகளின் மத்தியத் தலைமைகள் தமிழகத்தின் நியாயத்தை உணர்ந்து ஆதரவளிக்கப் போவதில்லை. மாறி மாறி திராவிடக் கட்சிகள் கோலோச்சும் தமிழகத்தில், தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் அக்கறை காட்டாததில் வியப்பில்லை. கர்நாடகத்தில் தங்களது செல்வாக்குக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு தமிழகத்தை ஆதரிப்பதால் அந்த இரண்டு கட்சிகளுக்குமே எந்தவித அரசியல் ஆதாயமும் இல்லை என்பதுதான் அதற்குக் காரணம். 
'தமிழ்நாட்டுக்கு காவிரித் தண்ணீர் கிடைக்காது' என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தபோது, தமிழகத்தில் அனைவருக்கும் கோபமும் எரிச்சலும் எழுந்தது. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால், அவர் சொல்வது உண்மையாகிவிடும் போலிருக்கிறது. இனிமேல் என்ன செய்யப் போகிறோம்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com