கெளரவம் பார்க்கலாகாது!

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றிருக்கிறார். இந்தியாவில் முதல்முறையாக பெண் வழக்குரைஞர் ஒருவர்

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றிருக்கிறார். இந்தியாவில் முதல்முறையாக பெண் வழக்குரைஞர் ஒருவர் நேரடியாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது வரவேற்கப்பட வேண்டிய முடிவு. இதனால், உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்கிறது.
இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியம் பரிந்துரைத்தபோது, கூடவே உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பின் பெயரையும் பரிந்துரைத்திருந்தது. ஆனால் மத்திய அரசு கே.எம். ஜோசப்பின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அகில இந்திய நீதிபதிகளுடைய பட்டியலில் 11 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மூப்பு அடிப்படையில் அவரைவிடத் தகுதி பெற்றவர்கள் என்பதும், ஏற்கெனவே கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், இன்னொருவருக்கும் அந்த வாய்ப்பை அளிக்கத் தேவையில்லை என்பதும் தனது முடிவுக்கு மத்திய அரசு தெரிவித்திருக்கும் காரணங்கள். 
ஒருவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ நியமிக்கப்படும்போது மட்டுமே பணி மூப்பு அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் பணி மூப்பு மட்டுமே தகுதி என்கிற வரைமுறை பின்பற்றப்படுவதில்லை. 
இதற்கு முன்னால் எத்தனையோ மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளும், தலைமை நீதிபதிகளும் தவிர்க்கப்பட்டு, தகுதியும் திறமையும் உள்ள, அவர்களைவிடக் குறைந்த பணி அனுபவம் உள்ளவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு கொலீஜியத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்ற கொலீஜியம் புதிய திறமைசாலிகளை அடையாளம் கண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க எந்தவித விதிமுறையும் தடையாக இல்லை.
எல்லா மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. நீதிபதி ஜோசப் உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு தகுதி ஏற்றம் பெறுவதன் மூலம் கேரளத்திலிருந்து இரண்டு நீதிபதிகள் இருப்பார்கள் என்கிற வாதமும் அர்த்தமில்லாதது. இதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்த மூன்று பேர் நீதிபதிகளாக இருந்ததுண்டு. அதேபோல பல்வேறு மாநிலங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்டிருந்த வரலாறும் உண்டு. 
பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையை மத்திய சட்ட அமைச்சர் முன்மொழிந்ததை பல்வேறு மாநிலங்கள் தங்களுக்குச் சாதகமாக்க முற்படும் ஆபத்து இருக்கிறது. இது உச்சநீதிமன்ற செயல்பாட்டில் அரசியல்வாதிகள் தலையிடுவதற்கும், நீதிபதிகள் நியமனம் குறித்து அரசியல் கட்சிகளும் மாநில அரசுகளும் கருத்துத் தெரிவிப்பதற்கும் இடமளித்துவிடும் என்பதை மத்திய சட்ட அமைச்சர் ஏன் உணரவில்லை என்று புரியவில்லை.
உத்தராகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதற்கு அரசியலும் அவர் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும்தான் காரணம் என்கிற 
குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. 2016-இல் மத்திய அரசு உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியபோது, அந்த உத்தரவை உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தனது ஆணையை ரத்து செய்து அவமானப்படுத்தியதன் பின்னணியில்தான் நீதிபதி ஜோசப்பின் பதவி உயர்வுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்கிற விமர்சனம் மறுக்கப்படவில்லை. 
கே.எம். ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றால் தங்களது அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வழங்குவார், செயல்படுவார் என்று மத்திய அரசு கருதுமானால் அதைவிட ஜனநாயக விரோதமான சிந்தனை எதுவும் இருக்க முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கான தகுதியும் திறமையும் ஒருவருக்கு இருக்கிறதா என்பதுதான் பதவி நியமனத்திற்கு அளவுகோலாக இருக்க 
முடியுமே தவிர, அரசுக்கு சாதகமானவரா இல்லையா என்பது தகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடுகள் முடக்கப்படும் என்பது மட்டுமல்ல, அரசின் தவறுகள் தட்டிக்கேட்கப்படாத சூழல் ஏற்பட்டுவிடும். 
உச்சநீதிமன்றத்தில் இப்போது 24 நீதிபதிகள்தான் இருக்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 31. இந்த ஆண்டில் ஆறு நீதிபதிகள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள். உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 1,079 நீதிபதி பதவிகளில் 410 பதவிகள் காலியாகவே இருக்கின்றன. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தை விரைவாக்கி தேங்கிக் கிடக்கும் வழக்குகளை பைசல் செய்வதில் முனைப்பு காட்டுவதை விட்டுவிட்டு கொலீஜியத்தின் பரிந்துரையை கெளரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு பதவி நியமனங்களை தள்ளிப்போடுவதும், நிராகரிப்பதும் அரசுக்கு அழகல்ல.
கொலீஜியம் இந்தப் பிரச்னையை எப்படி அணுகப்போகிறது என்பதுதான் அடுத்த கேள்வி. உத்தராகண்ட் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், எல்லா விதத்திலும் ஏனைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மூத்த நீதிபதிகளைக் காட்டிலும் தகுதியும் திறமையும் உள்ளவர் என்று கொலீஜியம் உறுதியாக நம்புமேயானால், அவரது பெயரை தவிர்க்க முடியாது என்று சட்ட அமைச்சகத்துக்கு மீண்டும் அனுப்ப முடியும். அப்படி அனுப்பினால், பிரச்னையை வளர்க்காமல், கெளரவம் பார்க்காமல் கொலீஜியத்தின் அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதுதான் அரசுக்குப் பெருமை சேர்க்கும். கொலீஜியத்தின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்ளாமல் முட்டுக்கட்டை போடுவது சரியான அணுகுமுறை அல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com