மாற்றமா? தொடர்ச்சியா?

கியூபாவில் தலைமை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 86 வயது ரவுல் காஸ்ட்ரோ கடந்த மாதம் தனது அதிபர் பதவியைத் துறந்து,

கியூபாவில் தலைமை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 86 வயது ரவுல் காஸ்ட்ரோ கடந்த மாதம் தனது அதிபர் பதவியைத் துறந்து, துணை அதிபராக இருந்த மிகெல் மரியோ டியாஸ் கனேலிடம் ஒப்படைத்திருக்கிறார். கடந்த 2013-இல் இரண்டாவது முறையாக ரவுல் காஸ்ட்ரோ அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டபோதே தான் அடுத்த முறை அதிபர் பதவியில் தொடரப் போவதில்லை என்பதை அறிவித்திருந்தார்.
 12 ஆண்டுகளுக்கு முன்பு ஃபிடல் காஸ்ட்ரோ தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் அதிகாரத்தை ஒப்படைத்து ஒதுங்கிக் கொண்டது, அவரது தலைமுறை கம்யூனிஸத் தலைவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. இப்போது அவரது அடிச்சுவட்டில் ரவுல் காஸ்ட்ரோவும் கியூபாவின் முதல் துணை அதிபர் மிகெல் டியாஸ் கனேலிடம் அதிபர் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். 2021-ஆம் ஆண்டு வரை கட்சித் தலைவராகவும் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பிலும் ரவுல் காஸ்ட்ரோ தொடரப் போகிறார் என்பதால், அவரது கண்காணிப்பிலும் வழிகாட்டுதலிலும்தான் அதிபர் மிகெல் டியாஸ் கனேலின் ஆட்சி தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
 ஃபிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட புரட்சியாளர்கள் சேகுவேராவின் துணையோடு மெக்ஸிகோ நீரிணையையும், கரீபியன் கடலையும், கிரான்மா என்கிற தோணியில் கடந்து கியூபாவின் தலைநகரான ஹவானாவை 26 ஜூலை, 1959-இல் கைப்பற்றி கியூபாவில் கம்யூனிஸ ஆட்சியை நிறுவினார்கள். அந்த புரட்சி நடந்தபோது இப்போது அதிபராக பதவி ஏற்றிருக்கும் டியாஸ் கனேல் பிறக்கவே இல்லை.
 ஒரு புதிய தலைமுறையிடம் கியூபாவின் தலைமைப் பொறுப்பு இப்போது கைமாறியிருக்கிறது என்பதுதான் இந்த ஆட்சி மாற்றத்தின் முக்கியத்துவத்திற்கு காரணம். மேலும், காஸ்ட்ரோ சகோதரர்களின் 60 ஆண்டு ஆட்சி கியூபாவில் முடிவுக்கு வந்திருக்கிறது
 என்பதும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.
 1960 ஏப்ரல் 20-ஆம் தேதி ஒரு சாதாரண ஆலைத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த டியாஸ் கனேல், பொறியாளர் பட்டம் பெற்றவர். தனது 20-ஆவது வயதிலேயே கம்யூனிஸ இளைஞர் அணியின் உறுப்பினராக சான்டா கிளாரா நகரத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். 33-ஆவது வயதில் சான்டா கிளாரா கம்யூனிஸ இளைஞர் அணியின் செயலாளராகி, பின்னர் பல்வேறு அரசுப் பதவிகள் வகித்து, வில்லா கிளாரா மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானவர்.
 2003-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பியூரோ உறுப்பினராக பதவி உயர்வு பெற்ற டியாஸ் கனேல், 2009 மே மாதம் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2013-இல் ரவுல் காஸ்ட்ரோவின் கீழ் துணை அதிபரான டியாஸ் கனேல், எளிமையான, எல்லோரிடமும் அதிகம் பழகாத, தனது கடமையில் தவறாத கடும் உழைப்பாளி. பெரும்பாலான கியூபா மக்களுக்கு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத, ஆளுமைத் திறன் இல்லாத துணை அதிபராகத்தான் அவர் இதுவரை அறியப்பட்டிருக்கிறார்.
 மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவி ஏற்றுக்கொண்டதைப் போலவே, இப்போது டியாஸ் கனேலும் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் கியூபாவின் அதிபராகப் பதவி ஏற்கிறார். கியூபாவின் பொருளாதாரம் சரிந்து கிடக்கிறது. அண்டை நாடுகளைவிட எல்லாவிதத்திலும் பின்தங்கியிருக்கும் நிலையில், இத்தனை நாள் கியூபாவை ஆதரித்து வந்த வெனிசுலாவும் இப்போது ஆதரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து எந்தவித ஆதரவும் பெறமுடியாத நிலையில் கியூபாவின் வருங்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
 கியூபாவின் முக்கியமான ஏற்றுமதியான நிக்கலும் சர்க்கரையும் சர்வதேசச் சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. கியூபாவைத் தாக்கிய "இர்மா' புயல், 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.84,500 கோடி) பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்ல, அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக்கூட வழியில்லாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. வறுமையின் காரணமாக கியூபாவிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளுக்கு வேலை தேடி வெளியேறி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடை கியூபாவைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.
 மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அரசின் மீதான அதிருப்தியும், வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாத ரவுல் காஸ்ட்ரோ அரசின் சீர்திருத்தங்களும் கியூபா எதிர்கொள்ளும் பிரச்னைகள். அந்நிய முதலீடும், தனியார் துறை ஊக்குவிப்பும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியால் தடுக்கப்பட்ட நிலையில், எந்தவிதப் பொருளாதார மாற்றமோ, வாழ்க்கைத் தரத்தில் உயர்வோ, வளர்ச்சியோ இல்லாத தேக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையெல்லாம் மிகெல் டியாஸ் கனேல் எப்படி எதிர்கொள்ளப் போகிறார், பிரச்னைகளுக்கு எப்படி விடை காணப்போகிறார் என்பது குறித்து எந்தவிதமான தெளிவான அறிகுறியும் வெளிப்படுத்தப்படவில்லை.
 அதிபர் டியாஸ் கனேலின் உடனடி சவால், சிதைந்து கிடக்கும் கியூபாவின் பொருளாதாரத்தை சீர்படுத்துவது. அந்நிய முதலீட்டுக்கும் தனியார்மயத்துக்கும் வழிகோலினால் மட்டுமே கியூபாவைத் தலை நிமிர்த்த முடியும் என்பதுதான் உண்மை. 2010-இல் ரவுல் காஸ்ட்ரோ "நாம் தடம் மாற வேண்டும் அல்லது மூழ்க வேண்டும்' என்று கூறிய வார்த்தைகள் இப்போது புதிய அதிபர் மிகெல் டியாஸ் கனேலுக்கும் பொருந்தும். அவர் எடுக்க இருக்கும் முடிவுகள்தான், இப்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் உண்மையான மாற்றமா, அல்லது வெறும் தொடர்ச்சியா என்பதைத் தெளிவுபடுத்தும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com