மாண்பு குலைக்கப்படுகிறது!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி, குறிப்பாக அதன் மூத்தத் தலைவரும் வழக்குரைஞருமான கபில் சிபல், வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியிருப்பதன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி, குறிப்பாக அதன் மூத்தத் தலைவரும் வழக்குரைஞருமான கபில் சிபல், வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியிருப்பதன் காரணம் புரியவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், உச்சநீதிமன்ற வழக்குரைஞர்களுமான ப. சிதம்பரம், சல்மான் குர்ஷித், அஸ்வினி குமார் ஆகியோரும் சரி, இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் முனைப்புக் காட்டத் தேவையில்லை என்று கருத்து கூறியும்கூட, பதவி நீக்கும் தீர்மானத்தை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருப்பது ஏதாவது மறைமுகக் காரணம் இருக்கக்கூடுமோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அண்மையில் அளித்தனர். அதைப் பரிசீலித்த மாநிலங்களவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு, அவர்களது கோரிக்கைக்கு வலுவான காரணங்கள் இல்லை என்பதால் அதை நிராகரித்தார். அந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். தாங்கள் குற்றம் சாட்டுவது தலைமை நீதிபதியின் மீது என்பதால், இரண்டாவது இடத்தில் இருக்கும் நீதிபதி செலமேஸ்வர்தான் தங்களது வழக்கை விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
ஒரு வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதையும், எந்த வழக்கை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும் என்பதால், இப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டிருக்கிறது. பதவி நீக்கும் தீர்மானத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை. இன்னார்தான் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுப்பவர்கள் கோருவதோ, நிர்பந்திப்பதோ கேள்விப்படாத ஒன்று. 
மேலும், குடியரசு துணைத் தலைவரும், மேலவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு பதவி நீக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாததும் விமர்சிக்கப்படுகிறது. அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்றும், போதுமான உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பதவி நீக்கத் தீர்மானத்தை முன்மொழிந்தால், அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு உத்தரவிடுவதும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்வதும்தான் அவரது கடமை என்பது அவர்கள் வாதம்.
இந்திய வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் ஆரம்பக்கட்டத்திலேயே இதுபோல் நிராகரிக்கப்பட்டதில்லை என்று கபில் சிபல் தெரிவித்திருக்கிறார். இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலங்களவைத் தலைவருக்கு கிடையாது என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் வாதம். இவை இரண்டுமே தவறு.
1964-இல் பண்டித ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது நீதிபதிகள் (விசாரணை) மசோதாவை முதன்முதலில் அறிமுகப்படுத்த அரசு முற்பட்டது. அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற அனுபவம் உள்ளவர்களும் மூத்த வழக்குரைஞர்களும் அந்தக் குழுவில் இருந்தனர். அந்த மசோதா நான்கு ஆண்டு ஆலோசனைக்குப் பிறகு 1968-இல்தான் நிறைவேற்றப்பட்டது. அப்போதே மக்களவைத் தலைவருக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் நீதிபதிகள் பதவி நீக்கத் தீர்மானத்தில் வலுவான அடிப்படை இருக்கிறதா என்பதை ஆலோசித்து, ஆராய்ந்து முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின் பிரிவு 3, இதில் தெளிவான வழிகாட்டுதலை அளித்திருக்கிறது.
1970-இல் காங்கிரஸ் கட்சி பதவியிலிருக்கும்போது ஜி.எஸ். தில்லான் மக்களவைத் தலைவராக இருந்தார். அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.சி. ஷாவுக்கு எதிராக 199 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பதவி நீக்கத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, அதை அவர் நிராகரித்தது மட்டுமல்ல, நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் நாடாளுமன்ற குறிப்பில் பதிவாகிவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னால், பரபரப்பாக நாடாளுமன்ற வாக்கெடுப்பு வரை எடுத்துச் செல்லப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி வி. ராமசாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. 1993-இல் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பதவி நீக்கத் தீர்மானத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை. அப்போது நீதிபதி வி. ராமசாமிக்கு ஆதரவாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வாதாடியவர் இப்போது பதவி நீக்கத் தீர்மானத்தை முன்மொழிந்து வாதாடும் கபில் சிபல். அவர் தனது 1993 வாதங்களை இன்னொரு முறை திரும்பப் படித்துத் தெரிந்து கொண்டால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவி நீக்கம் எந்த அளவுக்கு வலுவில்லாதது என்பது அவருக்கே புரியும்.
இப்போதைய நீதிபதிகள் நியமன முறை தவறு என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீது வலுவில்லாத காரணங்களுக்காகவும், தனிப்பட்ட விரோதத்தாலும் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவந்து, நீதித்துறையின் கெளரவத்தையும் மாண்பையும் குலைக்க முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com