முற்றுப்புள்ளி!

தங்களது பதவிக்காலம் முடிந்தாலும்கூட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயர் அதிகாரிகளும் அவர்கள் பதவி வகித்தபோது ஒதுக்கப்பட்ட வீடுகளை காலி செய்வது கிடையாது.

தங்களது பதவிக்காலம் முடிந்தாலும்கூட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயர் அதிகாரிகளும் அவர்கள் பதவி வகித்தபோது ஒதுக்கப்பட்ட வீடுகளை காலி செய்வது கிடையாது. தில்லியிலும் சரி, மாநிலத் தலைநகரங்களிலும் சரி, அரசு குடியிருப்புகளில் தொடர்ந்து தங்கியிருப்பது மிகப்பெரிய கெளரவமாக கருதப்பட்டு வருகிறது. பொது இடங்கள் (அனுமதி இல்லாதவர்களை வெளியேற்றுவது) சட்டம் 1971-இல் மத்திய அமைச்சரவை சில திருத்தங்களை செய்ய முற்பட்டிருக்கிறது. இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், உயர் அதிகாரிகளும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி பதவியிலிருக்கும்போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் (பங்களாக்களில்) தொடர்ந்து வசிப்பது தடுக்கப்படும். 
முந்தைய அரசுகள் தில்லியின் மத்தியப் பகுதியில் இருக்கும் முக்கியமான பங்களாக்களில் தொடர்ந்து வசிக்கும் சிறப்பு குடிமக்களின் (விஐபி) வரம்பு மீறல்களைப் பொருட்படுத்தாமல் அனுமதித்ததன் விளைவாக புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், பதவிக்கு வரும் அதிகாரிகளும் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படும் நிலை காணப்பட்டது. 2014 மே மாதம், நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, பதவிக்காலம் முடிந்த 1,500 அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 
முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் பதவியிலிருந்து விலகிய ஒரு மாதம் வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களில் குடியிருக்கலாம். அந்த ஒருமாத கால அவகாசம் முடியும்போது நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அடுத்த இரண்டு மாதத்தில் சாவகாசமாக எடுப்பதுதான் இப்போது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த இரண்டு மாத காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வெளியேற்றுவதற்குப் பலரும் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கி விடுகிறார்கள்.
முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களது பாதுகாப்புக் கருதி அரசு குடியிருப்புகள் வழங்குவதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பதவி இழந்த பிறகும் அரசு பங்களாவில் அவர்கள் தொடர அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன என்று உச்சநீதிமன்றம் 2013-லேயே கேள்வி எழுப்பியிருக்கிறது. அதுமட்டுமல்ல, 20 அம்ச வழிகாட்டுதலையும் இது குறித்து வழங்கியிருக்கிறது. பிரபல தலைவர்கள் தங்கியிருந்த வீடுகளை அவர்களது மரணத்துக்குப் பிறகு நினைவகங்களாக மாற்றி அவரது குடும்பத்தினர் பயன்படுத்த அனுமதிக்கும் போக்கையும் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.
1977-இல் உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவர்கள், குடியரசுத் துணைத் தலைவர்கள், பிரதமர்கள் ஆகியோருக்கு அரசு பங்களாக்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இதுவேகூட ஏனைய நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தேவையில்லாதது என்றுதான் தோன்றுகிறது. 
அமெரிக்காவில் முன்னாள் அதிபர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ வசதி, பயணப்படி, அலுவலகப் படி போன்றவை வழங்கப்படுகின்றனவே தவிர, அவர்கள் தங்குவதற்கு அரசு இடம் ஒதுக்கப்படுவதில்லை. பிரிட்டனிலும் அப்படித்தான். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும், ஜனநாயக நாடுகளிலும் அமைச்சர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் குடியிருப்புகள் வழங்கப்படுவதில்லை. 
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் கவர்னர்களும் உயர் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட நீதிபதிகளும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின், அடிமை நாட்டை நிர்வகிக்கும் முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்கள் என்பதால், பெரும் பங்களாக்களில் குடியமர்த்தப்பட்டனர். சுதந்திர இந்தியாவில் அதே வசதிகளை அவர்கள் தொடர்ந்து அனுபவிப்பதால்தான், இந்தியாவில் ஜனநாயகம் மலர்ந்தும்கூட ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் காலனிய மனோபாவத்துடன் பொதுமக்களை நடத்துகிறார்கள்.
கடந்த ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 60 பேர் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் தொடர்ந்து தங்கியிருப்பதால் ஒவ்வொருவரும் ரூ.1 கோடிக்கும் அதிகமான வாடகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பங்களாக்களை காலி செய்ய வலியுறுத்தி பலமுறை அவர்களுக்கு கடிதம் அனுப்பியும் அவர்கள் அதை சட்டை செய்யாமலே தொடர்கிறார்கள். இதற்கு புதிய சட்டத்திருத்தம் முடிவு கட்டுவதாக அமையும்.
பொது இடங்கள் (அனுமதி இல்லாதவர்களை வெளியேற்றுவது) சட்டம் 1971-இல் இப்போது அரசு கொண்டு வர இருக்கும் திருத்தத்தின்படி ஒருமாத கால அவகாசம் முடிந்தவுடன், நீதிமன்றத் தடையுத்தரவு பெற அனுமதிக்காமல், அடுத்த இரண்டு நாட்களில் அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொள்ளும். ஐந்து மாதங்களுக்கு மேல் அவர்கள் பங்களாக்களை காலி செய்யாவிட்டால் பிணையாக மாதம் ஒன்று ரூ.10 லட்சம் வசூலிக்கப்படும். மேலும், தடையுத்தரவை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களில்தான் இனி பெற முடியும் என்பதால் அதற்கான வாய்ப்பும் முடக்கப்படும். 
சட்டத்திருத்தமும், அரசின் முடிவும் வரவேற்புக்குரியவை. அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அவர்கள் குடியிருக்க அரசு பங்களாக்களை ஒதுக்கித்தர வேண்டுமா என்பது குறித்து சிந்தித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுதான் இந்திய ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com