புறவாசல் வழியாக வால்மார்ட்!

கடந்த சில வாரங்களாகவே வெளிவந்த வதந்திகளை உண்மையாக்கும் விதமாக, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனமான பிளிப்கார்ட்டை வாங்கிவிட்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே வெளிவந்த வதந்திகளை உண்மையாக்கும் விதமாக, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனமான பிளிப்கார்ட்டை வாங்கிவிட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் 77% பங்குகளை 16 பில்லியன் டாலர்களுக்கு ( ரூ. 1.07 லட்சம் கோடி) வாங்கி சர்வதேச அளவில் மிகப் பெரிய இணைய வணிக வியாபார ஒப்பந்தத்தை நடத்தியிருக்கிறது. 
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வால்மார்ட் வாங்கியதைத் தொடர்ந்து, பிளிப்கார்ட்டின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சாலுடன், சாஃப்ட் பேங்க் குழுமமும் அதில் இருந்து வெளியேறுகிறது. பின்னி பன்சால், டென்சென்ட் ஹோல்டிங்ஸ், டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், மைக்ரோசாப்ட் ஆகிய ஏனைய பங்குதாரர்கள் வசம் 33 % பங்குகள் தொடரும். 
இந்த ஒப்பந்தத்தின்படி, பெங்களூரில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட்டின் மொத்த மதிப்பு 21 பில்லியன் டாலர் (ரூ. 1.38 லட்சம் கோடி). கடந்த ஆண்டு இதுவே வெறும் 12 லட்சம் பில்லியன் 
டாலராகத்தான் கணக்கிடப்பட்டிருந்தது. இந்தியாவில் இணைய வணிகம் 2026-க்குள் 200 பில்லியன் டாலராக உயரும் என்கிற மதிப்பீட்டை முன்னிறுத்தித்தான் பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் பன்னாட்டு சில்லறை விற்பனைக் குழுமம் வாங்கியிருக்கிறது.
2004-இல் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தபோது வால்மார்ட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க அரசு தயாரானது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எல்.கே. அத்வானியும், முன்னாள் பிரதமர் சந்திரசேகரும் முன்வைத்த கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த முடிவு கிடப்பில் போடப்பட்டது. சில்லறை விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று அப்போது எடுக்கப்பட்ட முடிவு, இப்போது வரை தொடர்கிறது. அதனால்தான் இப்போது வால்மார்ட் நிறுவனம் இணைய வணிகத்தின் மூலம் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்டிருக்கிறது.
வால்மார்ட் என்பது அமெரிக்காவின் மிகப் பெரிய வணிகக் குழுமம். இந்த நிறுவனம் சீனாவில் உள்ள ஷென்ஜென், டாலியன் நகரங்களில் கொள்முதல் மையங்களை அமைத்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன உற்பத்தியாளர்களிடமிருந்து 290 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகளை ஆண்டுதோறும் வாங்குகிறது. 2017-இல் அந்த நிறுவனத்தின் சர்வதேச மொத்த விற்பனை வரவான 495 பில்லியன் டாலரில் 60% சீனாவிலிருந்தான சரக்கு கொள்முதல்தான் என்பதை நாம் உணரவேண்டும்.
நாம் வால்மார்ட்டின் இணைய வணிக நுழைவு குறித்து கவலைப்படுவதற்கு காரணம் இருக்கிறது. உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டுக்கும் சீனாவில் தயாரிக்கப்படும் விலை குறைந்த பொருள்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதுதான் அச்சத்துக்கான காரணம். இந்தியாவில் உள்ள எல்லா சில்லறை விற்பனைப் பொருள்களுக்கும் மாற்றாக சீனாவில் இருந்து விலை குறைந்த பொருள்கள் மடை திறந்துவிடப்படும் எனும்போது நாம் கவலைப்படாமல் இருக்கமுடியாது.
சீனாவில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு சில்லறை விற்பனைப் பொருள்கள் பெருமளவு வரும்போது இந்தியாவிலுள்ள சிறுகுறு தொழில்கள் அனைத்துமே அழிந்துவிடும். ஏற்கெனவே மின்சார உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், பொம்மைகள், பின்னலாடைகள், கடிகார உற்பத்தி, பட்டாசுத் தொழில் உள்ளிட்டவை சீன இறக்குமதியால் அழிந்துவிட்டிருக்கும் சூழலில் வால்மார்ட்டின் இணைய வணிக வரவின் மூலம் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இழக்கும் அபாயம் நம்மை எதிர்கொள்கிறது.
இந்தியாவில் உள்ள 5 கோடி சிறு வணிகர்களும் 4 கோடி சிறு குறு தொழிற்சாலைகளும் ஏற்கெனவே இணைய வணிகத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பெரும் முதலீட்டுடனும், குறைந்த விலையில் சீன இறக்குமதிகளுடனும் வால்மார்ட் களம் இறங்கும்போது அதன் பாதிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
வால்மார்ட் போன்ற பெரு வணிக நிறுவனங்களின் வரவால் நுகர்வோர் பயனடைவார்கள் என்கிற வாதத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சோகத்தை நாம் உணர மறுக்கிறோம். பெரு நிறுவனங்கள் மொத்தமாகப் பொருள்களை வாங்கும்போது அதன் உற்பத்தியாளர்களுக்கு மிகக் குறைந்த விலைதான் தரப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு 30 பில்லியன் டாலர் சர்வதேச சந்தை மதிப்பு இருக்கும்போது காபி உற்பத்தியாளர்களுக்கு 10 பில்லியன் டாலர் கிடைத்தது. இப்போது சந்தை மதிப்பு 60 பில்லியன் டாலர். உற்பத்தியாளர்களுக்கு கிடைப்பது வெறும் 6 பில்லியன் டாலர். கோகோ உற்பத்தியாளர்களுக்கு 3.9% மட்டும்தான் மில்க் சாக்லேட் விற்பனையில் கிடைக்கிறது. ஆனால் சில்லறை விற்பனையாளர்களுக்கு கிடைப்பது 34.1% . இதுபோல எல்லாப் பொருள்களையும் மிகக் குறைந்த விலையில் வாங்கி மிகப் பெரிய லாபம் ஈட்டுவதுதான் வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் வியாபாரத் தந்திரம்.
இப்போதே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டில் சுமார் 54 பில்லியன் டாலர். கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 350 பில்லியன் டாலர் அளவில் சீனாவில் இருந்து நாம் இறக்குமதி செய்திருக்கிறோம். நமது ஏற்றுமதி மிகமிகக் குறைவு. தனது மொத்த கொள்முதலில் 60% சீனாவில் வாங்கும் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை வர்த்தக அமைச்சகம் ஏன் உணரவில்லை? அமெரிக்காவே வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் இறக்குமதியால் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை சரிகட்ட முடியாமல் திணறும் நிலையில் இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது?
இந்திய இணைய வர்த்தகத்தின் மூலம், கூடாரத்துக்குள் மூக்கை நுழைத்திருக்கிறது வால்மார்ட் என்கிற ஒட்டகம். இது சீனப் பொருள்களைப் பெருமளவு விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனம். வால்மார்ட்டின் வரவால் அமெரிக்கர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். சீனர்களுக்கு வேலை கிடைக்கும். இந்தியாவுக்கு?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com