வதந்திகளை நம்பாதீர்கள்!

தமிழினம் எப்போது

தமிழினம் எப்போது மனிதாபிமானமற்ற இனமாக மாறியது என்கிற கேள்வியை எழுப்புகிறது, கடந்த இரண்டு மாதங்களாக வட தமிழகத்தில் நடந்ததாகக் கேள்விப்படும் நிகழ்வுகள். திருடனையோ, கொலைகாரனையோ, ஏன், சமூக விரோதிகளையோகூட யாராவது அடித்தாலோ துன்புறுத்தினாலோ அதைத் தாங்கிக் கொள்ளாமல் அனுதாபம் காட்டும் சமூகமாக இருந்த நாம், இப்போது கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) பெறப்படும் தகவல்களை நம்பி, அப்பாவிகளை அடித்துக் கொல்லும் வக்கிரத்தனத்தில், வெறியின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறோம் என்பது வருங்காலம் குறித்த அச்சத்தையல்லவா மேலெழச் செய்கிறது.
கடந்த மாதம் வேலூரில் பிழைப்புத்தேடித் தமிழகம் வந்திருந்த 30 வயது அப்பாவி வடநாட்டு இளைஞர் ஒருவரை திருடன் என்று யாரோ சொல்ல, பொங்கியெழுந்த அந்தப் பகுதி மக்கள் கும்பலாகப்போய் அவரை அடித்து துவம்சம் செய்துவிட்டிருக்கிறார்கள். 
குற்றுயிரும் குலையுயிருமாக அந்த இளைஞர் காப்பாற்றப்பட்டது கடவுளின் கருணையால்தானே தவிர, நமது மக்களின் ஈர நெஞ்சத்தால் அல்ல.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன் சத்திரத்தில் கடந்த ஏப்ரல் 21}ஆம் தேதி நடந்த சம்பவம் ஒன்று. இந்த நிகழ்விலும் பாதிக்கப்பட்டது பஞ்சம் பிழைக்க வடநாட்டிலிருந்து வந்த ஒருவர்தான். அவரைக் குழந்தைத் திருடன் என்று சந்தேகப்பட்ட ஒரு கும்பல், அவரை அடித்தே கொன்றிருக்கிறது. ஒருவர் மீது சந்தேகம் வந்தால் விசாரிக்கலாம்; காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் கொடுக்கலாம். கும்பலாகக் கூடி ஒருவரை அடித்துக் கொல்வதென்றால், எந்த அளவுக்குக் கண்மூடித்தனமான வெறியும், வக்கிரத்தனமும் இருந்திருக்க வேண்டும்.
அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குத் தனது உறவினர்களுடன் காரில் சென்றிருக்கிறார் 
65 வயது ருக்மிணி என்கிற பெண்மணி. அவர் தரிசிக்க விரும்பிய கோயிலுக்கு ஒருவரிடம் வழி கேட்டிருக்கிறார். அப்போது அங்கே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. காரில் வைத்திருந்த சாக்லெட்டுகளை எடுத்து அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் அவர். இவ்வளவுதான் நடந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அவர் சென்று கொண்டிருந்த காரைத் துரத்திப் பிடித்து, அவரை வண்டியிலிருந்து இறக்கி அந்தக் கும்பல் தாக்கியிருக்கிறது. ருக்மிணி அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் வந்த உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 9}ஆம் தேதி பழவேற்காட்டில் நடந்த சம்பவம் இவற்றையெல்லாம்விடக் கொடுமையானது. பழவேற்காடு பாலத்தில் கந்தலாடையுடனும் அழுக்கு மூட்டையுடனும் ஒரு பிச்சைக்காரர் (மனநோயாளி?) ஓரமாகப் படுத்துக் கொண்டிருந்தார். அங்கு குடிபோதையில் வந்த இருவர் அவரிடம் ஏதோ விசாரித்திருக்கிறார்கள். தமிழ் தெரியாததால் அவர் ஹிந்தியில் பதிலளித்திருக்கிறார்.
குடிபோதையில் இருந்தவர்கள் அவரைத் தமிழில் பேசு என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். அவர் மீண்டும் ஹிந்தியில் பதிலளிக்க, குடிபோதையில் இருந்தவர்களுக்குக் கோபம் அதிகரித்திருக்கிறது. அவரை அடித்துத் தள்ள, அவரது மூட்டையிலிருந்த சிறிய பேனாக்கத்தி கீழே விழுந்திருக்கிறது. உடனேயே அவரை வடநாட்டிலிருந்து வந்திருக்கும் குழந்தைத் திருடன் என்று முடிவு கட்டி அடிக்கத் தொடங்கினார்கள். அந்த வழியாக வருவோர் போவோரும் சேர்ந்து கொண்டு கும்பலாக அவருக்கு தர்ம அடி கொடுக்க முற்பட்டனர். இறந்துவிட்ட அவரை அந்தப் பாலத்திலேயே தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அவர், கடந்த பத்து மாதமாக பழவேற்காடு கடைத்தெருவில் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொண்டிருந்தவர் என்பது பிறகுதான் தெரிய வந்திருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம், கட்செவி அஞ்சல் மூலம் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகள்தான் என்று தெரியவந்திருக்கிறது. வடநாட்டிலிருந்து குழந்தைகளைக் கடத்துவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும் பரப்பப்பட்ட ஆதாரமற்ற வதந்திகளை நம்பி, பெற்றோர் பீதியடைந்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே பனிரெண்டுக்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. கட்செவி அஞ்சலில் பரப்பப்படும் வதந்தி ஒருபுறம், குடிபோதையில் என்ன செய்கிறோம் என்கிற சிந்தனையே இல்லாமல் வெறிபிடித்து அலையும் கூட்டம் இன்னொருபுறம். இவற்றுக்குப் பலியாவது தமிழகத்துக்குப் பஞ்சம் பிழைக்க வந்திருக்கும் வடநாட்டு அப்பாவிகள் அல்லது நாதியற்ற பிச்சைக்காரர்கள்.
காவல்துறை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்திருக்கிறது. வதந்திகளைப் பரப்பியவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனாலும்கூட, வக்கிரத்தனமான இந்தக் கும்பல் மனோநிலை குறைவதாகத் தெரியவில்லை.
சமூக வலைதளங்கள் எந்தவிதத் தணிக்கையோ, கட்டுப்பாடோ இல்லாமல் செய்திகளைப் பரப்புவதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் உலகமே திகைத்துப்போய் நிற்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்துக்குக் கும்பல் மனோபாவம் வந்திருப்பதுதான் அதைவிடக் கவலை அளிப்பதாக இருக்கிறது. வள்ளுவரையும், வள்ளலாரையும் வழிகாட்டிகளாகக் கொண்ட தமிழ்ச் சமுதாயம் வன்முறைக்கும், வக்கிரத்தனத்துக்கும், வதந்திக் கலாசாரத்துக்கும் பலியாகி விடலாகாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com