சாமர்த்திய சதி!

கடந்த பிப்ரவரி மாதம்

கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி, அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதுகுறித்து எந்தவித மேல்முறையீடோ, விவாதமோ கூடாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தது. அப்படியிருந்தும்கூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த, திட்ட வரைவைத் தாக்கல் செய்யாமல் மத்திய அரசு தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. 
மத்திய அரசு தாக்கல் செய்யும் திட்ட வரைவு கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்பதால்தான் திட்ட வரைவுத் தாக்கல் செய்யாமல் காலதாமதப்படுத்தப்படுகிறது என்று பரவலாகக் கருதப்பட்டது. உச்சநீதிமன்றம் கடந்த மே 8-ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை செயலாளரை, திட்ட வரைவுடன் நேரில் வர வேண்டும் என்றும், அதைத் தாமதப்படுத்துவது தனது பிப்ரவரி 16-ஆம் தேதித் தீர்ப்பை அவமதிப்பதாக இருக்கும் என்றும் கண்டித்தது. இத்தனைக்குப் பிறகும்கூட, மத்திய அரசு தனது திட்ட வரைவைத் தாக்கல் செய்யாமல் கர்நாடகத்தில் வாக்குப்பதிவு முடியும்வரை காத்திருந்து, நேற்று உச்சநீதிமன்றத்தில் குழப்பமானதொரு திட்ட வரைவை முன்வைத்திருக்கிறது. இப்படி ஒரு திட்ட வரைவுக்காக வாக்குப்பதிவு வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்பது புரியவில்லை. 
உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து முடிவெடுக்க வாரியம், குழு அல்லது ஆணையம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறி அதற்கான வரைவுத் திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யூ.பி. சிங் நேரில் தாக்கல் செய்திருக்கிறார். மத்திய அரசு ஏற்படுத்த இருக்கும் 10 பேர் கொண்ட காவிரி நதிநீர்ப் பங்கீட்டு அமைப்பு, காவிரி வாரியமா அல்லது குழுவா அல்லது ஆணையமா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உச்சநீதிமன்றத்திடமே அளித்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் திட்டத்தைத் தர வேண்டும் என்று கூறிய பிறகு, அதற்கு என்ன பெயர் வைப்பது என்பதை உச்சநீதிமன்றத்திடம் பரிந்துரைக்கக் கோருவது வேடிக்கையாக இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்திருக்கும் காவிரி வரைவு செயல்திட்டத்தின்படி அமைக்கப்படும் 10 பேர் கொண்ட குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்படுபவர் ஐந்து ஆண்டு காலமோ அல்லது 65 வயது வரையிலோ பதவி வகிப்பார். அவர் முதிர்ந்த அனுபவம் உள்ள பொறியாளராகவோ, இந்திய குடிமைப் பணி அதிகாரியாகவோ இருப்பார். அந்த அமைப்பில் கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் சார்பில் அந்தந்த மாநிலத்தின் நீர்வளத்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மத்திய அரசின் நீர்வளத்துறை, வேளாண்
துறைகளைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் முழுநேர உறுப்பினர்களாகவும், மத்திய அரசின் நீர்வளம், நதிகள் மேம்பாடு, விவசாயம், விவசாயிகள் நலம் ஆகிய துறைகளைச் சேர்ந்த இணைச் செயலராக இருக்கும் இருவர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த அமைப்புக்கு செயலாளராக மத்திய அரசால் நியமிக்கப்படும் மூத்த பொறியாளர் மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரை பதவி வகிக்க வழிகோலப்பட்டுள்ளது.
கர்நாடகம், தமிழ்நாடு இரண்டு மாநிலங்களும் இந்த அமைப்பின் மொத்தச் செலவில் 40 சதவீதம் தனித்தனியாக பங்களிக்க வேண்டும். கேரளம் 15 சதவீதமும், புதுச்சேரி 5 சதவீதமும் இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கான செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, இந்த அமைப்பு மத்திய அரசின் எந்தவிதப் பங்களிப்பும் இல்லாமல் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களின் செலவில் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும். 
பிப்ரவரி 16 உச்சநீதிமன்றத் தீர்ப்பையோ, இப்போது அமைக்க இருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு அமைப்பின் முடிவையோ சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஒன்றோ ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களோ ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்த அமைப்பு மத்திய அரசை அணுகும். மத்திய அரசின் முடிவு இறுதியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, இந்த மாநிலங்களைக் கட்டுப்படுத்தும். பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தான் அமைக்க இருக்கும் அமைப்புக்கு என்ன பெயர் வைப்பது என்பதைக்கூட முடிவு செய்ய முடியாமல் குழம்பும் மத்திய அரசு, இறுதி முடிவு எடுக்கும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் தாக்கல் செய்திருக்கும் வரைவுத் திட்டத்தில் கூறப்படுகிறது. சொல்லப்படாத செய்தி என்னவென்றால், கர்நாடகத்தில் அடை மழை பெய்தால் பிரச்னையே இல்லாமல் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதுதான்.
உச்சநீதிமன்றம் தனது பிப்ரவரி 16 இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கியிருக்கும் காவிரி நதிநீர் ஒதுக்கீட்டை நடை
முறைப்படுத்தத்தான் ஓர் அமைப்பு தேவையே தவிர, மீண்டும் குழு கூடி தண்ணீர் திறக்கலாமா வேண்டாமா, தர முடியுமா முடியாதா என்று விவாதிப்பதற்குப் பெயர் செயல் திட்டமல்ல, ஒப்புக்கு ஓர் அமைப்பு. அது காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது அல்ல நமது கவலை. காவிரியில் தமிழகத்திற்கு நியாயமான உரிமையுள்ள, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்குதான் அமைப்பு தேவை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தடம்புரளச் செய்து, காவிரி நதிநீர்ப் பிரச்னை தீராமல் தொடர்வதற்கு நடத்தப்பட்டிருக்கும் சாமர்த்தியமான முயற்சி இது. தமிழகத்திற்கு நியாயம் கிடைப்பதை உறுதிப்படுத்துவோம் என்று உச்சநீதிமன்றம் கொடுத்த வாக்குறுதியை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com