தாஜ்மஹாலுக்கு ஆபத்து!

உலக அதிசயங்களில் ஒன்று

உலக அதிசயங்களில் ஒன்று என்று கூறிக்கொள்ள நமக்கு இருக்கும் அரிதிலும் அரிதான நினைவுச் சின்னம் தாஜ்மஹால். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மீண்டும் மீண்டும் வடமாநிலங்களில் அடித்த புழுதிப்புயல் தாஜ்மஹாலில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி அடித்த அடை மழையுடன் கூடிய காற்றுப் புயலில் தாஜ்மஹாலின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல, தெற்கு நுழைவாயிலில் உள்ள தூண்கள் சில சரிந்து பாதிப்பை ஏற்படுத்தின. இரண்டாவது புயலில் தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பல மரங்கள் சரிந்தன என்பது மட்டுமல்ல, வடமேற்கு கோபுரத்தில் (மினாரட்) உள்ள கதவும் விழுந்துவிட்டிருக்கிறது.
கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் தாஜ்மஹாலின் பாதுகாப்பு குறித்த முறையீடு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெள்ளை சலவைக் கல்லால் கட்டப்பட்டிருக்கும் தாஜ்மஹால் ஆங்காங்கே பச்சை நிறமாக மாறி வருவதைத் தடுப்பதற்கு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை தவறிவிட்டது என்று நீதிபதிகள் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினர். அருகிலுள்ள யமுனா நதியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கிருமிகள் உருவாகி வருவதால் அவற்றின் பாதிப்புதான், தாஜ்மஹால் பச்சை நிறமாக மாறுவதற்கு காரணம் என்று தொல்லியல் ஆய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்த விளக்கத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
17-ஆம் நூற்றாண்டு நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை பாதுகாக்கும் பொறுப்பை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடமிருந்து அகற்றி நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் வசம் ஒப்படைத்தால் என்ன என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசுக்குக் கேள்வி எழுப்பினர். உள்நாட்டு வல்லுனர்கள் இல்லையென்றால் சர்வதேச வல்லுனர்களின் மேற்பார்வையில் தாஜ்மஹாலைப் பாதுகாத்தாக வேண்டும் என்றும் மத்திய - மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.
இதற்கு முன்னால் பளிங்கினால் உருவாக்கப்பட்ட தாஜ்மஹாலின் வெள்ளை நிறம் மஞ்சளாக மாறத்தொடங்கியது. அதைத் தடுத்து தாஜ்மஹாலின் வெள்ளை நிறத்தையும், பளபளப்பையும் பாதுகாக்க இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. தாஜ்மஹால் மீது முல்தானி மண்ணைக் குழைத்துத் தடவி மஞ்சள் நிறத்தை மாற்ற முயற்சிகள் எடுத்து வருவதாக அரசு தெரிவித்திருந்தது. மஞ்சள் நிறம் வெள்ளையாக மாறுவதற்குப் பதிலாக இப்போது பச்சையாக மாறத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் எதிர்பாராத திருப்பம். 
1996-இல் தாஜ்மஹாலைச் சுற்றி ஆக்ராவிலுள்ள எல்லாத் தொழிற்சாலைகளையும் உடனடியாக மூடி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்ராவிலிருக்கும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையிருந்து புகை வெளியேறு வதைத் தடுக்கவும் உத்தரவிட்டது. இதனால் எல்லாம் தாஜ்மஹாலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையவில்லை.
உலகிலுள்ள எல்லா நினைவுச் சின்னங்களும் ஏதாவது ஒரு வகையில் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படுகின்றன என்றாலும்கூட, அந்தந்த நாட்டு அரசுகள் மிகுந்த அக்கறையுடன் அவற்றைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்கின்றன. நாம்தான் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருக்கிறோம்.
இந்தியாவிலுள்ள உலக கலாசார சின்னங்கள் போதுமான அக்கறையையும் பாதுகாப்பையும் பெறவில்லை என்றும், பெரும்பாலான நினைவுச் சின்னங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றன என்றும், 2013-இல் மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரி நாடாளுமன்றத்துக்கு அளித்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமல்ல, இந்த நினைவுச் சின்னங்களிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அனுமதியில்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதையும் அந்த அறிக்கை எடுத்துரைத்தது.
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையில் உள்ள முக்கியமான பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன என்றும், இதன் விளைவாக நினைவுச் சின்னங்களின் பராமரிப்பும், பாதுகாப்பும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கணக்குத் தணிக்கையாளர் பார்வையிடச் சென்றபோது கண்காணிப்பாளரோ காவலாளியோகூட இல்லாமல் பல நினைவுச் சின்னங்கள் காட்சியளித்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் எவையெவை? அவை எங்கே இருக்கின்றன என்பது குறித்த புள்ளிவிவரம்கூட 
சரியாக சேகரிக்கப்படவில்லை என்பதுதான் எல்லாவற்றையும்விட வேதனையான தகவல்.
தாஜ்மஹால் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், பாதுகாக்கப்படாமலும் இருப்பதற்கு தொல்லியல் ஆய்வுத் துறையை மட்டுமே குற்றம்சாட்டுவது நியாயமில்லை. மத்திய கலாசார அமைச்சகமும் மாநில அரசுகளும் இதுகுறித்து அக்கறையில்லாமல் இருப்பதுதான் அதற்கு முக்கியக் காரணம் என்பது பல பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதிலிருந்து தெரிகிறது. தாஜ்மஹாலின் அருகில் ஓடும் யமுனா நதியைக் கழிவுநீர் சாக்கடையாக மாற்றாமல் இருப்பதும், தாஜ்மஹாலைச் சுற்றியிருக்கும் சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகளை அகற்றுவதும் அரசின் கடமையே தவிர, அது தொல்லியல் துறையின் அதிகார வரம்பில் இல்லை. நமது வரலாற்றுச் சின்னங்களை  பாதுகாப்பது என்பது நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. இதை மத்திய - மாநில அரசுகள் உணர்ந்து முனைப்புக் காட்டினால் மட்டுமே தாஜ்மஹால் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து பழம்பெரும் வரலாற்றுக் கலாசார சின்னங்களையும் காலத்தின் தாக்கத்தால் அழிந்து
விடாமல் காப்பாற்ற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com