மோடியின் நேபாள விஜயம்!

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் நேபாளப் பயணம் இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் நேபாளப் பயணம் இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி மூன்று முறை நேபாளத்துக்கு விஜயம் செய்திருக்கிறார் என்பதிலிருந்து அந்த அண்டை நாட்டுக்கு இந்தியா எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பது வெளிப்படுகிறது. பல ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கும் இடையே கருத்துவேறுபாடுகளும் பரஸ்பர ஐயப்பாடுகளும் தொடர்ந்து வரும் நிலையில், பிரதமரின் இந்த மூன்றாவது விஜயம் மாற்றத்துக்கு வழிகோலும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
இந்தியாவின் பிகார் மாநில எல்லையை ஒட்டிய நேபாள நகரமான ஜனக்பூரில் பிரதமரின் பயணம் தொடங்கியது. ராமாயணத்துடன் தொடர்புள்ள சீதை பிறந்த இடமான ஜனக்பூர் ஆலயத்தில் வழிபட்ட பிரதமர், ஜனக்பூருக்கும் அயோத்திக்கும் இடையே, பேருந்து போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார். ஜனக்பூர் மட்டுமல்லாமல், காத்மாண்டிலுள்ள பசுபதிநாதர் ஆலயம், திபெத் எல்லையை ஒட்டிய முக்திநாத் ஆகிய புனிதத் தலங்களில் வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி, மறைமுகமாக நேபாள மக்களுக்கு அதன் மூலம் ஒரு செய்தியையும் தெரிவிக்க முற்பட்டார். இந்திய - நேபாள உறவு என்பது கலாசார ரீதியாகவும், மத ரீதியாகவும் தொடர்புடையது என்பதால் இணை பிரிக்க முடியாதது என்பதை உணர்த்துவதுதான் அவரது நோக்கம்.
இந்தியர்களுக்கும் நேபாளிகளுக்கும் இடையேயான பந்தம் என்பது இரண்டு அரசுகளுக்கும் இடையேயான உறவைக் கடந்த ஒன்று என்பதை மோடி உணர்த்த முனைந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. சமீப காலமாக நேபாளத்துடன் தனது நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள முயலும் சீனாவால் பொருளாதார ரீதியாக உதவ முடியுமே தவிர, கலாசார ரீதியாக இந்தியாவுடன் மட்டுமே நேபாளத்தால் நெருக்கமாக இருக்க முடியும் என்பதுதான் அந்த செய்தி. 
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே எந்தவித கட்டுப்பாடும் இல்லாத எல்லை காணப்படுகிறது. நேபாளிகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தங்கவோ, பணிபுரியவோ சகல உரிமையும் பெற்றிருக்கிறார்கள். ஏறத்தாழ 50,000-க்கும் அதிகமான நேபாளிகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார்கள் என்பதிலிருந்து எந்த அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் காணப்படுகிறது என்பது வெளிப்படுகிறது.
இதெல்லாம் இருந்தும்கூட, கடந்த சில ஆண்டுகளாக நேபாள ஆட்சியாளர்களுக்கு இந்தியாவின் மீது அவநம்பிக்கை ஏற்படத் தொடங்கியிருப்பது உண்மை. அதிலும் குறிப்பாக, 2015-இல் நேபாளம் தனது அரசியல் சாசனத்தை உருவாக்க முற்பட்டபோது, இந்தியா அதில் சில விதிமுறைகளை நுழைக்க வற்புறுத்தியது, நேபாள ஆட்சியாளர்களுக்கு இந்தியாவின் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு நேபாளத்தில் வாழும் இந்திய வம்சாவளியினரான மதேசிகள் புதிய அரசியல் சாசனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொருளாதாரத் தடையிலும் போராட்டத்திலும் ஈடுபட்டதன் பின்னணியில் இந்தியாவின் பங்கு உண்டு என்றும் அவர்கள் கருதினார்கள். 
சொல்லப்போனால் இப்போது நேபாள பிரதமர் கே.பி. ஓலி, இந்தியாவுக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர். சீனாவுடன் நேபாளம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள காரணமாக இருந்தவர். ஆனால், அவர் இந்த முறை மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றபோது, தனது முதல் அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டது தில்லிக்குத்தானே தவிர, பெய்ஜிங்குக்கு அல்ல. கடந்தகால கசப்புகளை மறந்துவிட்டு இந்தியாவுடன் சுமுகமான உறவை மேற்கொள்வதில் அவர் காட்டிய அக்கறைதான் இப்போது மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள வழிகோலியது எனலாம்.
பிரதமர் மோடியின் நேபாள விஜயம் மூன்று முக்கியமான தெளிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னுடைய முதலீட்டின் மூலமும் உதவிகள் மூலமும் நேபாளத்தில் பெரிய அளவில் சீனா தடம் பதிக்க முற்படும்போது, இந்தியா தனது வரலாற்று ரீதியான கலாசார நெருக்கத்தைப் பயன்படுத்தி, நேபாளத்துடனான தனது நட்புறவை பலப்படுத்திக்கொள்வது முதலாவது. இரண்டாவதாக, நேபாள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கே.பி. ஓலி தலைமையிலான ஆட்சியை இந்தியா மதிக்கிறது என்பதும், அந்த அரசின் ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் ஊறுவிளைவிக்கப்படாது என்பதையும் உறுதிப்படுத்துவது. மூன்றாவதாக, நேபாளம் அண்டை நாடாகவும், பல பிரச்னைகளுக்கு இந்தியாவை அண்டி வாழும் நாடாகவும் இருந்தாலும்கூட, அது தனி நாடு என்பதையும் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் உரிமையுள்ள நாடு என்பதையும் இந்தியா ஏற்றுக்கொள்கிறது என்பது.
பிரதமர் மோடியின் இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளின் பிரதமர்களும் 90,000 மெகாவாட் திறனுள்ள அருண் - III மின் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். பிரதமர் மோடியின் விஜயத்தில் மின் உற்பத்தி, ரயில் தொடர்பு, சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கலாசார நெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும். 
சீன நிறுவனங்கள் எந்தவொரு திட்டத்தை ஏற்றுக்கொண்டாலும் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றி நல்ல பெயர் வாங்கிக் கொள்கின்றன. சீனா அளவுக்கு இந்தியாவால் நேபாளத்துக்குப் பொருளாதார உதவி வழங்க முடியாவிட்டாலும், ஏற்றுக்கொண்ட திட்டங்களை திட்டமிட்டபடி குறித்த காலத்தில் முடிப்பதையாவது நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com