நீதித்துறையா தீர்மானிப்பது?

பெரும்பான்மையை அடைய முடியாததால்

பெரும்பான்மையை அடைய முடியாததால் கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் மூன்றாவது நாளில் பதவி விலகி, காங்கிரஸ் ஆதரவுடனான மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சிக்கு வழிகோலியிருக்கிறார் எடியூரப்பா. அங்கு எச்.டி. குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.

கர்நாடக வாக்காளர்கள் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை அளிக்காத நிலையில், குதிரை பேரத்தில் ஈடுபடாமல் ஆட்சி அமைவதுதான் ஜனநாயகம் என்கிற கருத்து நகைப்பை வரவழைக்கிறது. 104 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஆட்சி அமைக்கட்டும் என்று பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்திருக்காது எனும்போது, பாஜக மட்டும் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தது வேடிக்கையாக இருக்கிறது.
224 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் வெறும் 37 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க இருக்கிறது. ஐந்து ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு மக்களால் நிராகரிக்கப்பட்டு 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி அந்த சிறுபான்மை அரசுக்கு ஆதரவு வழங்க இருக்கிறது. இது எந்த வகை ஜனநாயகத்தின்பாற்பட்டது என்று
புரியவில்லை. 
மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி புறவாயில் வழியாக மீண்டும் ஆட்சியில் பங்கு பெறும் இந்த முரணை, பாஜகவின் மீதான வெறுப்புணர்ச்சியால் ஆதரிக்க முற்படுவது தவறு. சில்லறை குதிரை பேரத்தில் ஈடுபட்டு பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்தது என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, முதல்வர் பதவியை எச்.டி. குமாரசாமிக்கு வழங்கி நடத்தியிருப்பது மொத்த குதிரை பேரம் அல்லாமல் வேறு என்ன?
எச்.டி. குமாரசாமிக்கும் அவரது தந்தையைப் போலவே பேரதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. 1996 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பிரதமர் வாஜ்பாய் பதவி விலகியபோது, கர்நாடகத்திலிருந்து 16 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே இருந்த எச்.டி. தேவெ கெளடா ஐக்கிய முன்னணி அரசின் பிரதமரானார். இப்போது அதேபோல, தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பான்மையை நிரூபிக்க எட்டு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியாமல் எடியூரப்பா பதவி விலகியதைத் தொடர்ந்து, 224 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 37 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரான முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் மகன் எச்.டி. குமாரசாமி கர்நாடக முதல்வராகிறார்.
கர்நாடக அரசியல் சம்பவம் வேறு பல முக்கியமான அரசியல் சட்ட ரீதியான கேள்விகளை எழுப்புகிறது. இன்னாரை ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்பதை அரசியல் சாசனம் தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆளுநர் வஜுபாய் வாலா தனிப் பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது எந்த வகையிலான ஜனநாயக முரண் என்று புரியவில்லை. உச்சநீதிமன்றத்தால் வழிமொழியப்பட்டிருக்கும் சர்க்காரியா கமிஷனின் பரிந்துரையின்படி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லாத நிலையில், அதிக இடங்களை வென்ற கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதுதான் முறை. அதைத்தான் அவர் பின்பற்றியிருக்கிறார்.
தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவரால் நியமிக்கப்படும் முதல்வருக்கு எத்தனை நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது ஆளுநரின் முடிவாகத்தான் இருக்க முடியும். ஆளுநருக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் ஏதோ தலை போகிற அவசரம் போல இரவெல்லாம் கண் விழித்து விசாரித்ததும், அடுத்த 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதும் விசித்திரமாக இருக்கிறது. இது ஆளுநரின் அதிகாரத்தில் நீதித்துறை நிகழ்த்தியிருக்கும் வரம்புமீறல். 
கோவாவில் என்ன நடந்தது, மணிப்பூரில் என்ன நடந்தது, தமிழகத்தில் என்ன நடந்தது, தில்லியில் என்ன நடந்தது, அந்த ஆளுநர்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்கிற அடிப்படையில் கர்நாடகத்திலோ, இன்னொரு மாநிலத்திலோ வேறு ஓர் ஆளுநர் எடுக்கும் முடிவு விவாதிக்கப்படக் கூடாது. அந்தந்த சூழ்நிலையில், அந்தந்த ஆளுநர்களுக்கு எது சரி என்று தோன்றும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், ஆளுநரின் செயல்பாட்டை நீதித்துறை கட்டுப்படுத்தவோ, அவருக்கு உத்தரவிடவோ முற்படுவது என்பது மிகப்பெரிய அதிகார வரம்பு மீறல். 
அரசியல் சாசனம் நீதித்துறைக்கும் நிர்வாகத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் தனித்தனியாக அதிகாரங்களை வழங்கி ஒன்றின் மீது மற்றொன்று அதிகாரம் செலுத்த முடியாத வகையில் மிகத்தெளிவாக விதிகளை வகுத்திருக்கிறது. ஆனால், நமது அரசியல்வாதிகள் தங்களது சுயலாபம் கருதி நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை வலியப்போய் நீதித்துறையின் கரங்களில் ஒப்படைக்க முற்பட்டிருக்கிறார்கள். இதே போக்கு தொடருமானால், அரசு நிர்வாகம் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பது வரை நீதித்துறை தலையிட்டு வழிகாட்ட முற்படும் விபரீதம் அரங்கேறக்கூடும்.
கர்நாடக அரசியல் சம்பவங்கள் தவறான முன்னுதாரணங்களுக்கு வழிகோலியிருக்கின்றன. இதைவிட ஆளுநர் பதவியை அகற்றிவிட்டு நீதித்துறைக்கே அந்த அதிகாரத்தை வழங்கி விடலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com