வரியைக் குறையுங்கள்!

இதுவரை இல்லாத அளவுக்கு

இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்திருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2013}ஆம் ஆண்டு 
செப்டம்பர் மாதத்தில்தான் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.06}ஐத் தொட்டது. இப்போது பெட்ரோல் ரூ.73.15}ஆகவும், டீசல் ரூ.71.32}ஆகவும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. 
கடந்த ஏழு நாட்களாகத் தொடர்ந்து தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பொதுத் துறை நிறுவனங்கள் தினசரி அடிப்
படையில் விலையை நிர்ணயிப்பது மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பிறகு தங்கம், வெள்ளி விலை நிலவரம்போல, பெட்ரோல் விலை நிலவரத்தையும் மக்கள் அன்றாடம் பார்த்து தெரிந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பிரண்ட் எனப்படும் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்தான் உலகளாவிய அளவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அதுமட்டுமே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்துக்கு அடிப்படையாக இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.
இப்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரல் ஒன்றுக்கு 75 டாலராக (சுமார் ரூ.5,100) உயர்ந்திருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். 
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி இந்தியா கச்சா எண்ணையை பேரல் ஒன்றுக்கு சுமார் 64 டாலர் (சுமார் ரூ.4,360) என்கிற சராசரி அளவில் இறக்குமதி செய்கிறது. 2009 ஜூலையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்று ரூ.44.72}ஆகவும், டீசல் ரூ.32.87}ஆகவும் இருந்தது. அப்போதும் கச்சா எண்ணெய் விலை இதேபோல பேரல் ஒன்றுக்கு 65 டாலருக்கு மேல் உயரத்தான் செய்தது. சுத்திகரிப்பு செலவு, போக்குவரத்து செலவு என்று கடந்த ஒன்பது ஆண்டுகளில் என்னதான் அதிகரித்திருந்தாலும்கூட, இப்போது காணப்படும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 வித்தியாசத்திற்கான காரணம் புரியவில்லை.

பெட்ரோல், டீசல் விலை நமது அண்டை நாடுகள் அனைத்தையும்விட இந்தியாவில்தான் அதிகம். பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளும் நம்மைப் போலவே சர்வதேசச் சந்தையில் இதே விலையைக் கொடுத்துத்தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறார்கள். ஆனால், அந்த நாடுகளால் நம்மைவிட மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு பெட்ரோலும், டீசலும் வழங்க முடியும்போது இந்தியாவில் மட்டும் ஏன் இந்த விலை என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. 

நம்மைவிடச் சிறிய அண்டை நாடுகள் அதிக அளவில் பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்குகின்றனவா என்று கேட்டால், அதுவும் இல்லை.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2010}இல் பெட்ரோலுக்கான மானியத்தை நிறுத்துவது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. அதுமுதல் கச்சா எண்ணெயின் சந்தை விலைக்கு நிகராக பெட்ரோல் விலையை நிர்ணயிக்க முடிவு எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வந்த முதல் ஆண்டு டீசலுக்கு தரப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டது. பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்குவதில்லை என்றும், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப வாடிக்கையாளர்கள் விலை கொடுக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்ததில் தவறு காண முடியாது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை பாதிக்குப் பாதியாக குறைந்தது. கச்சா எண்ணெய் விலைக் குறைவுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கான பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க முற்பட்ட அரசு, கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பதில் தயக்கம் காட்டாத அரசு, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது வாடிக்கையாளர்களுக்கான விலையை குறைக்காமல் இருந்ததுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அந்த மக்கள் மீது நடத்திய மிகப்பெரிய மோசடி. கடந்த மூன்று ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை குறைந்தும்கூட அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு அரசு வழங்கவில்லை என்பதை வேறு எப்படி கூறுவது?

நாம் லிட்டர் ஒன்றுக்கு 73 ரூபாய் 15 பைசா கொடுக்கும் பெட்ரோலின் விலையில் கச்சா எண்ணெயின் விலை, சுத்திகரிப்புச் செலவு, போக்குவரத்துச் செலவு அனைத்தையும் சேர்த்தாலும்கூட ரூ.40}க்கு மேல் இருக்காது எனும் நிலையில், இந்த அளவுக்கு வரிகளை விதித்து வாடிக்கையாளர்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எல்லா பொருள்களையும் ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்த மத்திய அரசு பெட்ரோல், டீசலையும் ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வந்தாலே போதும் விலை பாதியாகக் குறைந்துவிடும்.

கர்நாடக வாக்கெடுப்புக்காக ஏறத்தாழ 20 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்காமல் வைத்திருந்த அரசியல் உள்நோக்கத்தை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. அது போகட்டும், அரசு இப்போதாவது அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையின் தாக்கத்தை மக்கள் தலையில் சுமத்தாமல் பெட்ரோல், டீசலை உடனடியாக ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும். 

கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் பெட்ரோல், டீசலில் வருவாய் ஈட்டியது போதும். அறுவடைக் காலம் தொடங்கியிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பது ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்தி, விலைவாசியையும் கட்டுக்கடங்காத அளவுக்கு உயர்த்தக்கூடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இன்னும் ஒரு வருடத்தில் மக்களைச் சந்திக்க வேண்டும் என்பது நினைவில் இருக்கட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com