தொடரும் விபத்துகள்!

கடந்த வாரம் உத்தரப் பிரதேச

கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் கட்டுமானத்திலிருந்த மேம்பாலம் நொறுங்கி விழுந்து 25 பேர் உயிரை பலி வாங்கியிருக்கிறது. பலரும் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் நொறுங்கி விழுந்த மேம்பாலத்தின் மிக அருகில்தான் தேசிய பேரிடர் மீட்புப் படையின் முகாம் அமைந்திருக்கிறது. அப்படியும் அங்கிருந்து உடனடியாக உதவ வரவில்லை என்பதுதான் சோகம்.
வாராணசியின் மிக அதிகமான போக்குவரத்து நெரிச்சலும், ஜன நெருக்கடியும் உள்ள சாலையில் கட்டப்பட்டு வந்த இந்த மேம்பாலப் பணி கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்திருக்க வேண்டும். ஏற்கெனவே தாமதப்பட்டிருந்தாலும்கூட, மாலை நேரத்தில் மிக அதிகமான போக்குவரத்தும் பொதுமக்கள் நடமாட்டமும் உள்ள நேரத்தில் கட்டுமானப் பணியை நடத்த முற்பட்டது மிகப்பெரிய குற்றம். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் உத்தரப் பிரதேச மாநில பாலம் கட்டுமானக் கழகம் இந்தப் பணியில் ஈடுபட்டதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
முந்தைய அரசில் லக்னெளவில் பாலம் கட்டுமானக் கழகத்தால் கட்டப்பட்ட பல பாலங்களில் விரிசல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து அகற்றப்பட்டவர் ராஜன் மிட்டல். யோகி ஆதித்நாத் தலைமையில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அதே ராஜன் மிட்டலை மீண்டும் பாலம் கட்டுமானக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கும்போதே யோசித்திருக்க வேண்டும் அதன் பின்விளைவுகளை.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதேபோல மேம்பாலம் இடிந்து விழுவதும், கட்டடங்கள் சரிவதும் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. 2016 மார்ச் மாதம் கொல்கத்தாவில் விவேகானந்தா சாலையில் கட்டுமானத்திலிருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 25-க்கும் அதிகமான பேர் உயிரிழந்தார்கள். அந்த மேம்பாலத்தை முழுமையாக இடித்துவிட வேண்டும் என்று வல்லுநர் குழு பரிந்துரைத்தும்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக அரைகுறையாக இடிந்த நிலையில் இருக்கும் மேம்பாலம் இன்னும் அகற்றப்படாமலேயே தொடர்கிறது.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் கடந்த ஆண்டு இதேபோல கட்டுமானத்திலிருந்த ஒரு மேம்பாலம் இடிந்து விழுந்தது. மும்பையில் 2.45 கி.மீட்டர் நீளமுள்ள லால்பாக் மேம்பாலத்தில் மூன்று, நான்கு இடங்களில் விரிசல் ஏற்பட்டு, அது கண்டுபிடிக்கப்பட்டதால் மூடப்பட்டு சரி செய்யப்பட்டது. மும்பை எல்டின் சாலை மேம்பால விபத்து இன்னோர் உதாரணம். இதுபோல இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் மழைக்காலங்களில் சாலைகள் பழுதடைதல், பாலங்கள் இடிந்து விழுதல் என பொது மராமத்துக் கட்டமைப்புகள் இடிந்து விழுவதும், பழுதடைவதும் சாதாரணமாகிவிட்டிருக்கிறது.
இந்தியாவின் மேம்பாலங்கள் மட்டுமல்ல, அணைகளும்கூட ஆபத்தானவை என்பதை நாம் உணர வேண்டும். போதுமான பராமரிப்பும், பாதுகாப்புத் தணிக்கையும் இல்லாததால் பல அணைகளின் உறுதி குலைந்திருப்பது குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் கணக்குத் தணிக்கை அதிகாரி நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவிலுள்ள 4,862 பெரிய அணைகளில் பேரிடர் நிர்வாகத் தயார் நிலை 349 அணைகளில் மட்டுமே காணப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. பெரும்பாலான அணைகளில் முறையான பராமரிப்பு வேலைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அது சுட்டிக்காட்டுகிறது. பல பெரிய அணைகள் எந்த நதியின் மீது அமைக்கப்பட்டிருக்கின்றன என்கிற விவரம்கூட சரியாக இல்லை என்பதுதான் உண்மை நிலை.
இந்தியாவைப் பொருத்தவரை, மிகப்பெரிய கட்டமைப்புப் பற்றாக்குறை நிலவுகிறது. பல அடுக்குக் கட்டடங்கள், பாலங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதைகள் ஆகியவற்றின் நிர்மாணத்தில் முனைப்பும் வேகமும் காட்டப்படுகிறது. அதே நேரத்தில் அவற்றின் தரத்தையும், ஆயுட்காலத்தையும் உறுதிப்படுத்துவதிலும் முனைப்புக் காட்டப்படுகிறதா என்றால் இல்லை. 
எல்லா பெரிய கட்டுமானத் திட்டங்களிலும் அவ்வப்போது பழுதுபார்க்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும். ஆனால், செய்வதில்லை. இதற்கு மிக முக்கியமான காரணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் இவர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் விரும்பத்தகாத கூட்டு. தரம் குறைந்த கட்டுமானத்துடன் சாலைகளையும், மேம்பாலங்களையும் அமைத்து, அதில் லாபம் ஈட்டுவதை மட்டுமே மேலே சொன்ன கூட்டணி கருத்தில் கொண்டு செயல்படுவதன் விளைவுதான் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக நாம் எதிர்கொள்ளும் கட்டுமான விபத்துகள். 
இதுபோன்ற விபத்துகளில் முதல் குற்றவாளி கட்டுமான ஒப்பந்தக்காரர்தான். ஒப்பந்தப்புள்ளி கோருவதிலும் ஒப்பந்தங்களை வழங்குவதிலும் இன்னும் அதிகமான வெளிப்படைத்தன்மை ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். போதுமான தகுதியும், அனுபவமும் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் ஏற்படுத்த வேண்டும். லாபத்திற்காக கட்டுமானத்தின் தரத்தை குறைப்பவர்களும், கட்டுமானப் பணியைத் தவறாக நிறைவேற்றுபவர்களும், குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிக்காதவர்களும் கண்டிக்கப்பட்டால் மட்டும் போதாது, கடுமையாக தண்டிக்கப்படவும் வேண்டும்.
அதிகாரிகளும் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் லாபம் ஈட்டும் வியாபாரிகளாகத் தங்களைக் கருதாமல் மக்கள் சேவையில் ஈடுபட்டிருப்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே வாராணசியில் நடந்தது போன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com