அவசர கவனம் அவசியம்!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் அதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை இதுவரை இல்லாத அளவில் அதிகரித்ததும் மட்டும்தான் நமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் அதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை இதுவரை இல்லாத அளவில் அதிகரித்ததும் மட்டும்தான் நமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இதைவிட முக்கியமான இன்னும் சில பிரச்னைகளை இந்தியா எதிர்கொள்கிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. 2012- 13-இல் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, அதாவது நமது இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையேயான இடைவெளி, 88.16 பில்லியன் டாலராக (சுமார் ரூ.6.02 லட்சம் கோடி) இருந்தது, 2016-17-இல் 15.30 பில்லியன் டாலராகக் (சுமார் ரூ.1.05 லட்சம் கோடி)குறைந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்து நமது வர்த்தகப் பற்றாக்குறையை மீண்டும் அதிகரிக்க வைத்திருக்கிறது. 2017-18-இல் 50 பில்லியன் டாலரை (சுமார் ரூ.3.41 லட்சம் கோடி) தொட்டுவிட்டிருக்கும் நிலையில், இந்த விலை உயர்வு தொடர்ந்தால் வர்த்தகப் பற்றாக்குறை 75 பில்லியன் டாலரை (சுமார் ரூ.5.12 லட்சம் கோடி) எட்டக்கூடும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பும் போதாதென்று இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 5 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.34,152 கோடி) அதிகமாகத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்திருக்கின்றன. கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இப்போது வரை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6.2 சதவீதம் குறைந்து, ஆசியச் செலாவணிகளில் மிகவும் வலிமை இழந்த செலாவணியாக இந்திய ரூபாயை மாற்றியிருக்கிறது.

ஆர்ஜென்டினாவின் "பெசோ', துருக்கியின் "லிரா', பிரேஸிலின் "ரியல்', ரஷியாவின் "ரூபிள்' ஆகியவற்றைத் தொடர்ந்து இந்திய ரூபாயும் வலுவிழக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த மே - ஆகஸ்டு 2013-இல் காணப்பட்ட அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை என்றாலும் இப்போதைய வலுவிழப்பு கவலைக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை. 

2017-18-இல் இந்திய வர்த்தகப் பற்றாக்குறை 156.83 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10.7 லட்சம் கோடி). கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை இருந்ததில்லை. இத்தனைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலராக (சுமார் ரூ.6,830)இருந்தது. இப்போது பேரலுக்கு சுமார் 80 டாலர் (சுமார் ரூ.5,464)அளவில்தான் இருந்து கொண்டிருக்கிறது. அதனால், கச்சா எண்ணெய் விலை மட்டுமே வர்த்தகப் பற்றாக்குறைக்கு காரணமாக இருக்க வழியில்லை. சர்வதேச வர்த்தகச் சூழல் சாதகமாக இருந்தும்கூட, நமது ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதுதான் வர்த்தகப் பற்றாக்குறைக்கு மிக முக்கியமான காரணம்.

அமெரிக்கா தனது நிதிக்கொள்கையில் சில கடுமையான கெடுபிடிகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. டாலரின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முற்பட்டிருக்கிறது. முதலீட்டுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கிறது. ஏனைய நாடுகளில் பணத்தை முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் கூடுதல் வட்டி கிடைக்கும் என்பதால் அதை அமெரிக்காவுக்குத் திருப்ப முற்பட்டிருக்கிறார்கள். 

அதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் டாலருக்கான விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. உலகின் பல்வேறு செலாவணிகளைக் கொடுத்து டாலரை வாங்கி வைத்து லாபம் ஈட்ட முற்படுகிறார்கள். நாம் மட்டுமல்ல, இந்தோனேஷியா, ஆர்ஜென்டினா, மெக்ஸிகோ, துருக்கி ஆகிய நாடுகளும் நம்மைப் போலவே டாலருக்கு எதிரான நாணய மதிப்புச் சரிவை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறது என்றால், டாலரை வாங்குவதற்கு நாம் அதிக விலையைக் கொடுக்கிறோம் என்று பொருள். ஒரேயடியாக இது இந்தியாவுக்கு பாதிப்பு என்று சொல்லிவிட முடியாது. காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்போது சர்வதேசச் சந்தையில் நமது பொருள்களுக்கு கூடுதல் வரவேற்பு நியாயமாக ஏற்பட வேண்டும். ஏனென்றால், முன்பைவிட குறைந்த டாலர் செலவில் சர்வதேசச் சந்தையில் இந்தியப் பொருள்களைப் பெற முடியும். இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ஒன்று. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொள்ளும் தயார் நிலையில் நாம் இல்லை. 

ரூபாயின் மதிப்பு குறைந்த நிலையிலும், சீனா உள்ளிட்ட நாடுகளிடம் விலையில் போட்டியிட முடியாத நிலையில் இருக்கிறோம். மென்பொருள், மருந்துகள் உள்ளிட்ட ஒருசில துறைகள்தான் ரூபாய் மதிப்பு குறைந்ததால் பயனடையப் போகின்றன. வெளிநாடுகளிலிருந்து கச்சாப் பொருள்களை இறக்குமதி செய்து பொருள் தயாரித்து அதன் மதிப்பைக் கூட்டி ஏற்றுமதி செய்பவர்கள் இதனால் பயனடைய மாட்டார்கள்.

இந்தியாவில் கணிசமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருக்கிறது என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. வர்த்தகப் பற்றாக்குறை ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாயின் மதிப்பு குறைவும் நமது பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். உடனடியாக இதை எதிர்கொள்ள தேவையான கொள்கை முடிவுகளை எடுத்து நிதிநிலைமையையும், விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருப்பதில் அரசு உடனடி கவனம் செலுத்தியாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com