கர்'நாடகம்'  காட்சி 2

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் ஹெச். டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த.) - காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் ஹெச். டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த.) - காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க, கடந்த ஒன்பது நாள்களாக இரண்டு கட்சிகளாலும் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டிருந்த 117 உறுப்பினர்களும் எதிர்பார்த்தது போலவே வாக்களித்திருக்கிறார்கள். 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் விசுவாசத்தில் அவர்கள் சார்ந்த கட்சித் தலைமைக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், பத்திரிகையாளர்கள், உறவினர் உள்ளிட்ட யாருமே சந்தித்துப் பேசுவதற்குக்கூட அனுமதி அளிக்காமல் அவர்களை ஐந்து நட்சத்திர விடுதிகளில் மஜத - காங்கிரஸ் கட்சித் தலைமைகள் பாதுகாத்து வைத்திருக்கும்? இது ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் செயல்பாடு என்று நாம் பெருமிதம் கொள்ளலாம். ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது!
கர்நாடக சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், பா.ஜ.க.வுக்கு 104 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். பா.ஜ.க.வினால் போதிய பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. 78 உறுப்பினர்கள் கொண்ட ஆட்சியிழந்த காங்கிரஸ் கட்சி, 37 உறுப்பினர்கள் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முற்பட்டிருக்கிறது. முதல்வராக ம.ஜ.த.வின் குமாரசாமியும், துணை முதல்வராக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.பரமேஸ்வரும் பா.ஜ.க.வுக்கு எதிரான பல்வேறு கட்சித் தலைவர்களின் முன்னிலையில் பிரமாண்டமாகப் பதவி ஏற்றுக் கொண்டார்கள். 
சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், இனிதான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான பதவிப் பங்கீட்டுப் பிரச்னைகள் தொடங்கப் போகின்றன. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நான் முதல்வராகத் தொடர்வேன் என்று குமாரசாமி பேட்டியளித்த அடுத்த நாளே, துணை முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் பரமேஸ்வர், முதல்வர் பதவி சுழற்சி முறையில் அமைவதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பேட்டியளிக்கிறார். 
இப்போதே எந்தக் கட்சிக்கு எந்தெந்தத் துறைகள் என்பது குறித்த விவாதம் தொடங்கியிருக்கிறது. அதிக எண்ணிக்கை கொண்ட காங்கிரஸுக்கு 22 அமைச்சர்களும் 37 உறுப்பினர்களே கொண்ட ம.ஜ.த.வுக்கு 12 அமைச்சர்களும் என்று பிரித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இரண்டு கட்சிகளிலுமே அத்தனை உறுப்பினர்களும் அமைச்சர் பதவி ஆசையில் வலம் வரும் நிலையில், எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது ஜனநாயகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் முயற்சியாகத்தான் இருக்கும். 
ஒருசில உறுப்பினர்களுக்கு பணமோ, பதவியோ கொடுத்து ஆதரவு பெற்றால் அது குதிரை பேரம், ஜனநாயக விரோதம். ஆனால், ஆட்சியின் பயனை ஆதரவு தரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தால் அது கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயகம் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கர்நாடகத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அங்கே நடந்தேறி வரும் சம்பவங்கள் இந்திய ஜனநாயகத்தின் போக்கை படம் பிடிக்கின்றன. இந்தியாவின் இரண்டு பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க.வும் மட்டுமல்லாமல், தெலுங்கு தேசம், அதிமுக, ம.ஜ.த., உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சிகளும் கூட வெவ்வேறு காலகட்டங்களில் இதேபோல உறுப்பினர்கள் விலைபோய்விடாமல் இருப்பதற்கு நடத்திய பிரயத்தனங்கள் இப்போது வரலாறு ஆகிவிட்டிருக்கின்றன. 
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்கள் பெங்களூருக்கும் கோவாவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டபோதும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டபோதும், அதை ஜனநாயக விரோதம் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை என்றும் விமர்சித்தவர்கள், இப்போது கர்நாடகத்தில் நடத்தப்பட்ட அதேபோன்ற நாடகத்தை 'அரசியல் ராஜதந்திரம்' என்று கொண்டாடுகிறார்கள். மாற்றுக்கட்சிகளிலிருந்து உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுப்பது எந்த அளவுக்குத் தரம்கெட்ட அரசியலோ, அதைவிட மோசமானது தங்களது கட்சியில் உள்ள உறுப்பினர்களின் விசுவாசத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது.
கட்சிகளை மையமாக வைத்து செயல்படும் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம், பெரும் பண முதலைகளின் பிணைக் கைதியாக மாற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் செலவுகளும், தேர்தல் நன்கொடைகளும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றியிருக்கின்றன. கொள்கை அடிப்படையிலான கட்சிகளேகூட வரைமுறை இல்லாமல் நன்கொடை வாங்குவதிலும், வேட்பாளர் தேர்விலும் சமரசம் செய்து கொள்கின்றன. இந்த நிலையில் ஆட்சியைப் பிடிப்பதுதான் அரசியல் கட்சிகளின் குறிக்கோளாக இருக்கிறதே தவிர, மக்கள் சேவை என்பது பொய்க் காரணம் மட்டுமே.
கர்நாடகத்தில் இனிமேல்தான் நாடகமே தொடங்க இருக்கிறது. குமாரசாமி இதுவரை முழுமையாகத் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. மக்களவைத் தேர்தல் வரை ஆட்சி தொடர்ந்தால் அது அதிர்ஷ்டம். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும் அவரை முதல்வராகத் தொடர காங்கிரஸ் அனுமதித்தால் அது அவரது பேரதிர்ஷ்டம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com