"நிபா' எச்சரிக்கை!

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் "நிபா' நுண்ணுயிர்த் தொற்றால் இதுவரை 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் "நிபா' நுண்ணுயிர்த் தொற்றால் இதுவரை 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். கேரள மாநில சுகாதாரத் துறை ரத்தப் பரிசோதனைக்கு அனுப்பிய 77 மாதிரிகளில் 15 மாதிரிகளில் "நிபா' தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. மூன்று பேர் தீவிர சிகிச்சையில், கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
 1998-இல் மலேசியாவிலுள்ள "நிபா' என்கிற கிராமத்தில்தான் முதன்முதலில் இந்த நோய்த் தொற்றுக்கான பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கே இருக்கும் பன்றிப் பண்ணைதான் இந்தத் தொற்றுக்கான காரணம் என்று தெரியவந்தது. அருகிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வனத்திலிருந்த வெüவால்கள் நிபா கிராமத்தைத் தஞ்சமடைந்தன. அந்த வெüவால்கள்தான் இந்த நுண்ணுயிர்த் தொற்றின் வாகனங்களாகச் செயல்பட்டன. அப்போதுதான் தெரிந்தது, "நிபா' நுண்ணுயிர்த் தொற்று வெüவால்கள் மூலம் பரவுகிறது என்கிற உண்மை.
 உலகில் 1,200-க்கும் அதிகமான வெüவால் இனங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ நூற்றுக்கும் அதிகமான வெüவால் இனங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் 29 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில் ஐந்து வகை வெüவால்கள் மட்டுமே தாவர உணவு உண்பவை. ஏறத்தாழ ஒன்றரை கிலோ எடையுள்ள "பறக்கும் நரி' என்று அறியப்படும்வெüவால்கள்தான், "நிபா' நுண்ணுயிரிகளின் வாகனங்கள்.
 இந்த "பறக்கும் நரி' வெüவால்கள்தான், காடுகள் செழிப்பதற்கும் காரணிகள். ஏறத்தாழ 60 கி.மீ. சுற்றளவு பறக்கும் இந்தவெüவால்கள் பழங்களைத் தின்று அதன் கொட்டைகளை ஆங்காங்கே போடுவதால்தான் காடுகள் அடர்த்தியாக வளர்கின்றன. காடுகளில் சுற்றித் திரியும் இந்த வெüவால்கள், வனங்கள் அழிக்கப்படும்போது மக்கள் குடியிருக்கும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடம் பெயரும் சூழல் ஏற்படுகிறது. அதன் விளைவுதான் "நிபா' நோய்த் தொற்று.
 பழங்களை வெüவால் கடிக்கும்போது "நிபா' தொற்று அதற்குப் பரவுகின்றது. பழங்களிலிருந்து மனிதர்களுக்கும். அதேபோல, வெüவால்களின் கழிவுகள், எச்சில் ஆகியவற்றில் காணப்படும் "நிபா' நுண்ணுயிரிகள், பன்றி, நாய், பூனை உள்ளிட்ட மிருகங்களுக்குத் தொற்றிக்கொள்கின்றன. அவற்றிலிருந்து அதிவேகமாக மனிதர்களுக்கும் பரவுகிறது இந்தத் தொற்று.
 "நிபா' தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீத நோயாளிகள், தாக்கப்பட்ட ஒன்றிரண்டு நாட்களில் மரணித்து விடுகிறார்கள். இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரையில் எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சிகிச்சை என்பது நோயாளிக்குத் தரப்படும் மருத்துவ கவனமே தவிர, மருந்து மாத்திரைகள் அல்ல. அதனால், உடனடியாக "நிபா' நோய்த் தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை முடுக்கிவிட உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.
 இதற்கு முன்னால் இந்தியாவில் 2007-இல் "நிபா' நோய்த் தொற்று மேற்கு வங்கத்திலுள்ள நடியா கிராமத்தில் காணப்பட்டது. அங்கே வெüவாலின் கழிவுகள் இருந்த தென்னங்கள் அருந்தியதன் மூலம் இந்தத் தொற்று பரவியது. கடுமையான நடவடிக்கைகள் மூலமும், நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டதன் மூலமும் "நிபா' மேலும் பரவாமல் அப்போது தடுக்கப்பட்டது.
 "நிபா' நுண்ணுயிரித் தொற்றின் மிகப்பெரிய ஆபத்து, இதனால் தாக்கப்பட்டவர்களின் மூச்சுக்காற்று, எச்சில், ஸ்பரிசம் உள்ளிட்டவையால் இது அதிவேகமாக அடுத்தவரைத் தொற்றிக்கொள்ளும் என்பதுதான். கோழிக்கோட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் உயிரை "நிபா' பலி வாங்கி விட்டிருக்கிறது. நோய் தாக்கியிருப்பது தெரியாமல், ஏதோ காய்ச்சல் என்று கருதி உறவினர்கள் உதவும்போது அவர்களையும் தொற்றிக் கொள்கிறது இந்த நுண்ணுயிரி எனும்போது, இதன் கடுமை எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 கேரளத்தில் "நிபா'வால் தாக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவர் "நிபா'வால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். நோயின் கடுமை அதிகரிக்க அதிகரிக்க "நிபா' தொற்று பரவும் வேகமும் அதிகரிப்பதால், மருத்துவமனை ஊழியர்கள், குறிப்பாக, மருத்துவர்களும், செவிலியர்களும் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. அதனால், போதிய கவனம் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக மிக அவசியம்.
 கேரள சுகாதாரத் துறையையும், கோழிக்கோடு மருத்துவமனை மருத்துவர்களையும் நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதலாவது நோயாளி அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து அவரது சகோதரரும் அனுமதிக்கப்பட்டபோது மருத்துவர்கள் நோய்த் தொற்றின் காரணம் குறித்து சிந்தித்ததால்தான், "நிபா' நுண்ணுயிர்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வளவு விரைவாக வேறு எந்த வளர்ச்சி அடையும் நாட்டிலும் "நிபா' நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்காது. அதுமட்டுமல்ல, கேரள அரசும், சுகாதாரத் துறையும் "நிபா' நோய்த் தொற்று பரவாமல் இருக்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
 மனிதன் வளர்ச்சி என்கிற பெயரில் காடுகளை அழிப்பதால் மழை பெய்யாது என்பது மட்டுமல்ல, "நிபா' உள்ளிட்ட நுண்ணுயிரித் தாக்குதல்களால் நகர்ப்புறங்கள் அழியும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். "நிபா' மனித இனத்துக்கே தரும் எச்சரிக்கைச் செய்தி இது.
 மக்களுக்கு பீதி ஏற்படாத விதத்தில், "நிபா' குறித்தும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். பக்கத்து வீட்டில் தீப்பிடித்தெரியும்போது நாம் கவலைப்படாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com