யாருக்காக இந்தக் காப்பீடு?

நரேந்திர மோடி அரசால் கடந்த 2016 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் 'பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம்'. உலகிலேயே

நரேந்திர மோடி அரசால் கடந்த 2016 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் 'பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம்'. உலகிலேயே இந்த அளவிலான விவசாயக் காப்பீட்டுத் திட்டம் வேறெங்கும் அறிவிக்கப்படவும் இல்லை; நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை என்பதுதான் இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பு. இந்தத் திட்டத்தால் ஒட்டுமொத்த விவசாயிகளும் நரேந்திர மோடி அரசைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை அடையவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் உண்மை.
பயிரிடுவதற்கு முந்தைய நிலையிலிருந்து அறுவடைக்குப் பிறகு விளைபொருள்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வரை ஏற்படும் எல்லா இடர்களுக்கும் (ரிஸ்க்) பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. காரிப் சாகுபடிக்கு 2%, ராபி சாகுபடிக்கு 1.5%, பணப்பயிர்களுக்கும், தோட்டப் பயிர்களுக்கும் 5% என்று மிகக்குறைவான தொகைதான் ஆண்டொன்றுக்கு விவசாயிகளிடமிருந்து கட்டணமாகப் பெறப்படுகிறது. காப்பீட்டுக்கான மீதமுள்ள கட்டணத் தொகையை மத்திய - மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன.
காப்பீட்டு நிறுவனங்கள் 2016 - 17 நிதியாண்டில் ரூ.22,180 கோடியும், 2017 - 18 நிதியாண்டில் ரூ.24,454 கோடியும் விவசாயிகளிடமிருந்தும், அரசிடமிருந்துமாக காப்பீட்டுக் கட்டணம் வசூலித்திருக்கின்றன. ஆனால், 2016 - 17இல் விவசாயிகளுக்கு அவர்கள் வழங்கி இருக்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.12,959 கோடி மட்டுமே. இந்த ஆண்டில், இதுவரை வழங்கப்பட்டிருக்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.400 கோடி மட்டுமே.
கடந்த ஆண்டுக்கான காரிப் சாகுபடிப் பருவம் டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது. மாநில அரசுகளின் பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.13,655 கோடி. இதில் ரூ.1,759 கோடி இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படியும், விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டிருப்பது என்னவோ வெறும் ரூ.402 கோடி மட்டுமே. கடந்த 2016 - 17 சாகுபடி பருவங்களிலும்கூட, காப்பீட்டு நிறுவனங்கள் அங்கீகரித்து ஒப்புக் கொண்டதற்கும், வழங்கப்பட்டதற்கும் இடையேயான வித்தியாசம் ரூ.1,474 கோடி. ஒப்புக்கொண்ட தொகையைக்கூட அந்த நிறுவனங்கள் இன்னும் வழங்க முன்வரவில்லை.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தைபோல விவசாயிகளுக்கு வேறு வரப்பிரசாதம் எதுவுமே அமைந்துவிடாது. இந்தத் திட்டம் மட்டும் முறையாகவும், தாமதமில்லாமலும் நடைமுறைப்படுத்தப்பட்டால், விவசாயிகள் நிலைமை மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த கிராமப் பொருளாதாரமும், வேளாண் உற்பத்தியும் மேம்படும் என்பது உறுதி. 
இந்தத் திட்டத்தின் முதல் தவறு, காப்பீட்டுக் கட்டணத்தில் 50 சதவீதத் தொகையை மாநில அரசுகளைக் கட்டச் சொல்வது. மாநில அரசின் வேளாண் துறைதான், பயிர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு எத்தகையது என்பதையும், அதனால் விவசாயிக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பையும் தீர்மானிக்கின்றன. அதனால் அவர்களைக் காப்பீட்டுக் கட்டணத்தில் 50 சதவீதம் தரச் சொல்வதில் தவறில்லை என்பது மத்திய அரசின் வாதம்.
பிரதம மந்திரியின் பெயரில் காப்பீட்டுத் திட்டம் இருப்பதால், மாநில அரசுகளுக்கு இந்தத் திட்டத்தில் முழுமையான ஈடுபாடு இல்லாமல் இருக்கிறது. உரத்துக்கும், பயிர்க் கடனுக்கும் மத்திய அரசு மானியங்கள் வழங்கும் நிலையில், பயிர்க் காப்பீட்டின் மொத்தக் கட்டணத்தையும் அல்லது பெரும் பகுதிக் கட்டணத்தை மத்திய அரசே ஏற்றுக் கொள்வதன் மூலம் விவசாயிகள் உடனடியாக இழப்பீடு பெறுவதை உறுதிப்படுத்த முடியும். மாநில அரசு தனது பங்குக்கான கட்டணத் தொகையைத் தரவில்லை என்று காரணம் கூறி காப்பீட்டு நிறுவனங்கள் இப்போது தட்டிக் கழிப்பதுபோல, அப்போது செய்ய முடியாது.
இந்தத் திட்டத்தின் இன்னொரு மிகப்பெரிய குறைபாடு, காப்பீட்டுக் கட்டணத்தை நிர்ணயிக்கும் முறை. உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோல அரசால் அறிவிக்கப்படும் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவது போல, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து கட்டணம் கோரும் முறை நடைமுறையில் இல்லை. அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டு காப்பீடு வழங்குவதுதான் வழக்கம்.
அடுத்தாற்போல, இன்னொரு கேள்வியும் எழுகிறது. அரசு அறிவித்திருக்கும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் எதற்காக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்குக் காப்பீடு வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அது. பல அரசு காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அத்தனை தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கு பெற வேண்டிய அவசியம் என்ன? இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பொருத்தவரை அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களைவிடத் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்தான் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன என்பதுதான் உண்மை.
கடந்த சாகுபடி ஆண்டில் மட்டும் இந்தக் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.9,000 கோடிக்கும் அதிகமான லாபத்தைப் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஈட்டியிருக்கின்றன. இயற்கை பொய்ப்பதாலும், பூச்சிகளின் தாக்குதலாலும், எதிர்பாராத சூழலாலும் பயிர்கள் நாசமாகி விவசாயிகள் அவதிப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதா, இல்லை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளின் பெயரைச் சொல்லி மக்கள் வரிப்பணத்தை அரசிடம் கட்டணமாகப் பெற்று பெரும் லாபம் ஈட்டுவதற்காக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com