யார்தான் கடிவாளம் போடுவது?

அரசியல் கட்சிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்கிற தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தகவல் அதிகாரியின் உத்தரவு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அரசியல் கட்சிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்கிற தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தகவல் அதிகாரியின் உத்தரவு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இப்போது தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் பெறுகின்ற நன்கொடைகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்று விளக்கம் அளித்திருக்கிறது. 
கடந்த 2013 ஜூன் 3-ஆம் தேதி தகவல் ஆணையத்தின் அனைத்து ஆணையர்களும் கூடிய அமர்வு பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஆறு தேசியக் கட்சிகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது. தகவல் ஆணையத்தின் ஆணைக்கு எதிராக எந்த உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ அந்த அரசியல் கட்சிகள் எதிர்த்து முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தகவல் அதிகாரி முதலில் அப்படி தெரிவித்திருந்தார்.
எந்த அரசு மற்றும் பொது அமைப்புகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தலைமைத் தகவல் ஆணையத்துக்குதான் உண்டே தவிர, அந்தந்தத் துறைகள் இதுகுறித்து தங்களுக்குத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியாது. தலைமைத் தகவல் ஆணையம் ஆறு தேசிய கட்சிகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்திருக்கும் நிலையில், அதை உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றங்களோ நிராகரித்திருக்காத நிலையில், தேர்தல் ஆணையம் இப்போது அரசியல் கட்சிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்று அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
நிதிச் சட்டம் 2016, வெளிநாட்டுப் பங்களிப்புச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி அந்நிய நிறுவனங்களிலிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை அனுமதித்தது என்றால், நிதிச் சட்டம் 2017-இல் செய்யப்பட்ட மாற்றங்கள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தி குறிப்பிட்ட வங்கிகள் மூலம் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வழங்க வழிகோலியிருக்கிறது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட 7.5 சதவீத கட்டுப்பாட்டையும் அகற்றியிருக்கிறது. நிழல் நிறுவனங்களும், போலி நிறுவனங்களும் தங்களை அடையாளம் காட்டாமல் எத்தனை கோடி வேண்டுமானாலும் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும். எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கப்பட்டது என்பது நிறுவனங்களின் பங்குதாரர்களுக்குக்கூடத் தெரியாது.
பாஜகவின் வருவாய் 2015-16-இல் ரூ.570 கோடி என்றால், 2016-17-இல் ரூ.1,034 கோடி. எந்த ஓர் அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சிக்கு நன்கொடைகள் வந்து குவிவதும், வருவாய் அதிகரிப்பதும் இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நன்கொடைகள் வந்து குவிவது ஒருபுறம் இருந்தாலும், அதைவிடக் கவலை அளிப்பது, அரசியல் கட்சிகளுக்கு பெயர் தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடைகள் குவியும் விசித்திரம். 
காங்கிரஸ் கட்சி தன்னுடைய நன்கொடை விவரத்தை இன்னும் வெளியிடவே இல்லை. 2016-17-இல் பாஜக பெற்றிருக்கும் ரூ.997 கோடி நன்கொடையில் ரூ.533 கோடி நன்கொடை ரூ.20,000-க்கும் அதிகமானது என்பதால் அது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள ரூ.464 கோடி ரூபாய் எங்கிருந்து யார் மூலம் வந்தது? பகுஜன் சமாஜ் கட்சி 2016-17-இல் யாரிடமிருந்தும் ரூ.20,000-க்கும் அதிகமாக நன்கொடை பெறவில்லை என்பதால், அது குறித்த விவரம் தரவில்லை. அந்தக் கட்சிக்கு ரூ.75 கோடி நன்கொடை வந்திருக்கிறது. இந்த நன்கொடைகள் எல்லாம் சாதாரண தொண்டர்களிடமிருந்தும், கட்சி அனுதாபிகளிடமிருந்தும் பெறப்பட்டதாக அந்தக் கட்சிகள் கூறுவதை நாம் நம்பியாக வேண்டும்.
கருப்புப் பணத்திற்கு அடிப்படைக் காரணம், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளும், தேர்தல் நிதியும்தான் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த நன்கொடைகள் யாரிடமிருந்து பெறப்படுகின்றன என்பதில் வெளிப்படை இல்லாமல் இருப்பதை கட்சிகள் விரும்புகின்றன.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் அரசியல் கட்சிகளின் அடிப்படையில்தான் இயங்குகிறது. அரசியல் கட்சிகளோ, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தடம்புரள வைப்பதில் குறியாக இருக்கின்றன. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படாமல் நாம் தேர்தலுக்குத் தேர்தல் வாக்களிப்பதும், ஆட்சியை மாற்றுவதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்
வதாகத்தான் இருக்குமே தவிர, இதனால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. ஜல்லிக்கட்டுக்கும், ஸ்டெர்லைட்டுக்கும் போராடும் நாம் இதுகுறித்து கவலைப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 
தேர்தல் சீர்திருத்தம் குறித்த 255 சட்ட ஆணைய அறிக்கை, அரசியல் நன்கொடைகள் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது நன்கொடையாளர்களால் அரசை தங்களுக்கு சாதகமாக செயல்பட வைத்துவிடும் என்று தெளிவாகவே கூறியிருக்கிறது. யாரிடம் எதற்காக அரசியல் கட்சி நன்கொடை பெற்றது என்பது வாக்காளர் தெரிந்து கொள்வது மிகமிக அவசியம்.
சமூக சிந்தனையாளர்களும், மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com