வளர்ச்சியும் வேண்டுமே!

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. இதனாலேயே ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. இதனாலேயே ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்று கருதிவிட முடியாது. இதற்கு முன்னாலும் 2010 செப்டம்பர் 28-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. அடுத்த சில நாள்களிலேயே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற்று அந்த ஆலையைத் தொடர்ந்து நடத்தியது ஸ்டெர்லைட் நிர்வாகம் என்பது வரலாறு. 
ஸ்டெர்லைட் பிரச்னையில் முதல் குற்றவாளி இந்த ஆலையை தூத்துக்குடியில் நிறுவவும், செயல்படவும் அனுமதி வழங்கிய அன்றைய ஜெயலலிதா - கருணாநிதி அரசுகள்தானே தவிர, ஸ்டெர்லைட் நிர்வாகம் அல்ல. கடந்த 22 ஆண்டுகளாக தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்திருக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனம் உள்ளூர் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பின்பற்றவில்லை என்பது தெரியாமலா இருந்தது? 
ஸ்டெர்லைட் நிறுவனத்தைப் பொருத்தவரை ஆரம்பம் முதலே பல்வேறு விதிமுறை மீறல்களில் அது ஈடுபட்டு வந்திருக்கிறது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ. தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆலை அமையக் கூடாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 250 மீட்டர் அளவுக்கு பசுமைக் காடுகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், 1994-இல் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியபோது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனை விதித்திருந்தது. அதுமட்டுமல்ல, தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையை வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனம் அவை எதையுமே பின்பற்றவில்லை. இப்படியெல்லாம் இருந்தும் கூட அந்த ஆலை தொடங்கப்பட்டது, செயல்பட்டது. 
நியாயமாகப் பார்த்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி போன்ற ஒரு நகரத்தில் அமைக்க அனுமதி அளித்திருக்கவே கூடாது. துறைமுகத்துக்கு மிக அருகில் ஆலை அமைவதால் சரக்குப் போக்குவரத்துச் செலவு குறையும் என்பதால் தூத்துக்குடியைத் தேர்ந்தெடுத்தது ஸ்டெர்லைட். லாபம் ஈட்டுவது மட்டுமே அதன் குறிக்கோள். அதில் தவறில்லை. ஆனால், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அல்லவா இந்த ஆலைக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னால் இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், மக்கள் நலன் குறித்தும் கவலைப்பட்டிருக்க வேண்டும். வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை தங்கள் பணத்தால் விலைக்கு வாங்கியதன் அடையாளம்தான் தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டு, தொடர்ந்து 22 ஆண்டுகளாக நடத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் நிறுவனம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஏறத்தாழ 50,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஆண்டொன்றுக்கு நான்கு லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஸ்டெர்லைட் நிறுவனம். இந்தியாவில் மொத்த தாமிர உற்பத்தியில் ஏறத்தாழ 35% ஸ்டெர்லைட்டின் பங்களிப்பு. 
இந்தியாவிற்கு ஆண்டொன்றுக்கு 15 லட்சம் டன் தாமிரம் தேவைப்படுகிறது. அதில் பாதிக்குமேல் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் நிறுவனமும், ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனமும் தயாரிக்கின்றன. மீதமுள்ள தேவை இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் தாமிரத் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் 
இப்போது ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டிருக்கிறது. 
வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால், அதன் மறுபக்கமாக சுற்றுச்சூழல் பாதிப்பும், இயற்கை அழிப்பும் தவிர்க்க முடியாதவை. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டால் விளைநிலங்கள் அழிக்கப்படும். ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படும். அதற்காக நெடுஞ்சாலைகள் அமைப்பதை விட்டுவிடுவதா? எந்தவொரு தொழிற்சாலையாக இருந்தாலும், நிச்சயமாக அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்காது. மோட்டார் வாகனங்கள் தேவை என்றால், கூடவே நாம் காற்று மாசையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதுதான் எதார்த்த உண்மை.
தொழில்வளம், தொழிற்சாலைகள் இல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதித்துவிட்டு, அதில் படித்து வெளிவரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டுமானால், தொழிற்சாலைகளை அனுமதிக்காமல் இருக்க முடியாது. சாலைகள் வேண்டாம், மாட்டு வண்டிகளே போதும்; தொழிற்சாலைகள் வேண்டாம், பாரம்பரிய விவசாயமே போதும்; நகர்ப்புற வளர்ச்சி வேண்டாம், கிராமங்களே போதும் என்று நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இனி பின்னோக்கி நகர முடியாது. 
கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் தேவையில்லை என்று முடங்கிவிட முடியாது. நாம் வளர்ச்சியில் பின்தங்கி விடுவோம். அதன் விளைவால் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகும். அதை சமூக விரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும். ஒரேயடியாக வளர்ச்சிக்கு விடை கொடுப்பது புத்திசாலித்தனம் ஆகாது. அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாத இடம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, அங்கே ஸ்டெர்லைட் நிறுவனத்தை இடம்பெயரச் செய்வதுதான் தமிழக அரசு துணிந்து எடுக்க வேண்டிய முடிவு. பாதிப்பே இல்லாத வளர்ச்சி என்பது கிடையாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com