அகற்றுவோம் ஆக்கிரமிப்புகளை!

முதுமலையில் உள்ள சீகூர் கிராமத்தில் கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி 22 வயது பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. கடந்த ஒரு வாரத்தில்

முதுமலையில் உள்ள சீகூர் கிராமத்தில் கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி 22 வயது பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவையைச் சுற்றி மூன்று பேர் யானையால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் நான்கு யானைகள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 125 யானைகள் இறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே 2015-16-இல் 61ஆக இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் யானைகள் அதிகம் உள்ள வனப்பகுதிகளிலும், அதையடுத்த பகுதிகளிலும் மனித-யானை மோதல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 
கடந்த ஜூன் 25-ஆம் தேதி டேராடூன் காத்கோடம் விரைவு ரயில் 70 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரை அடுத்த ராஜாஜி புலிகள் காப்பகம் அமைந்திருக்கும் மோட்டிச்சூர் என்கிற இடத்தில் 17 யானைகள் ரயில் பாதையைக் கடந்து கொண்டிருந்தன. நள்ளிரவு நேரத்தில் அந்தக் கூட்டத்தில் இருந்த 35 வயது யானை ரயிலில் அடிபட்டு அந்த இடத்திலேயே மரணமடைந்தது, அந்த ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கடந்த மாதம் மேற்கு வங்கம் கொல்கத்தாவிலிருந்து 150 கி.மீ.தொலைவிலுள்ள கித்னி ரயில் நிலையத்துக்கு அருகில் தியானேஸ்வரி விரைவு ரயிலில் அடிபட்டு ஒரு குட்டி உட்பட மூன்று யானைகள் ரயில் பாதையின் இருபுறமும் இறந்து கிடந்தது பலரது இதயத்தையும் உலுக்கிய சம்பவம். இதேபோல கடந்த டிசம்பர் மாதம் குவாஹாட்டி-நகர்லகூன் விரைவு ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி யானை உட்பட ஐந்து யானைகள் அஸ்ஸாமிலுள்ள பம்கான் வழித்தடத்தில் இறந்து கிடந்தன.
இந்தியாவில் 110 யானை வழித்தடங்கள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் 28, மத்திய இந்தியாவில் 25, வடகிழக்கு இந்தியாவில் 23, வடமேற்கு வங்கத்தில் 23, வடமேற்கு இந்தியாவில் 11 என்று இவை பரந்து காணப்படுகின்றன. இவற்றில் சில வழித்தடங்கள் இரண்டு மூன்று மாநிலங்களை உள்ளடக்கியவை. மேற்கு வங்கத்தில் உள்ள வழித்தடங்கள் அஸ்ஸாம், ஜார்க்கண்ட் மாநிலங்களையும், தமிழகம், கேரள, கர்நாடக மாநிலங்களையும் உள்ளடக்கியதாக சில வழித்தடங்களும் இருக்கின்றன.
110 யானை வழித்தடங்களில் 70% வழித்தடங்கள்தான் யானைகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. 25% வழித்தடங்களில் அவ்வப்போது யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த வழித்தடங்களில் 29% வழித்தடங்கள் மனிதர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. 66% வழித்தடங்கள் வழியாக நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. 22 வழித்தடங்களின் வழியாக ஏற்கெனவே ரயில் வண்டிகளுக்கான இருப்புப் பாதைகள் போடப்பட்டிருக்கின்றன. மேலும், நான்கு வழித்தடங்களில் ரயில் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
1987 முதல் 2017 வரையிலான 20 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 265 யானைகள் ரயில் விபத்தில் இறந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த எண்ணிக்கையை விட, இரு மடங்கு யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள். இந்திய வனவிலங்கு அறக்கட்டளை என்கிற அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி ஆண்டுதோறும் சராசரியாக 100 யானைகள் ரயில் விபத்திலும், சாலை விபத்திலும், மின்சாரம் பாய்ந்தும் இறந்திருப்பதாகத் தெரிகிறது. குறைந்தது 400 முதல் 450 பேர் யானைகளுடனான மோதலில் இறந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
யானை வழித்தடம் என்பது உணவுக்காக யானைகள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு நகரும் பாதை. இதுபோன்ற யானைக் கூட்டங்களின் நகர்வுதான் ஆரோக்கியமான யானைகளின் இனப்பெருக்கத்துக்கு வழிகோலுகின்றன. இந்த வழித்தடங்களுக்கிடையே சாலைகள் அமைப்பது, இருப்புப் பாதைகள் அமைப்பது, கால்வாய்கள் அமைப்பது, மனிதக் குடியிருப்புகள் ஏற்படுத்துவது என்பவை யானைக் கூட்டங்களின் வழித்தடத்தில் தடைகளை ஏற்படுத்துகின்றன. வேறு வழியில்லாமல் யானைகள் புதிய பாதையைத் தேடி நகரும்போது, அது தேவையில்லாமல் 
மனிதர்களுடனான மோதலில் முடிவடைகிறது. 
யானைகளுக்கு ஏற்கெனவே இருக்கும் உறைவிடங்களே மிக மிகக் குறைவு. அந்த இடங்களும் ஆக்கிரமிக்கப்படும்போது, யானைகள் செய்வதறியாது தடுமாறுகின்றன. 40 விழுக்காட்டுக்கும் அதிகமான யானைகள் அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலோ, அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வனப் பகுதிகளிலோ வசிப்பவை அல்ல. குறிப்பிட்ட பகுதிகளில் அவை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சுதந்திரமாக நகர்ந்து தங்களது உணவைத் தேடிக் கொண்டு கூட்டமாக வாழ்கின்றன.
2005-இல் 24%ஆக இருந்த வனப்பகுதியிலுள்ள யானைகளின் வழித்தடங்கள் இப்போது 12.9% -ஆகக் குறைந்திருக்கின்றன. குறைந்துவரும் வனப்பகுதியும், ஆக்கிரமிக்கப்படும் வழித்தடங்களும் யானைகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் நிலையில், பிரச்னையை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று புரியாமல் வனத்துறையும், அரசும் திகைத்துப் போயிருக்கின்றன என்பதுதான் உண்மை.
2015-இல் அஸ்ஸாமிலுள்ள ராம்தரங் மலையடிவார கிராமத்தில் வாழ்ந்து வந்த 19 குடும்பங்கள் யானைகளின் நடமாட்டத்துக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காகத் தன்னிச்சையாக அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். இதேபோல யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்திருப்பவர்களும் வெளியேறுவதுதான் நியாயம். இல்லையென்றால், அவர்களை வெளியேற்றுவது அரசின் கடமை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com