வரலாற்றுச் சிறப்பு மிக்க வரவு!

ஐஎன்எஸ் அரிஹந்த்தின் மூலம் இந்தியா இப்போது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றுக்கு நிகராக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும்

ஐஎன்எஸ் அரிஹந்த்தின் மூலம் இந்தியா இப்போது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றுக்கு நிகராக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக வலிமை பெற்றிருக்கிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் என்பதுதான் அணுசக்தியில் இயங்கும் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலின் சிறப்பு. மொத்தம் 6,000 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்குகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் மொத்தம் 4 ஏவுதளங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் 12 சிறிய ரக ஏவுகணைகளையோ அல்லது 750 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் நான்கு பெரிய ரக ஏவுகணைகளையோ செலுத்த முடியும்.
 ஐஎன்எஸ் அரிஹந்த்தைத் தொடர்ந்து இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் உருவாக்கப்படுகிறது. ஐஎன்எஸ் அரிஹட் என்கிற இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இப்போது சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் அரிஹட்டும் இணையும் இந்தியா இதுபோன்ற மேலும் மூன்று அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறது. அவற்றில் இரண்டு ஐஎன்எஸ் அரிஹந்த்தையும், ஐஎன்எஸ் அரிஹட்டையும் விட அளவில் பெரியதாகவும், இவற்றைவிட அதிக தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை இயக்கும் வல்லமை படைத்தவையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 ஐஎன்எஸ் அரிஹந்த் என்கிற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப நீர்மூழ்கிக் கப்பல் திட்டம், இன்று நேற்று அல்ல 1970-லேயே அன்றைய இந்திரா காந்தி அரசால் திட்டமிடப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறை, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டது. அதில் முக்கியமானது, சிறிய அளவிலான அணுஉலைகளை உருவாக்கி அவற்றை நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்துவது.
 இந்தியாவின் இந்த முயற்சிக்கு அன்றைய சோவியத் யூனியனிடமிருந்து தொழில்நுட்ப உதவி பெறப்பட்டது என்றாலும்கூட, முழுமையான தொழில்நுட்பம் பகிரப்படவில்லை. 1988-லும், 2012-லும்கூட ரஷியா இந்தியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முற்பட்டதே தவிர, முழுமையான தொழில்நுட்பத்தை பகிரவில்லை. ரஷியா ஒப்பந்த அடிப்படையில் தந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்திய விஞ்ஞானிகள் நமக்கான தொழில்நுட்பத்தை ஏற்படுத்திக் கொண்டதற்கு அவர்களை இந்த வேளையில் இந்திய தேசம் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறது.
 பொக்ரான் 2 அணுகுண்டு சோதனைக்குப் பிறகு 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்துடன் சோதனை நடத்தப்பட்டு, ஐஎன்எஸ் அரிஹந்த் தனது முதல் பாதுகாப்பு ஓட்டத்தை ஏவுகணைகளுடன் நடத்தி முடித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக இந்து மகா சமுத்திரத்திலும் இந்தியாவுக்குக் கிழக்கிலும் ஐஎன்எஸ் அரிஹந்த் சோதனை ஓட்டம் நடத்தியபோது உலகின் புலனாய்வு அமைப்புகள் எவற்றாலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதிலிருந்து, இந்திய கடற்படை இப்போது சர்வதேச அளவில் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் கூடிய வலிமை பெற்றிருப்பது உறுதிப்படுகிறது.
 ஐஎன்எஸ் அரிஹந்த் உள்ளிட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் பாதுகாப்பு கண்காணிப்புக்கு மட்டுமல்லாமல் எதிரிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் அவசியமாகிறது. இந்தியா வலியப்போய் எந்தவித அணு ஆயுத தாக்குதல்களும் நடத்துவதில்லை என்று பொக்ரான் சோதனையின்போதே அன்றைய பிரதமர் வாஜ்பாய் உறுதி அளித்திருக்கிறார். இந்த நிலையில், எதிரி நாடுகள் இந்தியாவின் மீது துணிந்து அணு ஆயுத தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு ஐஎன்எஸ் அரிஹந்த் உள்ளிட்ட அணுசக்தியில் இயங்கும் ஏவுகணைகளைத் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் உதவியாக இருக்கும்.
 தரையின் மூலமும் விமானம் மூலமும் நடத்தப்படும் தாக்குதல்களை ராடார்கள் மூலம் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என்பதால், நமது அணு ஆயுதத் தளங்களை எதிரிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். ஆனால், ஏவுகணைகளைத் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் எதிரிகளின் கண்ணில் படாமல் கடலுக்கு அடியில் இயங்க முடியும் என்பதால், அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடத்தப்படும் என்பது எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமையும்.
 ஐஎன்எஸ் அரிஹந்த்தின் வரவு பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இந்தியா விடுத்திருக்கும் எச்சரிக்கை என்றுதான் கருத வேண்டும். அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதற்காக, பாகிஸ்தான் விபரீதப் போக்கில் இறங்கினால் அதற்குத் தகுந்த எதிர்வினை நடத்த இந்தியா தயங்காது என்பதை ஐஎன்எஸ் அரிஹந்த் உறுதிப்படுத்துகிறது. இதை மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருப்பதை பாகிஸ்தானும் சீனாவும் கட்டாயம் உணர்ந்திருக்கும்.
 இந்தியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் இதைவிட வலிமையான தொலைநோக்குத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மேலும் மூன்று தேவைப்படுகின்றன. சீனாவிடம் இதுபோல 60 நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
 ஐஎன்எஸ் அரிஹந்த்தை உருவாக்க 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதன் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில், விரைவிலேயே இந்தியா நமது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் தேவையைப் பூர்த்தி செய்து, கடற்படையை வலிமைப்படுத்தும் என்று நம்பலாம். ஐஎன்எஸ் அரிஹந்த் இந்தியப் பாதுகாப்புக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வரவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com