இது ஒரு தொடர்கதை...

கடந்த வாரம் இந்தியாவைப் பொருத்தவரை கானுயிர் ஆர்வலர்களுக்கு துக்க வாரம் என்றுதான் நாம் கூறவேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தில் யவத்மால் மாவட்டத்தில் அவ்னி என்கிற

கடந்த வாரம் இந்தியாவைப் பொருத்தவரை கானுயிர் ஆர்வலர்களுக்கு துக்க வாரம் என்றுதான் நாம் கூறவேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தில் யவத்மால் மாவட்டத்தில் அவ்னி என்கிற பெண் புலி கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது. இரண்டு குட்டிகளுக்குத் தாயான ஆறு வயது அவ்னியை சுட்டுக்கொல்ல மகாராஷ்டிர மாநில வனத்துறை அமைச்சர் சுதீர் முனகன்டீவார் அனுமதி அளித்தது சர்வதேச அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. கானுயிர் ஆர்வலர்கள் அமைச்சரின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அவ்னியின் மரணம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்பதிலிருந்து பிரச்னை எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
 அவ்னி கொல்லப்பட்டதற்காகக் கண்டனக் குரல்கள் ஒருபுறம் எழும்போது, யவத்மால் பகுதி மக்கள் பெரும் பீதியிலிருந்து தங்களது உயிர் காப்பாற்றப்பட்டதை எண்ணி அந்தச் சம்பவத்தைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். அந்தப் புலி இதுவரை 13 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யவத்மால் பகுதி மக்கள் அவ்னி குறித்த அச்சத்தில் வாழ்ந்து வந்தனர். புலி மட்டுமல்ல, எந்த ஒரு மிருகமும் மனித ரத்தத்தை ஒரு முறை சுவைத்துவிட்டால், பிறகு அது மனிதனை மட்டுமே தனது இரையாகத் தேடும் என்பதுதான் உண்மை. மனித ரத்தத்தில் காணப்படும் உப்பின் சுவைதான் அதற்குக் காரணம்.
 கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவ்னியின் கொலை வெறியாட்டம் அந்தப் பகுதியில் தொடர்ந்தது. கடந்த மூன்று மாதமாகவே மோப்ப நாய்கள், யானைகள், ஆளில்லா விமானங்கள் என்று அவ்னியை அடையாளம் காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மனித வெறி பிடித்த அவ்னியை மகாராஷ்டிர வனத்துறையால் கொல்ல முடியாததால், ஹைதராபாதிலிருந்து வேட்டைக்காரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள்தான் அவ்னியை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
 யவத்மாலில் மட்டுமல்ல, இதே போன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசத்திலும் நடந்தது. உத்தரப் பிரதேச மாநிலம் துத்வா என்கிற கிராமத்துக்குள் நுழைந்த புலி ஒன்றை ஊர் மக்கள் அடித்துக் கொன்றிருக்கிறார்கள். புலிகள் மட்டுமல்ல, ஏனைய பல விலங்குகளும் ஊருக்குள் நுழைவதும் , மனிதர்களைத் தாக்குவதும், மனிதர்களால் அவை கொல்லப்படுவதும் வழக்கமாகியிருக்கிறது. இந்தியாவில் எங்கெல்லாம் வனப்பகுதிகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே நடைபெறும் மோதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 "வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972', அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த பல உயிரினங்களுக்குப் பாதுகாப்பு நல்கியது. அதன் விளைவாக 2006-இல் 1,400-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2016-இல் 2,000-ஆக அதிகரித்தது. இதேபோல ஏனைய விலங்கினங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் அதன் விளைவாக மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான மோதல்களும் அதிகரித்திருக்கின்றன.
 தமிழகத்திலேயே கூட தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் யானைகள் கிராமங்களில் நுழைவதும், அளவுக்கதிகமாக மயில்களின் இனப்பெருக்கம் ஏற்பட்டிருப்பதால் பயிர் நாசம் ஏற்படுவதும், வழக்கமாகி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், கானுயிர்களின் உறைவிடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படுவதும், வளர்ச்சிப் பணிகளால் ஊடுருவப்படுவதும்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பரப்பளவு பல்லுயிர் பெருக்கத்துக்குப் போதுமானதாக இருக்கிறதா என்பது குறித்து முறையான ஆய்வுகள் செய்யப்படவில்லை. இந்திய வனப்பகுதி ஆய்வு, ரப்பர், தேயிலை உள்ளிட்ட தோட்டங்களையும் சேர்த்துப் பசுமையாக இருக்கும் இடங்களை எல்லாம் வனப்பகுதியாகக் குறிப்பிடுகிறது. ஆனால், உண்மையான வனப்பகுதி இதுபோன்ற தோட்டங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் வனவிலங்குகளுக்கும், மனிதக் குடியிருப்புகளுக்கும் இடையே அதிக இடைவெளி இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. வன விலங்குகள் சுதந்திரமாக வளைய வரவும், தங்களது இரையைத் தேடிக் கொள்ளவும், இடையூறில்லாமல் இருந்த நிலை மாறி, இப்போது தங்கள் வாழ்வாதாரத்துக்காக அவை காடுகளை விட்டு குடியிருப்புப் பகுதிகளில் நுழைய வேண்டிய நிர்பந்தத்தை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
 அஸ்ஸாமின் பல பகுதிகளில் காண்டாமிருகங்களும், பிகார், வடகிழக்கு இந்தியா, ஒடிஸா, மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் யானைகளும், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் சிறுத்தைகளும் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து விடுவதால், மக்கள் பீதியில் ஆழ்கிறார்கள். ஆனால், அவை குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதற்குத் தாங்கள்தான் காரணம் என்பதை யாருமே உணரவோ, ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லை என்பதுதான் பிரச்னையே.
 2022-இல் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துவிட்டு, புலிகளின் வாழ்வாதாரமான கானகங்களை ஆக்கிரமிப்பதும், அவற்றின் வழியாக சாலைகள் அமைப்பதும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதும் நமது திட்டமிடலில் காணப்படும் மிகப்பெரிய முரண். இந்த முரண் அகற்றப்படாத வரையில் வன விலங்குகள் கொல்லப்படுவதும், விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் தொடரவே செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com