பெயர் மாற்ற அரசியல்!

"தீபாவளியன்று ஓர் அறிவிப்பு காத்திருக்கிறது' என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தபோது எல்லோரும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்போவதாக அவர் அறிவிப்பார்

"தீபாவளியன்று ஓர் அறிவிப்பு காத்திருக்கிறது' என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தபோது எல்லோரும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்போவதாக அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்தனர். அயோத்தி இருக்கும் பைசாபாத் மாவட்டத்திற்கு அயோத்தி மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யும் அறிவிப்புதான் அவர் உத்தரப் பிரதேச மக்களுக்கு வழங்கிய தீபாவளிப் பரிசு.
 2017-இல் உத்தரப் பிரதேசத்தில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தவுடன் சர்வ நிச்சயமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக ஆதரவாளர்கள் கருதினார்கள். அடுத்த சில மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் வரும் நிலையில், தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு வராமல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிவிட முடியாது என்கிற தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருக்கும் பாஜக, இதுபோன்ற அறிவிப்புகளின் மூலம் தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாகத்தான் முதல்வரின் அறிவிப்பைப் பார்க்க முடிகிறது.
 ஆறு மாதங்களுக்கு முன்பு திடீரென்று ஒரு நாள், ரயில்வே சந்திப்பான முகல்சராயை பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தார். 1968-இல் ஜனசங்கத் தலைவரும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் குறிப்பிடத்தக்க முன்னோடிகளில் ஒருவருமான தீன்தயாள் உபாத்யாய, முகல்சராய் ரயில் நிலையத்தில்தான் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்த மர்மம் இன்று வரை அறியப்படவில்லை. தீன்தயாள் உபாத்யாய மரணமடைந்த இடம் என்பதை நினைவூட்டும் வகையில் முகல்சராய் ரயில்நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
 சில வாரங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச அமைச்சரவை அலாகாபாத் நகரை பிரயாக்ராஜ் என்று மாற்றும் ஆலோசனையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. 1575-இல் முகலாய சக்கரவர்த்தி அக்பர், "கடவுள்களின் இருப்பிடம்' என்கிற பொருளில், பிரயாக் என்று பரவலாக அழைக்கப்பட்ட கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் சங்கமிக்கும் இடத்திற்கு, இல்லாஹாபாத் என்று பெயர் சூட்டினார். உருது மொழி இல்லாஹாபாத் ஆங்கிலேயர்களால் அலாகாபாத் என்று மாற்றப்பட்டது. கடந்த நான்கு நூற்றாண்டுகளாக மக்கள் மத்தியில் பதிந்துவிட்ட அலாகாபாத் என்கிற பெயரை இப்போது பிரயாக்ராஜ் என்று மாற்றியிருப்பதன் மூலம், பெரிய களங்கம் அகற்றப்பட்டுவிட்டதாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அவரது அமைச்சரவை சகாக்களும் நினைக்கிறார்கள்.
 உத்தரப் பிரதேச முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் ஆமதாபாத் நகரை கர்ணாவதி என்று அழைக்கும் கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே புது தில்லியில் பல சாலைகளின் முகலாயர் காலத்துப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்துப் பிரமுகர்களின் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. இதுபோல பெயர் மாற்றம் செய்யப்படுவது இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய அளவிலும் புதிதொன்றுமல்ல. என்றாலும்கூட, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பெயர் மாற்ற முயற்சிகள் முகம் சுழிக்க வைக்கின்றன.
 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியர்களை அவமானப்படுத்திய, கொடுமைப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்த நகரங்களும், தெருக்களும், கட்டடங்களும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. அதற்குப் பின்னால் வரலாற்று ரீதியான பெரிய பின்னணியோ, சமூக அளவிலான எதிர்ப்போ, பாதிப்போ இருக்கவில்லை.
 அதேபோல, மதராஸ் சென்னையாகவும், பாம்பே மும்பையாகவும், கல்கத்தா கொல்கத்தாவாகவும், பெங்களூர் பெங்களூருவாகவும் மாற்றப்பட்டபோது, அந்தப் பெயர் மாற்றம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்குக் காரணம் அந்த நகரங்களின் இயல்பான பெயர்களை ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக மாற்றியமைத்தனர் என்பதால் அவற்றின் பழைமையான பெயர்கள் மீட்டெடுக்கப்பட்டன என்பதுதான்.
 கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் 25 நகரங்களும், கிராமங்களும் மத்திய அரசின் ஒப்புதலுடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஊர்களுக்குப் பெயர் மாற்றம் செய்வது என்பதன் பின்னணியில் சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய அமைச்சரவையும், பல துறைகளும் ஒப்புதல் வழங்க வேண்டும்.
 முதலில், ரயில்வே அமைச்சகமும், தபால் துறையும், இந்திய நில அளவைத் துறையும், தடையில்லாச் சான்றிதழ் வழங்கி அதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாற்றப்படும் பெயரில் வேறு எந்த ஊரும் ஆவணத்தில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கும். அதேபோல, மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
 பெயர் மாற்றத்தின் மூலம் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அவரைப் போலவே ஏனைய பல அரசியல்வாதிகளும் கருதுகிறார்கள். இவையெல்லாம் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப உதவுமே தவிர, அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வாகாது என்பதை அரசியல்வாதிகளும் வாக்காளர்களும் புரிந்துகொண்டால் நல்லது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com