வக்கிரத்தின் உச்சம்!

நீதிபதிகள் மக்களின் எதார்த்த

நீதிபதிகள் மக்களின் எதார்த்த நிலையை அறியாதவர்கள் என்கிற பரவலான கருத்துக்கு வலுசேர்த்திருக்கின்றன முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி ஓய்வு பெறுவதற்கு முன்னால், உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் பல்வேறு தீர்ப்புகள். அவை, இந்தியாவின் அடிப்படை பண்பாட்டுக் கூறுகளைத் தகர்த்தெறிவதாகவும், ஜாதி, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாத விதத்திலும் அமைந்திருக்கின்றன. 

பார்மயச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் மேலை நாட்டு நாகரிகத்தை வரித்துக்கொண்டு விட்டது என்கிற தவறான புரிதல் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளுக்கு இருக்கிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. ஐந்து நட்சத்திரக் கலாசாரத்தை வரித்த மேல்தட்டு வர்க்கத்தினரின் மனப்போக்குடன் பிரச்னைகள் அணுகப்படும்போது தீர்வுகள் இப்படித்தான் அமையும் போலிருக்கிறது. 

முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு அவர் பணி ஓய்வு பெறுவதற்கு முன்னால் ஒரே வாரத்தில் 10-க்கும் மேற்பட்ட முக்கியமான தீர்ப்புகளை வழங்கி வேதனையான சாதனை நிகழ்த்தியிருக்கிறது. ஆதார் திட்டம், அயோத்தி பாபர் மசூதி வழக்கு, குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவது, பெண்கள் கொலைகள், நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்குரைஞர்களாகப் பணியாற்றுவது, சபரிமலை கோயிலுக்கு எல்லா வயதுப் பெண்களுக்கும் அனுமதி, கள்ளக்காதலுக்கு அனுமதி என்று உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகள் வருங்கால இந்தியாவை கட்டமைப்பதற்கு பதிலாக சமுதாயக் கட்டமைப்பையே தகர்த்தெறியும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

சபரிமலை விவகாரம் என்பது நீதிமன்றம் தலையிடத் தேவையில்லாத பிரச்னை. பன்முகத் தன்மை கொண்ட இந்து மதத்தைப் பொருத்தவரை பல்வேறு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதைக் கேள்வி கேட்கவோ, மாற்றி அமைப்பதோ அதைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கையையும் கருத்தையும் பொருத்ததாக அமைய வேண்டுமே தவிர, அதில் அரசோ நீதிமன்றமோ தலையிட்டு விதிமுறைகளை வகுப்பது வரம்புமீறல், அநாவசியத் தலையீடு என்றுதான் கூற வேண்டும்.

41 நாள்கள் கடும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்கின்ற அடிப்படை எதார்த்தத்தைக்கூடப் புரிந்து கொள்ளாமல் உச்சநீதிமன்றம் எப்படி இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது என்று தெரியவில்லை. சபரிமலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீதிமன்றம் காவல்துறையைப் பொறுப்பாக்கப் போகிறதா, அரசைப் பொறுப்பாக்கப் போகிறதா அல்லது தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளை பொறுப்பாக்கப் போகிறதா என்பதை அந்தத் தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தால் நன்றாக இருக்கும். 

கடவுள் நம்பிக்கையில்லாதவர்களும், சில பெண்ணியவாதிகளும் மேலை நாட்டு தனி மனித சுதந்திரவாதத்தைப் பின்பற்றுபவர்களும் தேவையில்லாமல் நடத்தும் தலையீட்டுக்கெல்லாம் அங்கீகாரம் வழங்கி, பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் சடங்குகளை உச்சநீதிமன்றம் மறுதலிக்க முற்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உடன் கட்டை ஏறுதல், விதவை மறுமணம், குழந்தைத் திருமணம் ஆகியவற்றுடன் சபரிமலை கோயிலின் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதையும் இணைத்துப் பார்க்க முற்பட்டிருக்கும் பேதைமை இந்திய நீதிமன்ற வரலாற்றில் மிகப்பெரிய களங்கம். தீண்டாமையுடன் அதை ஒப்பிட்டிருப்பது புரிதல் இன்மையின் உச்சம்.

இரண்டு நாள்கள் முன்பு சென்னையில் புஷ்பலதா என்கிற பெண் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அந்த தற்கொலைக்குக் காரணம், அவரது கணவர் தனது கள்ள உறவைக் கடந்த வார உச்சநீதிமன்றத் தீர்ப்பு நியாயப்படுத்துவதாக கூறியதுதான். இதுபோல் இன்னும் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் நடைபெற இருக்கின்றன. 

இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 497-இன் படி, கடந்த 158 ஆண்டுகளாக தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட தகாத உறவு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு பெண்கள் சார்ந்ததல்ல என்பதுதான் வேடிக்கை. முறை தவறும் ஆண்களுக்கு மட்டுமே தண்டனை என்பது நியாயமா என்பதுதான் வழக்கு. உச்சநீதிமன்றம் முறைதவறும் இரு பாலருக்கும் தண்டனை என்று கூறி சமஉரிமையை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, தகாத உறவும், கள்ளக்காதலும் தனி உரிமை என்று வக்கிரத்தனமாக வழங்கியிருக்கும் நீதி அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்களின் பாலின சுதந்திரத்தை சட்டப்பிரிவு 497 பறிக்கிறது என்கிற உச்சநீதிமன்றத்தின் பார்வை, பெண்ணுரிமையே வெறும் பாலின சுதந்திரம்தான் என்று கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை வேதனையுடன் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை. இந்தியப் பெண்களையும்  பாரதப் பண்பாட்டையும் நமது வாழ்வியல் ஒழுக்கத்தையும் இதைவிட மோசமாகக் கேவலப்படுத்திவிட முடியாது.

முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மூத்த நீதிபதிகளே அவருக்கு எதிராகப் பொதுவெளியில் பேட்டி அளித்தனர். அவற்றில் இருந்தெல்லாம் அவர் தப்பிவிட்டார். ஆனால், பணி ஓய்வு பெறுவதற்கு முன்னால் அவர் தலைமையிலான அமர்வுகள் வழங்கியிருக்கும் தீர்ப்புகள் இந்திய நீதிமன்ற வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக, அவரது பெயருக்கு நிரந்தரக் களங்கமாக நிலைத்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com