வேறு வழியில்லை!

ஜப்பானிய நிதி மதிப்பீட்டு நிறுவனமான நோமுரா வெளியிட்டிருக்கும் அறிக்கை, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இந்த நிதியாண்டில்

ஜப்பானிய நிதி மதிப்பீட்டு நிறுவனமான நோமுரா வெளியிட்டிருக்கும் அறிக்கை, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இந்த நிதியாண்டில் நமது மொத்த ஜி.டி.பி.யில் 2.8% ஆக அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. அதிகரித்துவரும் கச்சா எண்ணெயின் விலை, குறைந்து வரும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, வெளியேறும் முதலீடுகள் இவையெல்லாம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2016-17 நிதியாண்டில் 14.4 பில்லியனாக (சுமார் ரூ.1.05 லட்சம் கோடி) இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2017-18-இல் 48.7 பில்லியனாக (சுமார் ரூ.3.58 லட்சம் கோடி) அதிகரித்தது. கடந்த 2017-18 நிதியாண்டில் மொத்த இந்திய ஜி.டி.பி.யில் 1.9%-ஆக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2018-19-இல் 2.8%-ஆக அதிகரித்திருப்பது இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கப் போகிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது நமது இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையேயுள்ள வேறுபாடு. இதோடு, இந்தியாவிலிருந்து வெளியேறும் அந்நியச் செலாவணியையும் சேர்க்கும்போது, அது இந்தியாவின் நிலுவைக் கடன் தொகை ஆகிறது. 
கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 14.32% அதிகரித்து 25.77 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.1.89 லட்சம் கோடி) ஈட்டித் தந்தது. அதே மாதத்தில் இந்தியாவின் இறக்குமதியின் மதிப்பு 43.79 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3.22 லட்சம் கோடி). கடந்த ஜூலை வரையிலான ஏற்றுமதி-இறக்குமதிக்கு இடையேயான இடைவெளி 18 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.32 லட்சம் கோடி). இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான இடைவெளி. இதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து பொருளாதாரத்தைத் தடுமாறவைக்கும் என்பதால்தான் பொருளாதார நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.
உலகில் மிக அதிகமாக டாலருக்கு நிகராக மதிப்புக் குறைந்து வரும் செலாவணியில் ஒன்றாக இந்திய ரூபாய் இருப்பது கவலையளிக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவதும், கச்சா எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மையும் இந்தியாவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகரிக்கும் நிலையில், அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. 
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வணிகவரிப் போர் எப்படி முடியப் போகிறது என்பதும், அமெரிக்காவில் அதிகரித்துவரும் வட்டி விகிதமும் முதலீட்டாளர்களை அச்சுறுத்தி இந்தியாவிலிருந்து வெளியேற்றக்கூடும். வளர்ந்து வரும் பல நாடுகளும் இதே பிரச்னையை எதிர்கொண்டாலும் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உயரும் நிலையில் இருக்கும் இந்தியாவுக்கு அந்நிய முதலீடுகள் வெளியேறுவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
புளூம்பெர்க் புள்ளிவிவரப்படி இந்தியாவிலிருந்து, சுமார் 80,000 கோடி அளவிலான அந்நிய முதலீடுகள் வெளியேறி இருக்கின்றன. நடப்பு நிதியாண்டில் கடந்த 10 மாதங்களாக அந்நிய முதலீடு குறைந்து வருகிறது. 2017-இல் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக அந்நிய நிறுவன முதலீடுகள் வந்தன என்றால், 2018 நிதியாண்டில் நிலைமை தலைகீழாக மாறி, இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட டாலர்கள் வெளியேறியிருக்கின்றன.
அடுத்த 10 மாதங்களுக்கான இறக்குமதிகளை ஈடு செய்யும் அளவுக்கு நம்மிடம் அந்நியச் செலாவணி இருப்பு இருக்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும், ரூபாயின் மதிப்புச் சரிவும், அந்நிய முதலீடுகள் வெளியேற்றமும் எப்படி இருக்கும் என்பது தெரியாத நிலையில் நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. டாலரின் மதிப்பு ரூ.65 லிருந்து ரூ.74-ஆக அதிகரித்தபோது கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு ரூ.25 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.83 லட்சம் கோடி) கரைந்து விட்டது. தங்களது நாணய மதிப்பைக் கட்டுக்குள் வைக்க, அந்நியச் செலாவணி இருப்பைப் பயன்படுத்தும் நாடுகள் மிகப்பெரிய நிதி நெருக்கடியிலும், இக்கட்டிலும் மாட்டிக் கொண்டதுதான் வரலாறு. 
அடுத்த ஆண்டு மக்களவைக்கான தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசுக்கு நாணய மதிப்பைப் பாதுகாக்கத் துணிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அவகாசம் இல்லை. அதனால் ஏற்படும் சில பின்னடைவுகளை இந்தக் குறுகிய காலகட்டத்தில் ஈடுகட்டிவிட முடியாது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியா தனது அந்நியச் செலாவணி கையிருப்பைக் கணிசமாக அதிகரித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே நிலைமையை எதிர்கொள்ள முடியும். அதற்கான ஏற்றுமதி சூழலும் இல்லாத நிலையில் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி. 
கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு முறை இந்திய அரசு தனது டாலர் கையிருப்பை அதிகரிக்க முயற்சித்திருக்கிறது. வாஜ்பாய் தலைமையிலான முதலாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் டாலர் பத்திரங்களின் மூலம் அந்நியச் செலாவணி இருப்பை அதிகரித்தது. அதன் பிறகு 2013-இல் அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான முதலீட்டுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் 34 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 2.50 லட்சம் கோடி) பெற்றது. இப்போதும் கூட அதுபோன்ற ஒரு முயற்சியைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. 
இரண்டு கோடிக்கும் அதிகமாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் இருக்கிறார்கள். உலகிலுள்ள மிக முக்கியமான பதவிகளை நம்மவர்கள் அலங்கரிக்கிறார்கள் என்று நாம் பெருமைபட்டுக் கொள்கிறோம். நாம் உணர்வுபூர்வமாக அவர்களின் சாதனைகளைப் போற்றுவதுபோல, அவர்களும் இந்தியாவின் இன்றைய பொருளாதாரச் சூழலில் நமக்கு உதவ முன்வந்தால், இப்போதைய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பிரச்னையை எதிர்கொண்டு விடலாம். வேறு வழி புலப்படவில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com