ஜனநாயகப் படுகொலை!

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவால் பிரதமர் பதவியிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டின் பிரதமராகத் தொடருகிறார்

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவால் பிரதமர் பதவியிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டின் பிரதமராகத் தொடருகிறார் என்று நாடாளுமன்றத் தலைவர் ஜெயசூர்யா அறிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் மற்றொரு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாப்பது தனது ஜனநாயகக் கடமை என்றும் வலியுறுத்தியிருக்கிறார். தான் பிரதமராகத் தொடருவதாக ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்திருக்கிறார். 
ஆனாலும்கூட, ராணுவம், காவல்துறை ஆகியவற்றின் மறைமுக ஆதரவு ராஜபட்சவுக்கு தொடர்ந்து இருந்து வந்திருப்பதால் அவர் அதிபர் சிறீசேனா அளித்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இப்போதைக்கு அதிகாரத்தை கைப்பற்றுவார் என்று தெரிகிறது. அவருக்கு சீன அதிபர் வெளிப்படையாக ஆதரவு அளித்திருக்கும் நிலையில், இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சில நாள்களுக்கு முன்னால் அதிபர் சிறீசேனா சீனாவுக்கு சென்றிருந்த பின்னணியில்தான் இந்த அரசியல் முடிவுகள் அவரால் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஊகிப்பது ஒன்றும் சிரமமல்ல.
கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இலங்கை அதிபர் அலுவலகத்திலிருந்து மூன்று அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்கு சிறீசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. அதிபர் மைத்ரி பால சிறீசேனா, மகிந்த ராஜபட்சவுக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அரசியல் சாசனப் பிரிவு 42(4)-இன் கீழ் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதாக அதிபர் சிறீசேனாவால் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. இவை மூன்றுமே ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து நடைபெற்றன. மிகவும் ரகசியமாகத் திட்டமிடப்பட்டு, நாடாளுமன்றத்தைக் கலந்தாலோசிக்காமல் பிரதமருக்கோ, அவரது அமைச்சரவை சகாக்களுக்கோ இது குறித்து எந்தவிதத் தகவலும் தராமல் நடத்தப்பட்ட அரசியல் சதி என்றுதான் இதைக் கூற வேண்டும்.
எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் ஆட்சி மாற்றம் இதுபோன்று நடைபெற்றதாக வரலாறு இல்லை. பிரதமராகப் பதவியிலிருக்கும் ஒருவர் அந்தப் பதவியிலிருந்து அகற்றப்படாமல் இன்னொரு பிரதமர் நியமிக்கப்படுவது இதுவரை கேட்டிராத நிகழ்வு. இப்போது இரண்டு பிரதமர்களும் அவர்களது கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தைப் கைப்பற்றவும், தங்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் களமிறங்கியிருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்று, அதிபர் சிறீசேனாவும் நாடாளுமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்தக் குழப்பம் முடிவுக்கு வரும். 
2015-இல் மேற்கொள்ளப்பட்ட 19-ஆவது அரசியல் சாசன திருத்தத்தின்படி, பிரதமராக இருக்கும் ஒருவர், இறந்தாலோ, பதவி விலகினாலோ, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியை இழந்தாலோ, அந்த அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை இழந்தாலோ மட்டும்தான் அவரைப் பதவியிலிருந்து அகற்ற முடியும். பிரதமரைத் தன்னிச்சைப்படி அகற்றும் அதிபரின் உரிமை 19-ஆவது திருத்தத்தின்படி அகற்றப்பட்டது. இப்போது உள்ள அரசியல் சாசனப்படி, பிரதமரை நியமிக்கும் அதிகாரம்தான் அதிபருக்கு உண்டே தவிர, மேலே குறிப்பிட்ட காரணிகள் இல்லாமல் அகற்றும் உரிமை இல்லை. 
அதிபர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பின்படி, சட்டப்பிரிவு 42(4) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி, யார் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியும் என்று அதிபர் கருதுகிறாரோ அவரை பிரதமராக நியமிக்கலாம். இந்த 42(4) பிரிவு என்பது, தேர்தல் முடிந்த பிறகு அல்லது நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பிரதமர் ஒருவர் இழந்த பிறகு, பிரதமரை நியமிப்பதற்காகத் தரப்பட்டிருக்கும் உரிமையே தவிர, நினைத்தபோது அதிபர் பயன்படுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்ட அதிகாரம் அல்ல என்பதை அதிபர் சிறீசேனா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம்தான் பிரதமர் விக்ரமசிங்க நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார். அதற்குப் பிறகு அவரது பெரும்பான்மையைக் கேள்விக்குறியாக்கும் எந்தவித நிகழ்வும் நடந்துவிடவில்லை. அதேபோல, சட்டப்பிரிவு 42(2) பிரதமரை நியமிக்கும் அதிகாரம் குறித்து கூறுகிறதே தவிர, பிரதமரை விலக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தையும், பதவியிலிருந்தும் விலக்கும் அதிகாரத்தையும் அதிபருக்கு 2015-க்கு முன்பு இப்பிரிவு வழங்கியிருந்தது. ஆனால், 19-ஆவது திருத்தம் அதிபர் ஒருவர் பிரதமரை எப்படி, என்னென்ன காரணங்களுக்காக அகற்றலாம் என்பதைத் தெளிவாக வரையறுத்திருக்கும் நிலையில், அதிபரின் செயல்பாடுகள் சட்டவிரோதமான, அரசியல் சாசனத்துக்குப் புறம்பான செயல் என்பதில் சந்தேகமே இல்லை. 
ராஜபட்சவுக்கு பெரும்பான்மை பலம் இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பிரதமராகி இருப்பார். நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதி வரை அதிபர் சிறீசேனா முடக்கி வைத்திருப்பது குதிரைப் பேரத்தின் மூலம் ராஜபட்சவுக்கு பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காகத்தான். 
ராஜபட்சவுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் நடந்திருக்கும் ஜனநாயகப் படுகொலைக்கு அங்கீகாரம் தர சீனா முற்பட்டிருக்கிறது. இந்தியா மெளனம் காக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com