தோல்வி பயத்தின் வெளிப்பாடு!

மின்னணு வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த சர்ச்சை தேவையில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் பழையபடி வாக்குச்சீட்டு முறை கொண்டுவர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகின்றன. உச்சநீதிமன்றத்தையும் அணுகியிருக்கின்றன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து சந்தேகங்களை எழுப்பும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர்கள் பெற்ற வெற்றிகளைக் குறித்தும் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆளுங்கட்சி வெற்றி பெறும்போதெல்லாம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் முறையாக செயல்படவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும் போதெல்லாம் அவை முறையாக செயல்படுகின்றன என்றும் கூறுவது சந்தர்ப்பவாதமல்லாமல் வேறென்ன?
குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும், இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் எதிர்க்கட்சிகள் இதேபோல ஐயப்பாடு எழுப்பின. அந்த இரண்டு மாநிலங்களிலுமே தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியைத் தேர்ந்தெடுத்து அங்கே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், வாக்காளர் சரிபார்ப்புச் சீட்டுக்கான இணைப்பு (வோட்டர் வெரிபையபிள் பேப்பர் ஆடிட்) பொருத்தப்பட்டது. குஜராத்தில் 182 வாக்குச்சாவடிகளில் இந்த வாக்காளர் சரிபார்ப்பு சீட்டு சேகரிக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளையும் வாக்காளர் சரிபார்ப்புச் சீட்டுகளையும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சரிபார்த்தபோது, அவை துல்லியமாக ஒத்துப்போயின. இதற்குப் பிறகும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து ஐயப்பாட்டை எழுப்புவது அநாவசியம்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவதும் கள்ள வாக்குகள் பதிவாவதும் பலருடைய வாக்குகளை குண்டர்களை வைத்துப் பதிவு செய்வதும் வழக்கமாக இருந்தன. இப்போது வாக்குப் 
பதிவில் முறைகேடுகள் கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. 
நம்மைவிட தொழில்நுட்பத்தில் முன்னேறிவிட்ட அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இன்னும் வாக்குச்சீட்டு முறைதான் பின்பற்றப்படுகிறது. சமீபத்தில் ஜெர்மனி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கைவிட்டு பழையது போல வாக்குச்சீட்டு முறைக்கு மாறியிருக்கிறது. அதையெல்லாம் காரணம்காட்டி, இந்தியாவும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று கோரிக்கை வைப்பது அர்த்தமில்லாதது. 
இந்திய அளவிலான மக்கள்தொகை அங்கெல்லாம் இல்லை என்பதும் நாம் உணர வேண்டும். மேலும், நமது இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் தரமும் நம்பகத்தன்மையும் பல தேர்தல்களில் உறுதிபடுத்தப்பட்டு நம்மைப் பின்பற்றி பல நாடுகள் இந்த முறைக்கு மாறியிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
குஜராத்தில் செய்ததுபோல தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் சரிபார்ப்பு சீட்டுக்கான இணைப்பு பொருத்தப்படு
வதில் தவறில்லை. அதேநேரத்தில், அத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் வாக்காளர் சரிபார்ப்புச் சீட்டு இணைக்க வேண்டும் என்றால், அதைவிட பழைய வாக்குச்சீட்டு முறைக்கே மாறிவிடலாம்.
பிகாரிலும் தில்லியிலும் பாஜக தோல்வியைத் தழுவியதும் குஜராத்தில் பின்னடைவை எதிர்கொண்டதும், கர்நாடகத்தில் பெரும்பான்மை பலம் பெற முடியாமல் போனதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் நடந்த தேர்தல்களில்தான். மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் இரண்டாவது முறை வெற்றி பெற்றதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம்தான். இப்படி இருக்கும் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு எதிராக இப்போது மீண்டும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. 
2019-இல் நடக்க இருக்கும் பொதுத்தேர்தல், பாஜக உள்ளிட்ட பல கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளுமேயானால், பல எதிர்க்கட்சிகள் அழிவை நோக்கி நகரக்கூடும். அந்த அச்சம்தான் எதிர்க்கட்சிகளை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு எதிராகப் போராடத் தூண்டியிருக்கிறது.
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ் மட்டுமல்லாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் 17 கட்சிகளும் ஒரு தனிநபர் அல்லது ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கட்சிகள். தொடர் தோல்விகள் ஏற்படும்போது இப்படிப்பட்ட கட்சிகளில் தலைமைக்கு எதிரான எதிர்ப்பு கிளம்புவதும், கட்சிகள் பிளவுபடுவதும் வழக்கம். அதனால்தான், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்
களுக்கு எதிராக இப்போதே எதிர்ப்புக் குரல் எழுப்பி அந்த கட்சிகள் "முன்ஜாமீன்' பெற முயற்சிக்கின்றன என்று தோன்றுகிறது. 
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுவாக்க முயற்சிக்க வேண்டுமே தவிர, அந்த முறையை கைவிடுவது புத்திசாலித்தனம் அல்ல. நமது தேர்தல்களின் நம்பகத்தன்மையை அரசியல் கட்சிகளே குலைக்க முற்பட்டால், இந்திய ஜனநாயகத்தின் மீதான மரியாதை சர்வதேச அளவில் மட்டுமல்ல, நமது வாக்காளர்கள் மத்தியிலும் குலைந்து விடும் ஆபத்தை அவர்கள் உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com