புயல் உருவாகிறது...!

குஜராத்தில் படேல் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கோரி ஹார்திக் படேல் மீண்டும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்.

குஜராத்தில் படேல் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கோரி ஹார்திக் படேல் மீண்டும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். அதேபோல, ஹரியாணா மாநிலத்தில் ஜாட்டுகளும் தங்களது இடஒதுக்கீட்டு போராட்டத்தை பெரிய அளவில் மீண்டும் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள். இவையெல்லாம் வியப்பை ஏற்படுத்தவில்லை. காரணம், இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இனம் புரியாத அதிருப்தி அலை வீசுவதுதான்.
தனியார் துறை வளர்ச்சியும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் பெருமிதத்தோடு பட்டியலிடப்படும் அதேவேளையில், இந்திய இளைஞர்கள் ஜாதி ரீதியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், அரசுப் பணிகளில் தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடுவதும் மிகப்பெரிய முரண். கடந்த மாதம், காலிப் பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே தேர்வு நடத்தியது. 90,000 பணியிடங்களுக்கு 2.4 கோடி இளைஞர்கள் விண்ணப்பித்துத் தேர்வு எழுதினார்கள். இதிலிருந்து எந்த அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் காணப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இது ஒன்றும் ஏதோ தனித்த சம்பவம் அல்ல. அரசுப் பணிகள் மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதன் வெளிப்பாடுதான் இது.
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய தேசிய அளவிலான இளைஞர்கள் குறித்த ஆய்வு ஒன்றின்படி, 2007 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் அரசுப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 62%-லிருந்து 65%-ஆக அதிகரித்திருக்கிறது. வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதாரத்தில் தனியார் துறை உண்மையாகவே வெற்றிகரமாக செயல்படும்போது இளைஞர்கள் மத்தியில் அரசுப் பணிகளின் மீதான நாட்டம் குறைவதுதான் இயல்பு. ஆனால், அதிக அளவில் இளைஞர்கள் அரசுப் பணியை நாடுவது, தனியார் துறை வெளியில் தெரிவதுபோல சிறப்பாக செயல்படவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
வேலையின்மை என்பது கடந்த 2011 முதலே தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 2011-இல் 3.8%-இருந்து 2012-இல் 4.7%-ஆகி, 2013-இல் 4.9%-ஆக இளைஞர்கள் மத்தியிலான வேலையின்மை அதிகரித்தது. 2014-இல் குறிப்பிடும்படியாக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட காலகட்டங்களில் இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். 2012-13-இல் 5.1%, 2013-14-இல் 6.9%, 2015-16-இல் 7.9% என்று ஜிடிபி வளர்ச்சி கண்டதே தவிர, அந்த வளர்ச்சி கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.
ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும் சரி, பாஜக இருந்தாலும் சரி பொருளாதார வளர்ச்சி போதுமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தவில்லை என்கிற உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை. வேலைவாய்ப்பை அளிக்காத எந்த ஒரு வளர்ச்சியும் பாதுகாப்பான, நிலையான வளர்ச்சியாக இருக்காது என்பதுதான் அடிப்படைப் பொருளாதாரம். ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்புத் தேடத் தொடங்கும்போது, இந்தியப் பொருளாதாரம் சுமார் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளைத்தான் உருவாக்குகிறது என்று தொழிலாளர் ஆணையமே ஒப்புக்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவிலும்கூட இந்தப் போக்கு காணப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, உலக அளவில் வேலைவாய்ப்பின்மை 5.8%-ஆக அதிகரித்திருக்கிறது. உலகளாவிய அளவில் 2018-இல் வேலைவாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை 20 கோடிக்கும் அதிகம். உற்பத்தித் துறையின் முக்கியத்துவம் குறைந்து, சேவைத் துறையும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தாத பல துறைகளும் அதிக கவனம் பெறுவதால் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய சமூகப் பிரச்னையாக மாறக்கூடும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்தியாவில் ஹார்திக் படேல் போன்ற படித்த இளைஞர்கள் இடஒதுக்கீடு கோரிப் போராட்டத்தில் இறங்குவதன் பின்னணியில் இன்னொரு உண்மையும் காணப்படுகிறது. படிக்காதவர்களும், ஏழைகளும் நீண்ட நாள்கள் வேலையில்லாமல் இருக்க முடியாது என்பதால், வேலை கிடைப்பதற்குக் காத்திருக்காமல் கிடைத்த வேலையை மேற்கொள்கின்றனர். சொந்தமாகத் தொழில் புரியவோ, தினக்கூலியாகப் பணியாற்றவோ தயங்குவதில்லை. மிக அதிக அளவில் கல்விச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் கல்வி உறுதிப்படுத்தப்படும் நிலையில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாவது நடுத்தர பிரிவைச் சார்ந்தவர்களின் குழந்தைகள்தான்.
பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளைப் படித்துவிட்டுத் தங்களது படிப்புக்கு ஏற்ற வாய்ப்புகளை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கிறார்கள். இதற்காக நீண்ட நாள் வேலையில்லாமல் இருக்கவும் தயங்குவதில்லை. அதனால்தான், ஹார்திக் படேல் போன்றவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும்போது அதில் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள். போராட்டத்தின் முடிவிலாவது தங்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் அரசின் மூலம் கிடைக்கக்கூடும் என்கிற நம்பிக்கைதான் அவர்களை காத்திருக்கத் தூண்டுகிறது.
ஜிடிபி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சிக்கான வழிகள் குறித்து ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும், பொருளாதார நிபுணர்களும், சமூகவியலாளர்களும் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்கள் மத்தியில் அவநம்பிக்கையும் அதிருப்தியும் அதிகரிப்பது ஆபத்தில் முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com