எச்சரிக்கிறது லான்செட்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், இந்திய பொது சுகாதாரக் கழகமும், மருத்துவ நிபுணர்கள், முக்கியமான மருத்துவ நிறுவனங்கள்,


இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், இந்திய பொது சுகாதாரக் கழகமும், மருத்துவ நிபுணர்கள், முக்கியமான மருத்துவ நிறுவனங்கள், மாநில மக்கள் நல்வாழ்வு அமைச்சகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு, பல அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறது. லான்செட்' என்கிற மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் இந்த முடிவு, இந்தியா எந்த அளவுக்கு மருத்துவ சிகிச்சையில் பின்தங்கி இருக்கிறது என்பதையும், பல்வேறு நோய்களின் பாதிப்பு எந்த அளவுக்கு தீவிரமடைந்திருக்கிறது என்பதையும் வெளிச்சம் போடுகிறது. 
இதய நோய்களும், பக்கவாதத் தாக்குதல்களும் கடந்த 25 ஆண்டுகளில் எல்லா மாநிலங்களிலும் 50% அதிகரித்திருக்கின்றன. இதய நோய்களில் முதலிடத்தில் பஞ்சாப்பும், அதைத்தொடர்ந்து தமிழ்நாடும் காணப்படுகின்றன என்றால், சர்க்கரை நோயைப் பொருத்தவரை தமிழகம் முதலிடத்திலும் பஞ்சாப் இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றன. பக்கவாதத் தாக்குதல்களைப் பொருத்தவரை மேற்கு வங்கம் முதலிடத்திலும் ஒடிஸா அடுத்த இடத்திலும் காணப்படுகின்றன. புற்றுநோய் தாக்குதலில் கேரளம் முதலிடத்திலும், அதைத்தொடர்ந்து அஸ்ஸாமும் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
1990-லிருந்து 2016 வரையிலான 26 ஆண்டுகளில் 2.6 கோடியாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 6.5 கோடியாக அதிகரித்திருக்கிறது. நுரையீரல் தொடர்பான சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை 2.8 கோடியிலிருந்து 5.5 கோடியாக அதிகரித்திருக்கிறது. 
இந்தியாவில் அதிகமான மரணத்திற்குக் காரணம் புற்று நோய் அல்ல, இதய நோய்கள்தான் என்று தெரியவந்திருக்கிறது. 2016-இல் மட்டும் 2.8 கோடி பேர் இதய நோயால் இறந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களது உணவு முறையும், அதிக ரத்த அழுத்தமும்தான் என்று குறிப்பிடுகிறது அந்த அறிக்கை. இவை இரண்டுக்குமே காரணம், மாறிவிட்ட வாழ்க்கை முறையும், அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளும்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
1990-இல் 5.5 லட்சமாக இருந்த புற்று நோய் மரணம், கடந்த கால் நூற்றாண்டில் 10.6 லட்சமாக அதிகரித்திருக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தையும் மரணமடைந்தவர்களின் வயதையும் வைத்துப் பார்க்கும்போது இதய நோய், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் அளவுக்கு புற்று நோய் அதிகரித்துவிடவில்லை என்பது ஆறுதல். புற்று நோயைப் பொருத்தவரை அதிக அளவிலான பாதிப்பு குடல் பகுதியில் காணப்படுவதாகவும், ஈரல் புற்று நோய் அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. 
புற்று நோயைப் பொருத்தவரை, கர்ப்பப் பை புற்று நோய் மட்டும்தான் கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்திருக்கிறது. கண்டறியப்பட்டிருக்கும் 28 விதமான புற்று நோய்களில் ஈரல் புற்று நோய்தான் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் குடல் புற்று நோய் 206% அதிகரித்திருக்கிறது. மார்பகப் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், உதடு, நாக்கு, வாய் புற்று நோய் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன. புற்று நோய் மரணங்கள் அதிக அளவில் காணப்படுவதற்கு ஆரம்ப காலத்திலேயே கண்டறியாமை, சிகிச்சை பெறாமை, அதற்கான வசதியின்மை ஆகியவைதான் காரணம் என்று அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
இந்தியாவில் மிகவும் கவலையளிக்கும் நோயாக காட்சி அளிப்பது சர்க்கரை நோய்தான் என்று தெரிகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளம், தில்லி ஆகிய பகுதிகள் மிக அதிகமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு இரண்டு காரணிகள் குறிப்பிடப்படுகின்றன. முதலாவது, கார்போஹைட்ரேட் சார்ந்த உணவுப் பழக்கம். இரண்டாவது காரணம், உணவுப் பழக்கத்திலும் ஓய்வெடுப்பதிலும் ஒழுங்கின்மையும், போதுமான உடற்பயிற்சி இல்லாமையும். சர்க்கரை நோய் குறித்தான விழிப்புணர்வு பள்ளிக்கூடங்களிலிருந்தே தொடங்கப்பட்டால்தான் வருங்காலத்தில் ஆரோக்கியமான தலைமுறையை நாம் காண முடியும் என்கிறது அந்த அறிக்கை.
15 முதல் 35 வரையிலான வயதினர் மத்தியில் மரணத்திற்கான மிக முக்கியமான காரணம் தற்கொலை என்கிறது லான்செட்' மருத்துவ இதழ். உலகளாவிய அளவில் பெண்கள் மத்தியிலான தற்கொலையில் 34% இந்தியாவில்தான் நிகழ்கின்றன. உலக சராசரியில் பெண்களின் தற்கொலை இந்தியாவில் இரண்டு மடங்கு. 
மகளிர் தற்கொலையில் முதலிடத்தில் தமிழகமும், கடைசி இடத்தில் நாகாலாந்தும் காணப்படுகின்றன. 
2016-இல் மட்டும் இந்தியாவில் 2,30,314 தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. 1990-இல் இறந்தவர்களில் 25.3% மகளிரும், 18.7% ஆண்களும் தற்கொலையால் இறந்தார்கள் என்றால், 2016-இல் 36.6% பெண்களும், 24.3% ஆண்களும் தற்கொலையால் இறந்தார்கள் என்கிறது அந்த அறிக்கை. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் முதியோர் மத்தியிலான தற்கொலையின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. 
இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கும் தகவல்களும் புள்ளிவிவரங்களும் கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமரால் அறிவிக்கப்பட்டிருக்கும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா அபியான்' (பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்) செயல்படுத்தப்படுவதற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதுபோன்ற ஆய்வுகள் தேசிய அளவில் நடத்தப்படுவது போல மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு அந்த ஆய்வுகளின் அடிப்படையில் அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டால், நோய்களின் பாதிப்பால் ஏற்படும் மரணம் பெருமளவில் குறைக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com