நீதி என்பது இழப்பீடு மட்டுமல்ல!

இந்தியாவில் ஒருவர் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் பொய் வழக்கை ஜோடித்து கைது செய்தால், அவர் தன்னை நிரபராதி என்று நிரூபித்துத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முற்றிலுமாகத் துடைத்தெறிய

இந்தியாவில் ஒருவர் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் பொய் வழக்கை ஜோடித்து கைது செய்தால், அவர் தன்னை நிரபராதி என்று நிரூபித்துத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முற்றிலுமாகத் துடைத்தெறிய ஏறத்தாழ கால் நூற்றாண்டு பிடிக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது "இஸ்ரோ' விஞ்ஞானிகள் மீதான ஒற்றர் குற்றச்சாட்டு வழக்கு. இந்த வழக்கு குறித்து "தினமணி'யில் கடந்த 21.7.18 அன்று "இதற்கு என்னதான் முடிவு' என்கிற தலையங்கம் தீட்டப்பட்டிருந்ததை இங்கே நினைவுகூர்கிறோம்.
 1994-ஆம்ஆண்டில் கேரள காவல்துறையினரால் இஸ்ரோ விஞ்ஞானிகளான நம்பி நாராயணனும், சசிகுமாரும் இந்திய வின்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத் துறையும், உச்சநீதிமன்றமும் அத்தனை குற்றங்களும் ஆதாரமற்றவை என்று நிராகரித்தன. ஆனால், அரசுக்கோ காவல்துறைக்கோ தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் தலைசிறந்த இந்திய விஞ்ஞானிகள் மீது வீண் பழி சுமத்தி, அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவித உத்தரவும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
 இப்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் தளராத மன உறுதியும், தொடர் முயற்சியும் உச்சநீதிமன்றத்தைத் தெளிவான தீர்ப்பை வழங்க வைத்திருக்கின்றன. கேரள அரசு, அடுத்த எட்டு வாரங்களுக்குள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவர் மீது பொய் வழக்கு தொடுத்த கேரள காவல்துறையினர் மீது விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையில் 3 நபர்கள் கொண்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
 கடந்த 24 ஆண்டு கால போராட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், அவமானத்தையும் நினைத்து மனம் வெதும்பி விஞ்ஞானி நம்பி நாராயணன் தற்கொலை செய்து கொள்வது என்பது வரை மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் அவரது குழந்தைகள் அவருக்கு அளித்த மன வலிமைதான் இன்று கேரள காவல்துறையின் தவறுக்கு உச்சநீதிமன்றத்தில் அவரால் நீதி பெற முடிந்திருக்கிறது.
 "நான் நிரபராதி என்பதை என்னால் மட்டும்தான் போராடி நிரூபிக்க முடியும். அப்படி நிரூபிக்காமல் நான் இறந்துவிட்டால், எந்தத் தவறும் செய்யாத என்னுடைய குழந்தைகள் தாங்கள் ஓர் ஒற்றனின் குழந்தைகள் என்கிற அவப்பெயருடன் வாழ்ந்து மடிய வேண்டும் என்பதுதான் என்னை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் போராடி இப்போது நிரபராதி என்று நிரூபிக்க வைத்திருக்கிறது' என்கிற விஞ்ஞானி நம்பி நாராயணனின் கூற்று கண்ணீரை வரவழைக்கிறது.
 இந்த வழக்கின் பின்னணியில் பல கேள்விகள் இன்னும் விடை காணப்படாமல் தொடர்கின்றன. இதன் பின்னணியில் காவல்துறையினரின் சுயநலம் அடங்கியிருக்கிறது; அரசியல்வாதிகளின் தலையீடு இருந்திருக்கிறது; அந்நிய சக்திகளின் சதி காணப்படுகிறது. விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது என்றாலும்கூட, மேலே குறிப்பிட்ட மூன்று மிக முக்கியமான பின்னணிக்கான காரணிகள் அம்பலப்படுத்தப்படவில்லை.
 1994 அக்டோபர் 20-ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள விடுதி ஒன்றிலிருந்து மாலத்தீவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை தவறுதலாகக் கைது செய்ததை மறைப்பதற்கு, காவல்துறை ஆய்வாளர் விஜயன் செய்த சதிதான் இஸ்ரோ விஞ்ஞானிகளை ஒற்றர்களாக சித்தரித்த வழக்கு. இந்த வழக்கை சாதகமாகப் பயன்படுத்தி அன்றை இளைஞர் காங்கிரஸ் தலைவர் செரியன் பிலிப்பும், ஏ.கே. அந்தோணி கோஷ்டியைச் சேர்ந்த உம்மன் சாண்டியும் அன்றைய கேரள முதல்வர் கே. கருணாகரனை பதவி விலகச் செய்தனர்.
 எல்லாவற்றுக்கும் மேலாக கிரயோஜனிக் இயந்திரத்தின் மூலம் விண்வெளிக் கலங்களை இயக்கும் ஆராய்ச்சியில் நம்பி நாராயணயனின் தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெறுவதை அந்நிய சக்திகள் தடுத்து நிறுத்தின.
 உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் நீதிபதி ஜெயின் தலைமையிலான குழு மேலே குறிப்பிட்ட மூன்று சதிகளையும் வெளிக்கொணர்ந்தாக வேண்டும். இந்த வழக்கின் பின்னணியிலுள்ள காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் சதித் திட்டம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அந்நிய நாட்டுத் தலையீடு குறித்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
 விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுத்ததுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிப்பது மட்டும் போதாது, அந்த அநீதிக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாவிட்டால், இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட வழக்குகளுக்கெல்லாம் இழப்பீடு தீர்வாகிவிடும். நீதி என்பது இழப்பீடு மட்டுமல்ல, தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதும்கூட.
 விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், அது காவல்துறையினரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையில் அமைக்கப்பட இருக்கும் குழு தனது விசாரணையை நடத்தி முடிப்பதற்கான காலவரம்பை நிர்ணயித்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மீதான ஒற்றர் வழக்கில் எல்லா உண்மைகளும் வெளிக்கொணரப்பட்டு, தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டால்தான் விஞ்ஞானி நம்பி நாராயணனின் கால் நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு அர்த்தம் இருக்கும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com