பரிசீலிக்கலாம்!

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவது போல நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஏன் ஒளிபரப்பக்கூடாது என்கிற கேள்வி

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவது போல நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஏன் ஒளிபரப்பக்கூடாது என்கிற கேள்வி இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காத்திருக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையில் அமைந்த, நீதிபதிகள் ஏ.எம் கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தப் பிரச்னை குறித்த பொதுநல வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் இதற்கான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்போது, வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என்பது மட்டுமல்லாமல், வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. 
ஏற்கெனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளி பரப்பப்படுகின்றன. அதைப் பின்பற்றி இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. 
ஒருசில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணொளி (விடியோ) எடுத்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், உச்சநீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளைப் படம் எடுப்பது வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்குத்தானே தவிர, பதிவு செய்வதற்கு அல்ல என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். 
மத்திய அரசு, உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்தத் தனது கருத்தை, தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அதன்படி, பரிசோதனை முறையில் முதலில் அரசியல் சாசனப் பிரச்னைகள் தொடர்பான சில வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்து பார்க்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது. அதுபோன்ற வழக்குகள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் அரசியல் சாசன வழக்குகளாக இருக்கலாம் என்று கே.கே. வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. அதில் தலையாய பிரச்னை வழக்குரைஞர்கள் சிலரின் வரம்பு மீறல்களையும், நீதிபதிகளால் நிராகரிக்கப்படும் அல்லது தடைசெய்யப்படும் கருத்துகளையும் தணிக்கை செய்ய முடியாமல் இருப்பது. இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டாமல் நேரடி ஒளிபரப்பு என்பது சாத்தியமில்லை. 
நாடாளுமன்றத்தில், மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் தனித்தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. இரண்டு அவைகளின் தலைவர்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிய பகுதிகளை அந்தத் தொலைக்காட்சி சேனல்களால் தணிக்கை செய்ய முடிகிறது. அதேபோல, உச்சநீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்றங்களுக்கும் தனித்தனியாக தொலைக்காட்சி சேனல்களை உருவாக்கி நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. 
இதற்கு ஒரு மாற்று யோசனை முன்வைக்கப்படுகிறது. நேரடி ஒளிபரப்பு 70 நொடிகள் தாமதப்படுத்தப்பட்டால், அந்த இடைவெளியைப் பயன்படுத்தி நீதிபதிகள் தணிக்கை செய்ய முடியும். உணர்வுபூர்வமான பிரச்னைகள், தனிமனித தன்மறைப்பு நிலை (பிரைவஸி), தேசியப் பாதுகாப்பு ஆகியவையோ அல்லது ஒரு வழக்குரைஞர் தவறாக நடந்து கொண்டாலோ, அந்தப் பகுதிகளின் பின்னணி ஒலியை முடக்கிவிடும் வசதி நீதிபதிகளுக்கு இருந்தால் 70 நொடி இடைவெளி தணிக்கைக்குப் போதுமானது. 
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்கள் இப்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று இட நெருக்கடி. நேரடி ஒளிபரப்பு சாத்தியப்பட்டால், வழக்குரைஞர்களும் வழக்குத் தொடுத்தவர்களும், வழக்குரைஞர்களின் அறையிலிருந்தோ, தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும் அறைகளிலிருந்தோ நீதிமன்ற விவாதங்களைப் பார்க்க முடியும். இதற்காக அவர்களுக்குத் தனியாக ஓர் இடத்தை ஒதுக்குவது பிரச்னையாக இருக்காது. 
அதேபோல, எல்லா வசதிகளுடன் ஊடகத்தினருக்கும் தனியாக அறை ஒதுக்கப்பட்டுவிட்டால், நீதிமன்ற விவாத அறைகளில் இப்போது காணப்படும் நெரிசலைக் குறைக்க முடியும். அதேபோல, விவாதங்களை எழுத்து மூலம் பதிவு செய்வதற்கும், ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீள்பார்வைக்கு உட்படுத்தவும் தனியாக ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
நேரடியாக ஒளிபரப்புவதில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது என்று கருதுவதாகவும், பரீட்சார்த்த முறையில் இதை செயல்படுத்துவதில் தங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். காலப்போக்கில் இதில் காணப்படும் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில், மக்களின் உணர்வுகளைத் தூண்டுகின்ற, தேசியப் பாதுகாப்புக்கு எதிரான வழக்குகளும், விவாதங்களும் நேரடி ஒளிபரப்புக்கு உட்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதில் நீதிபதிகள் ஒத்த கருத்துக் கொண்டிருக்கின்றனர். திருமணப் பிரச்னைகள், சிறார் குற்றப் பிரச்னைகள் ஆகியவற்றை நேரடியாக ஒளிபரப்பக்கூடாது என்று மத்திய அரசு கருத்துத் தெரிவித்திருக்கிறது. 
எல்லா வழக்குகளையும் நேரடியாக ஒளிபரப்புவது தேவையற்றது. வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நேரடி ஒளிபரப்பு என்பது மட்டுமே தீர்வாக இருக்காது. இதற்காக நாடாளுமன்றத்தைப் போல நீதித்துறையும் தொலைக்காட்சி சேனல்களை நடத்த முற்படுவது அநாவசியம். வேண்டுமானால், மிக முக்கியமான அரசியல் சாசன வழக்குகளை அரசு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுவது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுவெளியில் விவாதத்தை மேம்படுத்தவும் பயன்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com