முறிந்தது நல்லது!

இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர்


இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தின் மை உலர்வதற்குள் அந்த முயற்சி தடம் புரண்டிருக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் மூன்று காவல்துறையினரை பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் கொடுரமாகக் கொலை செய்திருக்கும் நிலையில், பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் அங்கீகரிக்கும் வண்ணம் பாகிஸ்தான் 20 அஞ்சல் தலைகளை வெளியிட்டிருக்கும் சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை என்று இந்திய அரசு முடிவெடுத்ததில் எந்தவிதத் தவறும் காண முடியாது.
இந்தியா அமைதியை எற்படுத்த ஒரு அடி முன்வைத்தால் பாகிஸ்தான் இரண்டு அடிகள் எடுத்த வைக்க தயாராக இருக்கிறது' என்கிற பிரதமர் இம்ரான் கானின் கூற்று வெறும் சம்பிரதாய அரசியல் அறிவிப்பே தவிர, உளப்பூர்வமான கருத்தல்ல என்பதை அடுத்தடுத்த அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. ஒருவேளை ராணுவத்தின் தலையீடும் அறிவுறுத்தலும்கூடப் பிரதமர் இம்ரான் கானின் நிலை மாற்றத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
ஒருபுறம் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், இன்னொருபுறம் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா ராணுவ நாள் நிகழ்ச்சியில், எல்லையில் சிந்தப்படும் ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழி வாங்காமல் விடமாட்டோம்' என்று வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார். இப்போது அவரது வழியில் பிரதமர் இம்ரான் கானும் பாகிஸ்தானின் முதலாவது பாதுகாப்பு அரண் அந்த நாட்டின் ஒற்றர் பிரிவான ஐ.எஸ்.ஐ.தான் என்று தெரிவித்திருக்கிறார்.
எந்த ஒரு நாடும் தனது முதல் அரணாகவும் உலகத் தொடர்பாகவும் வெளிவிவகாரத்துறையையும், அடுத்தாற்போல ராணுவத்தையும்தான் கருதுவது வழக்கம். ஒற்றர் பிரிவை வெளிவிவகாரக் கொள்கையாக அறிவித்திருக்கும் முதல் நாடு பாகிஸ்தானாகத்தான் இருக்கும். இந்த அறிவிப்பு இந்திய அரசை நிமிர்ந்து உட்கார வைத்து பாகிஸ்தானுடனான தொடர்பை மீள்பார்வை பார்க்க வைத்திருப்பதில் வியப்பில்லை.
டிசம்பர் 2015 பதான் கோட் விமானப் படைத்தளத் தாக்குதலைத் தொடர்ந்து முறிந்துபோன பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, இன்னொருபுறம் எல்லை கடந்த தீவிரவாதம் குறித்த தனது கொள்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிலையில், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது சாத்தியமாகாது. பதான் கோட், உரி உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீதும், அதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பாகிஸ்தானின் பேச்சுவார்த்தை அழைப்பு போலித்தனமானது மட்டுமல்ல, ஒருவிதத்தில் இந்தியாவை ஏளனம் செய்வதாகவும் இருக்கிறது. 
இந்தியப் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வாணிக்குப் பாகிஸ்தான் அரசு அஞ்சல் தலை வெளியிட்டிருப்பதிலிருந்தே இந்தியாவை எந்த அளவுக்கு பாகிஸ்தான் ஏளனம் செய்யவும், அவமதிக்கவும் துணிகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இம்ரான் கான் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டது முதலே காஷ்மீரில் ஊடுருவல், பயங்கரவாதத் தாக்குதல்கள், பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆள் சேர்த்தல் ஆகியவை கடுமையாக அதிகரித்திருப்பதை சர்வதேச உளவுத்துறைகள் தெரிவிக்கின்றன. 
இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துமே பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிரான போலித்தனமான செயல்பாட்டை நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. சர்வதேச நிதியத்துக்குத் தர வேண்டிய கடன் தொகையை கட்ட முடியாமல் பாகிஸ்தான் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அந்த நாட்டுக்கு அளித்து வந்த மிகப்பெரிய நிதி உதவியை ரத்து செய்திருக்கிறது. ஜெய் ஈ முகம்மது, லஸ்கர் ஏ தொய்பா உள்ளிட்ட பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கே அச்சுறுத்தலாக இருப்பதைக் காரணம் காட்டித்தான் டிரம்ப் நிர்வாகம் தனது நிதியுதவியை ரத்து செய்திருக்கிறது. 
உடனடியாகப் பதவி விலகாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்புப் படையினருக்கு, பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல் முஜாஹிதீன் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது. நரேந்திர குமார் என்கிற எல்லைப் பாதுகாப்புக் காவலர் ஜம்முவில் பாகிஸ்தானால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தப் பின்னணியில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருப்பதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதே கூட தவறு.
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெற இருக்கும் ஐ.நா. சபை கூட்டத்தின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்தும் மஹ்முத் குரேஷியும் சந்திக்க இருந்தனர். அது ரத்து செய்யப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், ஒருபுறம் பேச்சுவார்த்தையும் மறுபுறம் பயங்கரவாதத் தாக்குதல்களும் என்று இரட்டை வேடம் போடும் இஸ்லாமாபாத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. 
பேச்சுவார்த்தையை இந்தியா முறித்துவிட்டது என்று பாகிஸ்தான் பழி சுமத்துவது போலித்தனம். முதலில் இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையா இல்லை பயங்கரவாதத் தாக்குதலா என்பதில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். அதுவரை பேச்சுவார்த்தை நடத்திப் பயனில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com